கண்ணாடி குப்பியில் கடிதம்: மாதக் கணக்கில் கடலில் 4,800 கிலோமீட்டர் பயணித்த கடிதம் - எங்கு யாரிடம் கிடைத்தது?

கடலில் பயணித்த கடிதம்

பட மூலாதாரம், AMANDA TIDMARSH

படக்குறிப்பு, கடலில் பயணித்த கடிதம்

ஒரு கண்னாடி குப்பியில் கனடா நாட்டில் கடலில் வீசப்பட்ட கடிதம் சுமார் 4,800 கிலோமீட்டர் கடலில் பயணித்து பிரிட்டன் நாட்டில் இருக்கும் தெற்கு வேல்ஸ் நகரத்தில் ஒருவரிடம் கிடைத்திருக்கிறது.

வேல்ஸில் இருக்கும் ப்ரினா நகரத்தைச் சேர்ந்த 52 வயதான அமண்டா டிட்மார்ஷ் கடற்கரை ஓரத்தில் தன் இரு நாய்களோடு நடந்து சென்று கொண்டிருந்த போது கடற்பாசியுடன் கூடிய ஒரு கண்ணாடிக் குப்பியைக் கண்டிருக்கிறார்.

அதைக் கண்டுபிடித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்கிறார். முன்பு தன் குடும்பத்தினரிடம் தான் எப்போதும் புதையலை வேட்டையாடுவதாக வேடிக்கையாகக் கூறியதையும் நினைவுகூர்கிறார்.

இந்தக் கடிதத்தை கடலில் வீசி எறிந்த மீனவரிடம் இருந்து பதில் வரும் என காத்திருக்கிறார் அமண்டா.

கனடாவில் வீசி எறியப்பட்ட அந்த கண்ணாடிக் குப்பி சுமார் 4,800 கிலோமீட்டர் பயணித்து தெற்கு வேல்ஸ் நகரத்தை வந்தடைந்து இருக்கிறது. அந்தக் கடிதம் கடந்த 2020 நவம்பரில் கடலில் வீசி எறியப்பட்டதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அமண்டா டிட்மார்ஷ்

பட மூலாதாரம், AMANDA TIDMARSH

படக்குறிப்பு, அமண்டா டிட்மார்ஷ்

வெல் ஆஃப் க்ளாமார்கன் கடற்கரையில் அமண்டா டிட்மார்ஷ், லேப்ரடூடல் டெய்சி மற்றும் ஜேக் ரஸ்ஸல் ஆலி என்கிற இரு நாய்களோடு நடந்து சென்று கொண்டிருந்தார். கடற்கரையில் கடற்பாசி, கடல்சிப்பி போன்றவைகளோடு இருந்த காலி வொயின் பாட்டிலைக் கண்டார்.

"அதைக் கண்டெடுத்த போது, அந்த கண்ணாடிக் குப்பி எந்த வித சேதமும் இல்லாமல் இத்தனை தூரம் வந்திருப்பதை நினைக்கும் போது அது அருமையாக இருந்தது. அக்குப்பிக்குள் புதையல் போல ஏதாவது இருக்கும் என கருதினேன்" என்கிறார் அமண்டா.

இதைத் தனியாக திறக்கும் அளவுக்கு சிறப்பானது" என தான் கருதியதாகவும், தன் மகன் வீட்டுக்கு வரும் வரை காத்திருந்ததாகவும் கூறுகிறார்.

"இது உண்மையிலேயே மிகவும் அருமையான ஒன்று. நான் என் மற்றொரு மகன் மற்றும் மகளுக்கும் இது குறித்து குறுஞ்செய்தி அனுப்பினேன். அவர்களும் என்னைப் போலவே மிகவும் மகிழ்ந்தார்கள். இதை நம்ப முடியவில்லை".

கண்ணாடிக் குப்பியில் இருந்த கடிதம்

பட மூலாதாரம், AMANDA TIDMARSH

படக்குறிப்பு, கண்ணாடிக் குப்பியில் இருந்த கடிதம்

"நான் கடற்பாசிகளில் புதையலைத் தேடுவதாக எப்போதும் என் அம்மாவிடம் வேடிக்கையாகக் கூறுவதுண்டு. இப்போது அப்படி ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டேன்"

இந்தக் கடிதம் ஜான் க்ரஹம் என்கிற பனி நண்டு பிடிக்கும் மீனவரிடம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்தக் கடிதத்தைக் கண்டெடுப்பவர் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு தன் மின்னஞ்சலையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"அந்த பாட்டில் கச்சிதமாக அடைக்கப்பட்டிருந்தது. அதற்குள் ஒரு சிப் லாக் பைக்குள் கடிதம் சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது" என்கிறார் அமண்டா. ஜான் க்ரஹாமிடம் இருந்து பதில் வரும் என உற்சாகத்தோடு காத்திருக்கிறார் அவர்.

அந்த பாட்டில் தற்போது ரோண்டா சியான் டஃப் என்கிற இடத்தில் இருக்கும் அமண்டாவின் வீட்டில், க்ரீன் ஹவுஸ் என்றழைக்கப்படும் தோட்டம் போன்ற அறையில் இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :