ஜெர்மனியில் பல்லாயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதில் உப்புக்கரைசல் செலுத்தினாரா நர்ஸ்?

பட மூலாதாரம், AFP
ஜெர்மனியில் பல்லாயிரம் நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதில் ஒரு செவிலியர் உப்புக்கரைசலை செலுத்தினாரா என்று விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், 8 ஆயிரம் முதியோர்களை மீண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
வடக்கு கடற்கரை அருகே உள்ள ஃப்ரீஸ்லாந்து என்ற இடத்தில் உள்ள தடுப்பூசி மையம் ஒன்றில் இந்த செவிலியரின் செயல்பாடு குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் 6 பேருக்கு மட்டுமே இப்படி உப்புக்கரைசல் ஊசி போடப்பட்டதாக நம்பப்பட்டது.
இப்படி தடுப்பூசி மருந்துக்குப் பதில் உப்புக்கரைசல் செலுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். கொரோனா பெருந்தொற்றில் இந்த வயதுப் பிரிவினர் அதிக இடர்ப்பாடு உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
8,557 பேரை மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும், 3,600 பேருக்கு அதற்கான அப்பாயின்ட்மெண்ட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்றும், என்.டி.ஆர். என்ற வட்டார ஒளிபரப்பு நிறுவனம் கூறியுள்ளது.
ஒரு தடுப்பூசி மருந்துக்குப்பி கைதவறி விழுந்து உடைந்துவிட்டதாகவும், அதை மறைக்க 6 பேருக்கு உப்புக்கரைசல் செலுத்திவிட்டதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் அந்த செவிலியர் ஒப்புக்கொண்டார். ஆனால், போலீஸ் விசாரணையில் இன்னும் நிறைய பேருக்கு தடுப்பூசி மருந்துக்குப் பதில் உப்புக்கரைசல் செலுத்தியிருப்பது அம்பலமானது.

பட மூலாதாரம், Getty Images
செவிலியரின் செயல்பாட்டுக்கு அரசியல் நோக்கம் இருக்கக்கூடும் என்பதை போலீசார் மறுக்கவில்லை. ஆனால், செவிலியரின் வழக்குரைஞர் இதை மறுத்தார். அதோடு இவ்வளவு பேருக்கு மருந்துக்குப் பதில் உப்புக்கரைசல் செலுத்தப்பட்டது என்ற கூற்றையும் அவர் ஏற்கவில்லை.
மேலும் அதிக சாட்சிகளை போலீசார் விசாரணை செய்கிறார்கள். ஆனால், இன்னும் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை போலீசார் இறுதி செய்யவில்லை.
ஜெர்மனியில் பல தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. கோவிட் பரவல் தொடர்பான முடிவுகளையும், அதிகாரபூர்வ தரவுகளையும் தீவிர வலதுசாரிகள் உள்ளிட்டோர் நிராகரிக்கின்றனர்.
பிற செய்திகள்:
- திருடிய பணத்தில் 2,000 கோடி ரூபாயை திருப்பி தந்த கிரிப்டோகரன்சி ஹேக்கர் - ஏன்?
- பருவநிலை மாற்ற ஆபத்து: மீத்தேன் வாயுவுக்கு கடிவாளம் போட்டால் கொஞ்சம் வாய்தா வாங்கலாம்
- எஸ்.பி. வேலுமணி வீட்டில் ரெய்டு: வேலூரா புழலா? அதிமுக கூட்டத்தில் காரசார விவாதம்
- ஆப்கானிஸ்தான் அரசு - தாலிபன் போர் 20 ஆண்டுகளாக நீடிப்பது ஏன்? - விரிவான பின்னணி
- டோக்யோ ஒலிம்பிக்: நிர்வாணமாக குளிக்குமாறு இந்தியர்களிடம் கூறப்பட்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












