கிரிப்டோ கரன்சி ஹேக்கருக்கு ஜாக்பாட்: திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்ததற்காக பல கோடி ரூபாய் பரிசு - தண்டனையில் இருந்தும் விலக்கு

கிரிப்டோ

பட மூலாதாரம், Reuters

சுமார் 4.5 ஆயிரம் கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சி பணத்தைத் திருடிவிட்டு அதில் சுமார் பாதியை திருப்பிக் கொடுத்த ஹேக்கருக்கு சுமார் 3.5 கோடி ரூபாய் பணம் வெகுமதியாக வழங்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யாமல் இருக்கும் வகையிலான உத்தரவாதமும் அளிக்கப்பட்டிருக்கிறது.

பணத்தைப் பறிகொடுத்த பாலி நெட்வொர்க் என்ற நிறுவனம் இந்தச் சலுகையை அறிவித்திருக்கிறது. மொத்தப் பணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்ற உறுதிக்குப் பிறகு இத்தகைய முடிவை பாலி நெட்வொர்க் எடுத்திருக்கிறது.

ஆனால் திருட்டு தொடர்பாக தண்டனை அளிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் எஃப்பிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கிரிப்டோ கரன்சி திருடப்பட்டது குறித்து தொடர்புடைய ஹேக்கரிடம் உதவி கோரி பாலி நெட்வொர்க் நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பொதுவெளியில் கோரிக்கை விடுத்தது.

ஆன்லைனில் இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய திருட்டாக இது கருதப்படுகிறது. தங்களது அமைப்பில் மிகப்பெரிய பாதிப்பை அந்த ஹேக்கர் ஏற்படுத்திவிட்டதாக பாலி நெட்வொர்க் கூறியது.

ஏற்கெனவே பெரும்பகுதி பணத்தை ஹேக்கர் திருப்பியளித்து விட்டார். தனக்கு வெகுமதியைப் பெறுவதில் நாட்டமில்லை எனவும் அவர் அறிவித்துவிட்டார்.

பாலி நெட்வொர்க் என்பது பிளாக் செயின் தளங்களுள் ஒன்று. கிரிப்டோ கரன்சி வைத்திருப்போர் அவற்றைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதற்காக இந்தத் தளங்கள் பயன்படுகின்றனர்.

பாலி நெட்வொர்க்கில் ஹேக்கிங் கொள்ளை நடந்த சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த நிறுவனத்தை கேலி செய்யும் வகையிலான குறிப்புகளை அவர்களது இணையதளத்திலேயே வெளியிட்டார்.

பின்னர் தனக்குப் பணத்தில் ஆர்வமில்லை எனவும் அதைத் திருப்பியளிப்பதாகவும் உறுதியளித்தார்.

கிரிப்டோ

பட மூலாதாரம், Getty Images

ஹேக்கரின் வசம் உள்ள மீதமுள்ள கிரிப்டோ கரன்சி பணமும் ஹேக்கர் மற்றும் நிறுவனத்தால் கையாளும் வகையிலான புதிய டிஜிட்டல் வாலட்டுக்கு பரிமாற்றம் செய்யப்படும் என பாலி நெட்வொர்க் அறிவித்துள்ளது.

திருப்பிச் செலுத்தப்படும் நடைமுறை முடிவடைவதற்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் பாலிநெட்வொர்க், இன்னும் ஹேக்கருடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட கிரிப்டோ நாணங்களில் ஒரு பகுதி பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சிறிது நேரத்துக்குள்ளாகவே முடக்கப்பட்டு விட்டது. அதனால் அதை ஹேக்கரும் பயன்படுத்த முடியாது.

"கொள்ளையடிக்கப்பட்ட நாணயங்களில் சுமார் 220 கோடி ரூபாய் அளவுக்கான டோக்கன்களை இன்னும் ஹேக்கர் வைத்திருக்கிறார். ஆனால் அவை முடக்கப்பட்டுவிட்டன" என்று லண்டனை தளமாகக் கொண்ட பிளாக்செயின் ஆய்வு நிறுவனமான எலிப்டிக்கின் இணை நிறுவனர் டாம் ராபின்சன் பிபிசியிடம் கூறினார்.

"சில ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள வேறு பல டோக்கன்கள் ஹேக்கரின் வசம் இருப்பதை பிளாக் செயின் குறிப்புகளில் காணலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் இவையெல்லாம் கொள்ளையடிக்கப்பட்ட கிரிப்டோ கரன்சியின் ஒரு பகுதியா அல்லது பணத்தைத் திருப்பிக் கொடுத்ததற்காக மக்கள் அவருக்கு வழங்கிய நன்கொடையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வேடிக்கைக்காகவும், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பாலி நெட்வொர்க்கின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அறிவுறுத்துவதற்காகவும் இதைச் செய்திருப்பதாக மூன்று பக்கங்களைக் கொண்ட தனது கேள்வி பதில் விளக்கத்தில் ஹேக்கர் குறிப்பிட்டுள்ளார்.

தண்டனையில் இருந்து விலக்கு கிடைக்குமா?

ஹேக்கரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட பாலி நெட்வொர்க் நிறுவனம் அவரை "மிஸ்டர் ஒயிட் ஹாட்" என்று குறிப்பிட்டது.

ஒயிட் ஹேட் அல்லது வெள்ளை தொப்பி ஹேக்கர்கள் என்பவர்கள் நெறிமுறை கொண்ட பாதுகாப்பு ஆய்வாளர்கள். அமைப்பில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிய அவர்கள் நிறுவனங்களுக்கு உதவுவார்கள்.

"உங்கள் நடவடிக்கை வெள்ளை தொப்பி ஹேக்கரின் நடத்தை என்று நாங்கள் நம்புகிறோம், நாங்கள் உங்களுக்கு 500,000 டாலர்கள் வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம்" என்று ஹேக்கருக்கு உறுதியளித்திருப்பதை பாலி நெட்வொர்க் நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

"இந்தக் கொள்ளைக்கு உங்களைப் பொறுப்பாக்க மாட்டோம்" என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் பாலி நெட்வொர்க் நிறுவனத்தின் இத்தகைய சலுகை சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றம்புரியும் ஹேக்கர்கள் தங்களது செயலை நியாயப் படுத்துவதற்கான முன்னுதாரணமாக இது அமைந்துவிடும் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

"இந்தக் கொள்ளையை வெள்ளைத் தொப்பி ஹேக்கிங் என்று கூறுவது எமாற்றமளிக்கிறது" என வெள்ளை தொப்பி ஹேக்கரும் மான்செஸ்டர் பல்கலைக்கழக விரிவுரையாளருமான கேத்தி பாக்ஸ்டன்-ஃபியர் கூறுகிறார்.

கிரிப்டோ

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க பாதுகாப்புத் துறை முதல் வெரிசோன் மீடியா வரையிலான நிறுவனங்களில் 30 க்கும் மேற்பட்ட குறைபாடுகளைக் கண்டறிந்தவர் கேத்தி

"குற்றச்சாட்டில் இருந்து விலக்களிக்க அதிகாரம் இல்லை"

"வெள்ளை தொப்பி ஹேக்கிங் என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் கொண்டிருப்பது. சில அம்சங்களில் அது தலையிடாது. குழுவுடன் பணிபுரிதல், கண்டறிந்தவற்றை அறிக்கைகளாக எழுதுதல் ஆகிய எல்லைக்குள் இது இருக்க வேண்டும். அதைத் தாண்டி மேலே சென்றுவிடக் கூடாது." என்று கேத்தி கூறினார்.

"யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதே என்பதுதான் எங்களது அணுகுமுறை" என்கிறார் அவர்.

முன்னாள் எஃப்.பி.ஐ அதிகாரியான சார்லி ஸ்டீலும் ஹேக்கருக்கு பாலி நெட்வொர்க் தரும் சலுகை குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்.

"தனியார் நிறுவனங்களுக்கு கிரிமினல் வழக்குகளில் இருந்து விலக்கு தருவதாக உறுதியளிக்க அதிகாரம் இல்லை" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"இந்தக் கொள்ளையில் ஒரு ஹேக்கர் 600 மில்லியன் டாலரை 'வேடிக்கைக்காக' திருடிவிட்டு பின்னர் அதில் பெரும்பகுதியை திருப்பி அனுப்பியிருக்கிறார். இவையெல்லாம் அவர் அனாமதேயமாக இருந்து கொண்டே நடத்தியிருக்கிறார். இது கிரிப்டோ-நாணயங்களால் ஏற்படும் பல்வேறு அபாயங்கள் குறித்த கவலையை குறைக்க வாய்ப்பில்லை" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கிரிப்டோகரன்சி என்பது என்ன?

கிரிப்டோகரன்சி என்பது என்பது டிஜிட்டல் பணம். ரூபாய்த் தாள்களைப் போலவோ, உலோக நாணயங்களைப் போலவோ அவற்றை நமது பாக்கெட்டுகளில் வைத்துக்கொள்ள முடியாது. அது இருப்பது இன்டெர்நெட்டில். வர்த்தகம் செய்வதும் இன்டர்நெட்டில்தான்.

கிரிப்டோகரன்சி எந்த நாட்டு அரசாலோ, ஒழுங்குமுறை அமைப்பாலோ கிரிப்டோகரன்சிகள் வெளியிடப்படவில்லை.

ஆன்லைன் மோசடிகள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்ட கிரிப்டோகரன்சிகள் பற்றிய தனது அச்சத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.

முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டில் கிரிப்டோகரன்சிகளையும் அதைப் பயன்படுத்தும் அமைப்புகளையும் தடை செய்தது.

கிரிப்டோ

பட மூலாதாரம், Getty Images

ஆனால் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் தடைக்கு எதிராக உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் "இது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும் சட்டத்தை உருவாக்கவும்" உத்தரவிட்டது.

பின்பு இந்தியாவுக்கென தனியாக கிரிப்டோகரன்சியை வெளியிடலாமா என்பது குறித்தும், அது எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியது ரிசர்வ் வங்கி. அரசின் முடிவில் இது முக்கியமானது. இந்திய நாணய முறையின் எதிர்காலம் பற்றியது.

இந்தியாவில் எவ்வளவு கிரிப்டோகரன்சிகள் வாங்கப்பட்டிருக்கின்றன என தரவுகள் இல்லாவிட்டாலும், பல லட்சக் கணக்கானோர் டிஜிட்டல் பணத்தில் முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :