இன்கா நாகரிகம்: ஆன்மிகம், ஆவியுலகம், நம்பிக்கை துரோகத்தை அனுபவித்த அரசரின் வரலாறு தெரியுமா?

இன்கா நாகரிகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மச்சு பிச்சு நகர தொடக்கத்தில் அமைந்துள்ள இன்கா காலத்தில் வாழ்ந்த மன்னர் பச்சாகுட்டியின் உருவச்சிலை

(உலக நாடுகள், தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், பத்தாம் கட்டுரை இது. இந்த கட்டுரையில் சில படங்கள் மற்றும் தகவல்கள் உங்கள் மனதுக்கு சங்கடத்தை தரலாம் என எச்சரிக்கிறோம்.)

'இன்கான் பேரரசு' அல்லது இன்கா பேரரசு ,கொலம்பியாவிற்கு முந்தைய அமெரிக்காவின் மிகப்பெரிய பேரரசாக அறியப்படுகிறது. அந்த பேரரசில் வாழ்ந்த மக்கள் கடைப்பிடித்த வாழ்வியல் முறைகள் இன்கா நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது.

1532 இல் ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் வெற்றி பெற்றபோது, ​​பசிஃபிக் கடற்கரை மற்றும் ஆண்டியன் மலைப்பகுதிகளில் நவீனகால எக்வடோரின் வடக்கு எல்லையில் இருந்து மத்திய சிலியில் உள்ள மவுலே நதி வரை இன்காக்கள் சாம்ராஜ்ஜியம் இருந்தது.

இந்த இன்காக்கள், 12 ஆம் நூற்றாண்டில் குஸ்கோவில் (பெரு) தங்கள் தலைநகரை நிறுவினர். அவர்கள் 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தங்கள் வெற்றிகளைத் தொடங்கியதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

100 ஆண்டுகளுக்குள் சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் மக்கள்தொகை கொண்ட ஆண்டிஸ் மலைப் பகுதியின் கட்டுப்பாட்டை இவர்கள் தங்கள் வசமாக்கினர். மற்ற ஆண்டியன் கலாசாரங்களுடன் இன்கா நாகரிகத்தை தொடர்புபடுத்தும் பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை. அது பெரும்பாலும் வாய்வழியாகவே அறியப்பட்டு வந்துள்ளது.

ஸ்பானிஷ் வெற்றிக்குப் பிறகு அவர்களால் எழுதப்பட்ட பதிவுகளிலிருந்தே இன்கா பாரம்பரியத்தின் தகவல்கள் ஏராளமாக உலகுக்கு கிடைத்தன.

அதன்படி குஸ்கோவிற்கு தெற்கே 15 மைல் (24 கிமீ) தொலைவில் உள்ள பகாரி-தம்பு கிராமத்தில் இன்கா பழங்குடியினர் தோன்றினர்.

இன்கா வம்சத்தின் நிறுவனரான மாங்கோ கபாக் தமது தலைமையில் பழங்குடியினர் குஸ்கோவில் குடியேற வழியேற்படுத்தினார். அதன் பிறகு அந்த இடமே அவர்களின் தலைநகரானது.

14ஆம் நூற்றாண்டில் நான்காவது பேரரசர் மேட்டா கபாக்கின்கீழ் இன்கா விரிவடையத் தொடங்கியது, அண்டை கிராமங்களைத் தாக்கி சூறையாடியது மற்றும் அநேகமாக ஒருவித மதிப்பை அவர்களுக்கு பெற்றுத்தந்தது.

அடுத்த பேரரசரான கபாக் யுபன்குயியின் கீழ், இன்கா முதலில் குஸ்கோ பள்ளத்தாக்கிற்கு அப்பால், எட்டாவது விராகோகா இன்காவின் கீழ் அதன் செல்வாக்கை விரிவுபடுத்தியது. தங்களால் கைப்பற்றப்பட்ட குடியிருப்புகளுக்கு காவல் தடுப்பு அரண்களை நிறுவினர்.

இன்கா வம்ச வரலாற்றின் ஆரம்பகால வருடம் 1438 ஆக இருந்திருக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் விரகோச்சா இன்காவின் மகன் பச்சாகுட்டி இன்கா யுபன்குயி தனது சகோதரர் இன்கா உர்கானிடமிருந்து அரியணையை கைப்பற்றினார்.

பச்சகுட்டி இன்கா யுபன்குயியின் கீழ் (1438-71) இன்கா சாம்ராஜ்ஜியம், தெற்கே டிடிகாகா பள்ளத்தாக்கு மற்றும் வடக்கிலிருந்து இன்றைய குயிட்டோ வரை நிலப்பரப்பைக் கைப்பற்றியது. இதன் மூலம் சக்திவாய்ந்தவர்களாக அறியப்பட்ட சன்கா, கெச்சுவா மற்றும் சிமோ மக்களை அவர்கள் கட்டுப்படுத்தினர்.

சாம்ராஜ்ஜியத்தை அழித்த வாரிசு மோதல்கள்

இன்கா வரலாறு

பட மூலாதாரம், Getty Images

வெற்றிபெற்ற இடத்தில் மக்களை கட்டாய மீள்குடியேற்றம் செய்ய இன்கா கடைப்பிடித்த கொள்கை, அங்கு புரட்சி ஏற்படுவதை சிக்கலானதாக்கியது. அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட அது உதவியது.

உள்ளூர் ஆளுநர்களிடம் தொழிலாளர் வரியை வசூலிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்த வரி வருவாய்தான் இன்கா ஆளுகையின் அடிப்படை வருவாய் ஆதாரமானது. ராணுவத்தில் பணியாற்றுவது, பொதுப்பணி, வேளாண் பணி போன்றவை மூலம் இந்த வரி செலுத்தப்பட்டது.

டோபா இன்கா யுபன்குயியின் (1471-93) பேரரசு ஆளுகையின்போது, மத்திய சிலியில் அதன் தெற்கு எல்லையை இன்காக்கள் அடைந்திருந்தனர்,

தெற்கு பெருவியன் கடோர பகுதியில் எதிர்ப்பு காணப்பட்டாலும், அது நாளடைவில் நசுக்கப்பட்டது.

அந்த பேரரசு மறைவுக்குப் பிறகு வாரிசு போராட்டம் நடைபெற்றது. அதில் ஹுவாய்னா கபாக் (1493-1525) வெற்றியடைந்தார்.

இன்கா வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெருவின் கஸ்ரோவில் உள்ள ஒலென்டேடம்போ பகுதியில் காணப்படும் நீருற்று. இன்கா காலத்தில் வாழ்ந்த இளவரசியின் குளியல் பகுதியாக இது அறியப்படுகிறது.

ஹுவாய்னா கபாக் தமது பேரரசின் வடக்கு எல்லையை அங்காஸ்மயோ நதிவரை விரிவுபடுத்தினார்.

அந்த காலகட்டத்தில், லா பிளாட்டா என்ற இடத்தில் இருந்து ஸ்பானிஷ் வீரர்கள் மூலம் கிழக்கே இருந்த பழங்குடிகளிடம் இருந்து ஹுவாய்னா கபாக் ஆளுகை பகுதியில் பெருந்தொற்று பரவியதாக நம்பப்படுகிறது. அந்த பெருந்தொற்றுக்கு ஹுவாய்னா கபாக் இரையானார்.

அவரது மரணம் மற்றொரு வாரிசு மோதலுக்கு வித்திட்டது. 1535இல் ஸ்பானிஷ் வீரர்கள் பெருவுக்கு வருகை தரும்வரை இந்த வாரிசு சண்டை ஓயவில்லை. கடைசியில் அந்த சாம்ராஜ்ஜியம் வீழ்ந்தது.

ஆளுகை திறன்கள்

இன்கா வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எழுத்துமுறை இல்லாத இன்கா கலாசாரத்தில் வடிவங்களே மொழிகளாக இருந்தன.

இன்கா சமூகம் பல கட்ட ஆளுகை வாழ்வியல் முறைகளை கொண்டிருந்தது. பேரரசர் எதேச்சதிகாரம் மிக்க பிரபுத்துவத்தின் உதவியுடன் ஆட்சி புரிந்தார். கடுமையான மற்றும் அடக்குமுறை அதிகாரத்தை அவர் பயன்படுத்தினார்.

இன்கா தொழில்நுட்பம் மற்றும் கட்டடக்கலை மிகவும் மேம்பட்டிருந்தது. அவை சொந்த முயற்சியில் இல்லாமல் பிற கலைகளின் தழுவலாக இருந்தன. எனினும் பிரமிப்பூட்டும் அவர்களின் நீர்ப்பாசன அமைப்புகள், அரண்மனைகள், கோயில்கள் மற்றும் கோட்டைகள் இன்னும் ஆண்டிஸ் முழுவதும் காணப்படுகின்றன.

இன்காக்களின் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது, சோளம் (மக்காச்சோளம்), வெள்ளை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு, தக்காளி, வேர்க்கடலை (நிலக்கடலை), மிளகாய், மிளகு, கோகோ, மரவள்ளி மற்றும் பருத்தியை அவர்கள் சாகுபடி செய்தனர்.

இன்கா வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெருவின் நாஸ்கா பகுதியில் காணப்பட்ட இன்கா காலத்து சுழலும் படிக்கட்டு வகை நிலத்தடி நீர் சேமிப்பு முறை

கினி பன்றிகள், வாத்துகள், லாமாக்கள், அல்பாக்காக்கள் மற்றும் நாய்களை அவர்கள் வளர்த்தனர். இவர்களின் ஆடை கம்பளி மற்றும் பருத்தியால் தயாரிக்கப்பட்டன.

இவர்கள் வாழ்ந்த வீடுகள் கல் அல்லது அடோப் மண்ணால் கட்டப்பட்டன. நடைமுறையில் ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த உணவு மற்றும் ஆடைகளை உற்பத்தி செய்யும் ஒரு விவசாயியாகவே இன்கா காலத்தில் வாழ்ந்து ஒரு புதிய நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கினான்.

இன்கா வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தோட்டக்கலைத் திறனை பிரதிபலிக்கும் படிக்கட்டு வேளாண் முறை

உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவிய பேரரசு

இன்கா பேரரசு முழுவதும் விரிவான வகையில் சாலைகள் அமைக்கப்பட்டன. இப்படி கடலோர பகுதிகளில் இவர்கள் கட்டியெழுப்பிய சாலைகளின் தூரம் 3,600 கி.மீ. இந்த சாலைகளுக்கு இடையிடையே பல நகரங்களை இணைக்கும் சாலைகளும் போடப்பட்டன. சக்கர வாகனங்களோ, இரும்போ இல்லாத காலத்தில் இந்த சாலைகள் போடப்பட்டிருக்கின்றன.

பல இடங்களில் மலைகளைக் குடைந்து சுரங்கப்பாதைகளை அமைத்தனர். கொடிகள் தாங்கிப்பிடித்த தொங்கு பாலங்கள் இவர்கள் காலத்திலேயே அறிமுகமாகின. ஆனால், அவற்றை ராணுவத்தினரும் அரசாங்க தரப்பினருமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.

இன்கா வரலாறு

பட மூலாதாரம், DOUG MCMAINS

மாரத்தான் தொடர் ஓட்டம் போல, நகரங்களுக்கு இடையே காத்திருக்கும் சேவகர்கள் மூலம் அரசாங்க தகவல்கள் பரிமாறப்பட்டன. இப்படி நாளொன்றுக்கு 240 கி.மீ தூரத்துக்கு இவர்கள் ஆட்சிக்காலத்தில் செய்திகள் பகிரப்பட்டன. பின்னாளில் இன்கா பேரரசை ஸ்பானிஷ் கைப்பற்றவும் இதே சேவை பெரிதும் உதவியது.

இன்காக்கள் தங்கள் கட்டடங்களை பல்வேறு வகையான கல் - சுண்ணாம்பு, பாசால்ட், டியோரைட் மற்றும் மூல செங்கற்களிலிருந்து கட்டினர். பொதுமக்களின் வீடுகளில் லேசான கூரைகளும், கொத்து நாணல்களும் இருந்தன; வீடுகளில் அடுப்புகள் எதுவும் இல்லை, மற்றும் அடுப்பிலிருந்து புகை மூடிய கூரை வழியாக வெளியே வந்தது. கோயில்களும் அரண்மனைகளும் குறிப்பாக கவனமாக கட்டப்பட்டன.

இன்கா வரலாறு

பட மூலாதாரம், DOUG MCMAINS

இன்காக்களின் வரலாறு பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வருபவரான ஜோஸ் பரெய்ரோ, "தண்ணீரால் உலகின் பல நாடுகளின் சாலைகள் அடித்துச் செல்லப்படுவதை நாம் பார்க்கிறோம். ஆனால், இன்றளவும் இன்கா மக்கள் போட்ட சாலைகள் நிலையாக இருக்கின்றன," என்று கூறினார்.

அவர்கள் எழுப்பியிருந்த மணல் கட்டமைப்புகள் கூட பூமி அதிர்ச்சியை தாங்கக் கூடியவையாக இருந்திருக்கின்றன என்கிறார் அவர்,

இன்கா வரலாறு

பட மூலாதாரம், AP/NMAI

படக்குறிப்பு, இன்கா சாலைகள் நம்ப முடியாத வகையில் நிலைத்து நிற்கக் கூடியவை என்கிறார் டாக்டர் ஜோஸ் பரேய்ரோ.

சுவர்கள் கட்டப்பட்ட கற்கள் ஒன்றோடு ஒன்று மிகவும் இறுக்கமாக பொருத்தப்பட்டிருந்தன, இன்காக்கள் ஏராளமான சரிவு கோபுரங்களுடன் மலை சரிவுகளில் கோட்டைகளை கட்டினர். அவற்றில் மிகவும் பிரபலமானது கஸ்கோ நகரத்திற்கு மேலே 18 மீ உயரமுள்ள மூன்று வரிசை சுவர்களைக் கொண்டிருந்தது.

அதிர்ச்சி தரும் சடங்குகள்

இன்கா மதம் அனிமிசம் (ஆவியுலக கோட்பாடு), பேடிஸிசம் (உயிரற்ற பொருட்களை நேசித்து வணங்துவது) மற்றும் இயற்கை கடவுள்களின் வழிபாட்டு அம்சங்களை உள்ளடக்கியது.

சூரிய கடவுளான இன்டீ, படைப்பு மற்றும் கலாசார கடவுளான விவிரகோச்சா மற்றும் மழை கடவுளான அப்பு இல்லபு ஆகியோரை இன்காக்கள் வணங்கினர்.

மன்னர் இறந்து விட்டால் அவரது உடல் பதப்படுத்தப்பட்டு அந்த கோயிலிலேயே புதைக்கப்படுவது வழக்கம். அந்த சடலத்துடன் அவர் பயன்படுத்திய உடைமைகள், பொருட்களும் சேர்த்து புதைக்கப்படும். இதில் அதிர்ச்சி தரும் தகவலாக, மன்னர் வாழ்ந்த காலத்தில் அவரது பணியாளர்களும் கொல்லப்பட்டு அந்த கல்லறையிலேயே புதைக்கப்படுவர்.

2013இல் மீட்கப்பட்ட இன்கா 'மம்மி'

பெருவில் 1,200 ஆண்டுகள் பழமையான கல்லறை ஒன்று பல மதிப்புவாய்ந்த பொருட்களுடனும், பெண்களின் பதனிடப்பட்ட எலும்புக்கூடுகளுடன் தொல்லியலாளர்களால் மீட்கப்பட்டுள்ளன.

தலைநகர் லீமாவுக்கு வடக்கே 280 கிமீ தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல்லறை இன்கா நாகரிகம் பரவத் தொடங்குவதற்கு முன்னர் அண்டீஸ் பகுதியை ஆண்டு வந்த வாரி ராஜ்ஜியத்தை சேர்ந்தது என நம்பப்படுகிறது.

மறுபிறவியில் நம்பிக்கை கொண்டிருந்த இன்காக்கள், இறப்பு என்பது பல சிக்கல்களை கொண்ட அடுத்த உலகத்திற்கு ஒரு பாதை என்று நம்பினர். நரபலியே இறைவனை குளிர்விக்கும் என்பதில் அவர்கள் உறுதியாக காணப்பட்டனர்.

இன்கா சடங்குகள் தெய்வீகம் சார்ந்ததாக நம்பப்பட்டது. நரபலி மற்றும் விலங்குகள் பலி கொடுக்கப்படுவது அவற்றில் முக்கியமானவை. சிலை வழிபாட்டுக்கு எதிரான ஸ்பானிஷ் படையினர், இவர்களின் வழிபாட்டுத்தலங்களை அழித்தனர்.

இன்கா நாகரிக மக்களின் படைப்புகள்

இன்கா வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இன்கா காலத்தில் போற்றிப் பாதுகாக்கப்பட்ட புனிதக் குகை. ஆவியுலக தொடர்பு மற்றும் சடங்குகளுக்கு இது பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.

இன்கா நாகரிகத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பங்கள் இன்காவுக்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட படைப்புகளின் தழுவலாக இருந்தன. அவை இன்கா சகாப்தத்தில் உருவாக்கப்படவில்லை.

கஸ்கோ வகை என்று அழைக்கப்படும் மண் பாண்டம் ஒரு நீண்ட கழுத்து ஜாடி, ஒரு ஸ்டாண்ட் கொண்ட கிண்ணம், மிருக வடிவ கைப்பிடியுடன் ஒரு கிண்ணம், ஒரு தட்டு போன்றவை இன்காவுக்கு அதன் வடிவத்திலும் குறிப்பிட்ட கூறுகளைக் கொண்டுள்ளதைக் காட்டுகின்றன.

இவர்களின் மதச் சடங்குகளிலும் போர்களை சித்தரிக்கும் கல்வெட்டுகளிலும் எண்ணெய் சார்ந்த வண்ணப் பூச்சு காணப்படுகிறது. அஞ்சலி செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் துணி பருத்தியால் நன்கு நெய்யப்பட்டன.

இன்காவின் சந்ததியினர் ஆண்டிஸின் இன்றைய கெச்சுவா மொழி பேசும் விவசாயிகள். பெருவின் மக்கள் தொகையில் இவர்கள் 45 சதவிகிதம் வரை இருக்கலாம். விவசாயம் மற்றும் மேய்ச்சல் வேலையை எளிய பாரம்பரிய தொழில்நுட்பத்துடன் இவர்கள் செய்கிறார்கள்.

இன்கா வரலாறு

பட மூலாதாரம், Getty Images

ஆரம்பகாலத்தில் தனி மத அடையாளத்துடன் இருந்தபோதும், ஸ்பானிஷ் ஆக்கிரமிப்புக்குப் பிறகு பலரும் ரோமன் கத்தோலிக்க மதத்தை தழுவினர். அது ஆவிகள் வழிபாட்டை பின்பற்றும் பேகன் வரிசைக்கு உட்படுத்தப்பட்டதாக இருந்தது.

இன்கா கலாசார ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அவர்களின் பேரரசு பெரும்பாலும் மதத்தின் காரணமாகவே அழிந்தது.

முதலாவதாக, ஆட்சியாளர் தனது மகன்களிடமிருந்து ஒரு வாரிசைத் தேர்ந்தெடுத்தார். இது ஹுவாஸ்கர் மற்றும் அதாஹுல்பா சகோதரர்களுக்கிடையில் ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்தது, இந்த மோதல், பிசாரோ தலைமையிலான ஸ்பானிஷ் ஆக்கிரமிப்புக்கு முன்பு நாட்டை கணிசமாக பலவீனப்படுத்தியது.

இரண்டாவதாக, இன்காக்களின் புராணக்கதைகளில் அவர்களை புதியவர்களான அந்நியர்கள் எதிர்காலத்தில் ஆட்சி செய்வார்கள், அவர்கள் பேரரசை வென்று அதன் ஒரே ஆட்சியாளர்களாக மாறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கதை, ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் மீதான பயத்தை இன்காக்களுக்கு ஏற்படுத்தியது.

இன்கா மன்னர்கள் யார்? காலம்(கி.பி)

இன்கா வழித்தோன்றலின் தொடக்கத்தில் வாழ்ந்த மான்கோ கபாக், எப்போது ஆட்சி புரிந்தார் என்ற தகவல்கள் வரலாற்றுக்குறிப்புகளில் இல்லை. ஆனால், அவர் வழி வந்த சின்சி-ரோகா (1100-1140), லோக்யூ-யூபான்க்யுயி (1140-1195), மாய்டா-கபாக் (1195-1250) ஆகியோர் இருந்தனர்.

இதன் பிறகு கபாக்-யூபான்க்யுயி1250 முதல் எப்போதுவரை ஆட்சி புரிந்தார் என்பதற்கும் குறிப்புகள் இல்லை. அவரது வழித்தோன்றல்களாக ரோகா-2, யாகுவார் இருந்துள்ளனர் என அறிய முடிந்தாலும், அவர்கள் ஆட்சி புரிந்த தரவுகள் கண்டறியப்படவில்லை.

இவர்களுக்குப் பிறகு வீரகோசன் 1400வரையும், அதன் பிறகு பச்சக்குட்டக் (1400-1448), யூபான்க்யுயி (1400-1448). டுபாக்-யூபான்க்யுயி (1448-1482). ஹுஅய்னெ-கபாக் (1482-1528), சுசி-ஹுஅச்கார் (1529-1533), அதாஹுல்பா (1529-1533) ஆகியோர் வாழ்ந்துள்ளதாக வரலாற்றாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கடைசி மன்னன் வீழ்ந்தது எப்படி?

மன்னன் தெய்வாம்சம் பொருந்தியவன் என மக்கள் கருதும்படியான ஆட்சிமுறை (Theocracy) இன்கா காலத்தில் நடந்தது.

அந்த காலகட்டத்தில் 177 வீரர்களுடன் மட்டுமே வந்த ஸ்பானிஷ் தளபதி பிசாரோ, அதாஹுல்பா என்ற இன்கா மன்னரை கொன்றார்.

அப்போது பொதுவெளியில் தாம் எரித்துக் கொல்லப்படுவதை விரும்பாத அதாஹுல்பா, கிறிஸ்துவ மதத்துக்கு மாறுவதாக ஸ்பானிஷ் ஆட்சியாளருடன் உடன்பாடு செய்து கொண்டதாக கதை உள்ளது. அதன்படியே அந்த மன்னர் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய கதையை வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அது 1531, நவம்பர் 15.

தமது படையினருடன் கசாமார்காவுக்கு ஸ்பானிஷ் படை தளபதி பிசாரோ வருகிறார். பிசாரோ ஸ்பெயினின் ஏழ்மை குடும்பத்தில் 1478இல் பிறந்தார். புத்துலக கண்டுபிடிப்பில் ஆர்வம் கொண்ட இவர், பனாமாவை கடந்த வாஸ்கோட பால்போவாவுடன் பயணித்தவர்.

இந்த குழுவினரே பசிஃபிக் பெருங்கடலை அடைந்த முதல் ஐரோப்பியர்களாக அறியப்படுகின்றனர். பனாமா புதிய நகரின் மேயராக இருந்த இவர் இரு முறை பெரு நகரை ஆக்கிரமிக்க முயன்று தோற்றார். பின்னர் பெருவை கைப்பற்ற படை பரிவாரங்களுடன் புறப்பட்டார்.

அப்போது இன்கா மன்னர் அதாஹுல்பா கோடை இளவேனில் காலத்தில் ஓய்வில் இருந்தார்.

தமது சார்பில் ஒரு விருந்துக்கு வருமாறு அதாஹுல்பாவை பிசாரோ அழைத்தார். 30 ஆயிரம் படை வீரர்கள் பலத்தைக் கொண்ட தம்மை 177 பேருடன் வந்துள்ள பிசாரோவால் என்ன செய்து விட முடியும் என்று கருதி அந்த அழைப்பை அதாஹுல்பா ஏற்றார்.

நவம்பர் 16ஆம் தேதி குறிப்பிட்ட இடத்துக்கு அதாஹுல்பா சென்றபோது, அவரிடம் ஒரு பாதிரியாரை அனுப்பிய பிசாரோ, கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொண்டு பேரரசர் ஐந்தாம் சால்ஸ் ஆளுகையின் கீழ் அடிபணிய வேண்டும் என்று வற்புறுத்தினார்.

அதை ஏற்க அதாஹுல்பா மறுத்தார். இதனால், அவர்கள் மீது தாக்குதல் நடத்த பிசாரோ உத்தரவிட்டார்.

இன்கா மன்னர் அதாஹுல்பா மற்றும் அவரது ஆயிரக்கணக்கான வீரர்களிடம் 177 ஸ்பானிஷ் படையினர் வைத்திருந்ததற்கு நிகரான எறிகுண்டுகள் இல்லை.

பிசாரோவின் ஆசை வார்த்தையை நம்பிச் சென்ற இன்கா வீரர்கள் சில மணி நேரத்தில் வெட்டிச் சாய்க்கப்பட்டும் குண்டுகளுக்கும் இரையாகினர்.

இன்கா பேரரசு நடத்திய பேரம்

இன்கா வரலாறு

பட மூலாதாரம், Getty Images

இதையடுத்து சிறைப்பிடிக்கப்பட்ட அதாஹுல்பா, தன்னை விடுவித்தால் அறை முழுவதும் இருக்கக் கூடிய 24 டன் தங்கம், வெள்ளியை தருவதாக பேரம் பேசினார். அதுநாள்வரை உலக வரலாற்றில் பெரும் பணக்காரராக இன்கா அதாஹுல்பாவே இருந்தார் என நம்பப்பட்டது.

அவர் கொடுத்த தங்கம், வெள்ளியை பெற்றுக் கொண்டு அதாஹுல்பாவை விடுவிக்காமல் அவர் மீது ஸ்பானிஷ் ஆளுகைக்கு எதிரான கலகம், தமது ஒன்று விட்ட சகோதரர் ஹுவாஸ்கரை கொன்றது போன்ற குற்றச்சாட்டுகளை பிசாரோ சுமத்தினார். ஸ்பானிஷ் நீதித்துறை விசாரணை கூண்டில் அதாஹுல்பா நிறுத்தப்பட்டார்.

1533ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, தன் மீதான குற்றச்சாட்டுகளின் தீர்ப்பு வெளிவந்த நாளில் இறக்கும் வழியை தேர்வு செய்ய இரண்டு வாய்ப்புகள் அதாஹுல்பாவுக்கு வழங்கப்பட்டன.

ஒன்று எரித்துக் கொல்லப்படுவது, மற்றொன்று கிறிஸ்துவ மதத்துக்கு மாறினால் நேரடியாக தூக்கிலிடப்படுவது.

தூக்கிலிடப்பட்டால், தமது சடலம் பதப்படுத்தப்பட்டு கல்லறையில் புதைக்கப்படும் என்ற நம்பிக்கையில் இரண்டாவது வழியை தேர்வு செய்தார் அதாஹுல்பா. அதன்படியே இரும்பு காலர் இணைக்கப்பட்ட கயிற்றில் சாகும்வரை அவர் தூக்கிலிடப்பட்டார்.

இன்கா மன்னர் இறந்த பிறகு ஸ்பானிஷ் பெரும்படையுடன் கஸ்கோ நோக்கி அணிவகுத்துச் சென்ற பிசாரோ, இன்கா சாம்ராஜ்ஜியத்தின் புதிய ஆளுநராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார்.

தமது ஆளுகையில், ஹுவாஸ்கரின் சகோதரர் மன்கோ கபாக்கை பொம்மை பேரரசாக நிறுவினார் பிசாரோ.

இன்கா வரலாறு

பட மூலாதாரம், AXEL E. NIELSEN

தங்களின் மன்னன் அதாஹுல்பா தெய்வாம்சம் வாய்ந்தவர். அவரையே ஸ்பானிஷ் பிசாரோ கொன்று விட்டதால் அவரது தலைமையை அங்கு வாழ்ந்த மக்கள் நாளடைவில் ஏற்றுக் கொண்டனர். பலரும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறினர்.

பின்னர் பனாமாவுடன் தொடர்புகளை ஏற்படுத்த கடலோர பகுதியில் லிமா நகரை நிறுவினார் பிசாரோ. ஸ்பானிஷ் காலனிய ஆட்சியாளர்களின் சூழ்ச்சியை அறிந்த மன்கோ கபாக், அவர்களின் மேற்பார்வையில் இருந்து தப்பி சில வீரர்களுடன் பிசாரோ படைகளை எதிர்க்க முற்பட்டார்.

ஆனால், எழுச்சி ஏற்பட்ட வேகத்திலேயே அதை ஸ்பானிஷ் படையினர் முறியடித்தனர். அதுவே ஸ்பானிஷ் ஆளுகைக்கு எதிரான இன்காக்களின் கடைசி எதிர்ப்பு நடவடிக்கையாகவும் அந்த ஆளுகையின் வீழ்ச்சியாகவும் கருதப்படுகிறது.

இப்படியாக வரலாற்றில் அறியப்பட்ட 433 ஆண்டுகள் சாயாதிருந்த இன்கா பேரரசு வீழ்ந்தது. இன்கா நாகரிகம் வாழ்ந்ததற்கான அடையாளங்களாக அந்த மக்கள் வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்ட சில கட்டுமானங்கள் இப்போதும் உள்ளன.

அவர்களின் வாழ்க்கை முறைக்கு சாட்சியாக பெருவின் ஆண்டிஸ் பகுதியில் இப்போதும் சிலர் இன்கா கலாசாரத்தை பின்பற்றி வாழ்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :