தூத்துக்குடியில் கோழி திருடிய காவலர்கள் - பணியிடைநீக்கம் செய்த மாவட்ட கண்காணிப்பாளர்

தூத்துக்குடி மாவட்டம் காடல்குடியில் நள்ளிரவில் கோழி திருடியது, பட்டப்பகலில் கோழிக் கடைக்காரரை தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள மூன்று போலீஸார் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் அவர்கள் பணியாற்றும் அதே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தலைமை காவலர் மற்றும் இரு காவலர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சரகம் காடல்குடி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் பாலகிருஷ்ணன் கடந்த 16ஆம் தேதி இரவு காவல்நிலையம் அருகே கோழி கறிக் கடை நடத்திவரும் முத்துச்செல்வன் என்பவரது செல்பேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் அவர் தூங்கி விடவே அந்த அழைப்பினை அவரது மனைவி ஜெயா எடுத்துப் பேசியுள்ளார். அப்போது காவல் நிலையத்துக்கு உடனடியாக ஒரு கிலோ கறிக் கோழி அனுப்பி வைக்கும்படி தெரிவித்துள்ளார்.
என்றும் காலையில் கொண்டு வருவதாகவும் கூறி ஜெயா இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இந்நிலையில் தலைமை காவலர் பாலகிருஷ்ணன், காவலர்கள் சதீஷ்குமார், பாலமுருகன் ஆகியோர் நள்ளிரவில் கோழிக் கடை பூட்டை உடைத்து கறிக் கோழியைத் திருடிச் சென்றுள்ளனர்.
மறுநாள் காலையில் முத்துச்செல்வனை தொடர்பு கொண்ட தலைமை காவலர் பாலகிருஷ்ணன் கோழியை திருடியதையும், அதற்குரிய தொகையை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் முத்துச்செல்வன் அதனை நிராகரித்துள்ளார்.
இதனையடுத்து போலீஸார் கோழி திருடிய தகவல் காவல்துறையில் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வரவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட 3 காவலர்களையும் ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த தலைமை காவலர் பாலகிருஷ்ணன், காவலர்கள் சதீஷ்குமார், பாலமுருகன் ஆகியோர் வியாழக்கிழமையன்று கோழிக்கடைக்கு வந்து கோழி திருடியதை எதற்காக வெளியே சொன்னாய், என கேட்டு முத்துச்செல்வனிடம் சண்டையிட்டு தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த முத்துச்செல்வன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இத்தகவலை கேள்விப்பட்டு கிராம மக்கள் ஒன்றுதிரண்டு காடல்குடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு காவலர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காயமடைந்த முத்துச்செல்வன் அளித்த புகாரின் பேரில் தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன், காவலர்கள் சதீஷ்குமார், பாலமுருகன் ஆகிய 3 பேர் மீது 5 பிரிவுகளில் காடல்குடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறிக் கடை உரிமையாளரை தாக்கிய தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் சதீஷ்குமார் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கறிக்கடை உரிமையாளரைத் தாக்கிய தலைமை காவலரையும், காவலரையும் அங்கிருந்து காரில் கூட்டி வந்த காவலர் பாலமுருகன் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
பிற செய்திகள்:
- அல்லா கோயிலுக்கு அலங்காரம்; பூக்குழி இறங்கி மொஹரம் கொண்டாடிய இந்துக்கள்
- மழலைக் குழந்தை போல ஒலி எழுப்பும் வெளவால் குட்டிகள்: ஒட்டுக்கேட்ட ஆய்வாளர்கள்
- எதிர்ப்பவர்களை வேட்டையாட தொழில்நுட்பத்தை கையாளும் தாலிபன்கள்
- "தாலிபனிடம் சிக்கினால் என் தலை துண்டிக்கப்படும்" - ஆஃப்கனில் இருந்து தப்பியவரின் கதை
- தமிழ்நாட்டில் போலி கொரோனா தடுப்பூசிகளின் பயன்பாடு உள்ளதா? - அரசு விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












