சைகோவ் டி: கொரோனா வைரசுக்கான முதல் டி.என்.ஏ தடுப்பூசியின் சிறப்பு என்ன? பலவீனம் என்ன?

பட மூலாதாரம், EPA
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
டி.என்.ஏ-வை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு அனுமதி வழங்கி இருக்கிறது இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு.
மூன்று டோஸ்களைக் கொண்ட சைகோவ் டி கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களில் 66 சதவீதத்தினருக்கு, அறிகுறியை வெளிப்படுத்தும் நோயில் இருந்து பாதுகாப்பு கிடைத்தது என கெடிலா ஹெல்த்கேர் நிறுவனம் கூறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 12 கோடி தடுப்பூசி டோஸ்களைத் தயாரிக்க திட்டமிடுவதாகக் கூறுகிறது கெடிலா.
இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட டி.என்.ஏ தடுப்பூசிகள் மனிதர்கள் மத்தியில் சிறப்பாக செயல்படவில்லை.
இதுவரை இந்தியாவில் 57 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் V ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ZYDUS CADILLA
பெரியவர்களில் 13 சதவீதம் பேருக்கு முழுமையாகவும், 47 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோசும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
50 மையங்களில் 28,000 தன்னார்வலர்கள் என இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவிலேயே மிகப் பெரிய மருத்துவ பரிசோதனையை தன் தடுப்பூசிக்கு நடத்தியதாகக் கூறுகிறது கெடிலா நிறுவனம்.
மேலும், இந்தியாவில் முதல்முறையாக 12 - 18 வயதுக்கு உட்பட்ட 1,000 பேரிடம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நடத்தியதாகவும் கூறியுள்ளது.
இந்த வயது வரம்புக்கு உட்பட்டவர்கள் மத்தியில் இந்த கொரோனா தடுப்பூசி ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது, முக்கியமான மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
"இந்த கொரோனா தடுப்பூசி குறித்து நான் மிகவும் உற்சாகத்தோடு இருக்கிறேன். இத்தடுபூசி நல்ல ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த தடுப்பூசி வேலை செய்தால், எதிர்காலத்தில் கொரோனா தடுப்பூசிகளை ஓரிடத்தில் இருந்து வேறிடத்துக்கு அனுப்புவது எளிதாகும்" என இந்தியாவின் முக்கிய வைராலஜிஸ்ட்களில் ஒருவரான பேரசிரியர் ஷாஹித் ஜமீல் கூறியுள்ளார்.
இந்த தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது?

டி.என்.ஏ மற்றும் ஆர் என் ஏக்கள் தான் ஒரு உயிரின் அடிப்படை கட்டமைப்பு. இவையே மரபியல் தகவல்களை பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு கடத்துகின்றன.
எல்லா கொரோனா தடுப்பூசிகளைப் போல டி.என்.ஏ தடுப்பூசிகளும் செலுத்தப்பட்ட உடன், மனித உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு உண்மையான கொரோனா வைரஸ் உடன் போராட கற்றுக் கொடுக்கின்றன.
சைகோவ் டி பிலாஸ்மிட்கள் அல்லது சிறிய டி.என்.ஏ வளையங்களை பயன்படுத்துகிறது. அதில் மரபியல் தகவல்கள் இருக்கும். இந்த தடுப்பூசியை தோலின் இரு அடுக்குகளுக்கு மத்தியில் கொண்டு சேர்க்க பிலாஸ்மிட் அல்லது சிறிய டி.என்.ஏ வளையங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நம் உடலில் இருக்கும் செல்களுக்கு பிலாஸ்மிட்கள் மூலம்தான் புரத முள்முடியை உருவாக்கும் செய்தி கடத்தப்படுகிறது. இந்த புரத முள் முடிகள் மூலம்தான் கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் நுழைகிறது.
மற்ற தடுப்பூசிகளிலிருந்து இது எப்படி வேறுபடுகிறது?

பட மூலாதாரம், Getty Images
இது மனிதர்களுக்கான உலகின் முதல் டி.என்.ஏ கொரோனா தடுப்பூசி. அமெரிக்காவில் பல டி.என்.ஏ அடிப்படையிலான கொரோனா தடுப்பூசிகள் விலங்குகளுக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன.
அமெரிக்காவில் மனிதர்கள் மீது 160-க்கும் மேற்பட்ட டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பூசிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் பெரும்பாலான தடுப்பூசிகள் புற்றுநோய்க்கான மருந்துகள், அதில் மூன்றில் ஒரு பங்கு மருந்துகள் ஹெச்.ஐ.வி நோய்க்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் ஊசி இல்லா கொரோனா தடுப்பு மருந்து சைகோவ் டி.
இம்மருந்து ஊசி அல்லாத சாதனம் மூலம் உடலில் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் மருந்து தோலுக்குள் செலுத்தப்பட்டு, தசைகளுக்குச் செல்கின்றன.
"ஒரு தொற்றுக்கு எதிராக டி.என்.ஏ தடுப்பூசி சிறப்பாக செயல்பட்டால் அது மிகப் பெரிய விஷயம், ஒருவேளை இந்த மருந்து சிறப்பான பாதுகாப்பை வழங்குகிறது என்றால், அதற்கு இந்தியா நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்" என்கிறார் இந்தியாவின் முன்னணி வைராலஜிஸ்ட்களில் ஒருவரான ககந்தீப் கங்.
நன்மைகள் என்ன?
டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பூசிகளின் விலை மலிவாக இருக்கும். இவை பாதுகாப்பானவை, நிலையானவை என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதை -2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் சேமித்து வைக்கலாம்.
கெடிலா நிறுவனமோ தங்களின் கொரோனா தடுப்பூசியை 25 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில், குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு சேமித்து வைக்கலாம். அதுவரை அது நல்ல நிலைத்தன்மையோடு இருக்கும் எனக் கூறியுள்ளது.
டி என் ஏ தடுப்பூசியில் உள்ள சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
மனிதர்களின் தொற்று நோய்களுக்காக கடந்த காலங்களில் கண்டுபிடிக்கபட்ட டி.என்.ஏ தடுப்பூசிகள் தோல்வியடைந்துள்ளன.
"பிரச்சனை என்னவென்றால், அது விலங்குகளிடம் சிறப்பாக செயல்படும். அது மனிதர்கள் மத்தியில் அத்தனை சிறப்பாக அதிக பாதுகாப்பை வழங்காது" என்கிறார் மருத்துவர் கங்.
பிலாஸ்மிட் டி.என்.ஏக்களை எப்படி மனிதர்களின் செல்களுக்குள் செலுத்த முடியும் என்பது தான் மிகப் பெரிய சவால் என்கிறார் மருத்துவர் கங். அப்படி செலுத்தப்பட்டால் அது நல்ல நோயெதிர்ப்பு எதிர்வினையை ஏற்படுத்தும்.
"பிலாஸ்மிட் டி.என்.ஏ-க்களை அடிப்படையாகக் கொண்ட தடுப்பூசிகள் முன்பே முயற்சிக்கப்பட்டவை. பிலாஸ்மிட் டி.என்.ஏக்களை மனித செல்களின் உட்கருவான நியூக்லியசுக்குள் கொண்டு செல்வது மிகவும் கடினமானது என்பதை நாம் அறிவோம். குறிப்பாக இது பெரியவர்களில் மிகவும் சிரமம்" என்கிறார் லூசியானா மாகாண பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் மையத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜெரிமி கமில்.
இதில் மற்றொரு முக்கிய பின்னடைவு என்னவென்றால், மற்ற கொரோனா தடுப்பூசிகளைப் போல இல்லாமல், கெடிலாவின் தடுப்பூசி மூன்று டோஸ்கள் செலுத்தப்பட வேண்டும். ஆனால் இதை இரண்டு டோஸ்களாக மாற்றுவது குறித்து மதிப்பீடு செய்து வருவதாகக் கூறியுள்ளது கெடிலா.
பிற செய்திகள்:
- மீண்டும் சூயல் கால்வாய் வந்த எவர் கிவன் கப்பல் - இம்முறை சிக்காமல் சென்றது எப்படி?
- மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது? சில புரிதல்களும் விளக்கங்களும்
- ஆஃப்கனில் அஞ்சி நடுங்கும் ஒருபாலுறவினர் - 'தாலிபனால் கண்ட இடத்திலேயே கொல்லப்படுவேன்'
- நள்ளிரவில் கறிக் கோழியைத் திருடிய 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு
- அல்லா கோயிலுக்கு அலங்காரம்; பூக்குழி இறங்கி மொஹரம் கொண்டாடிய இந்துக்கள்
- மழலைக் குழந்தை போல ஒலி எழுப்பும் வெளவால் குட்டிகள்: ஒட்டுக்கேட்ட ஆய்வாளர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












