மழலைக் குழந்தை போல ஒலி எழுப்பும் வெளவால் குட்டிகள்: ஒட்டுக்கேட்ட ஆய்வாளர்கள்

பட மூலாதாரம், MICHAEL STIFTER
- எழுதியவர், விக்டோரியா கில்
- பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர்
கோஸ்டா ரிக்கா நாட்டிலுள்ள ஒரு குறிப்பிட்ட வகை வெளவால்களின் ஒலியை ஒட்டுக்கேட்ட அறிவியலாளர்கள் அந்த வெளவால்கள் எழுப்பும் ஒலிக்கும், மழலை குழந்தைகளின் ஒலிக்கும் மிகவும் நெருக்கமான ஒற்றுமை இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த ஒலியை எழுப்பும்போது குறிப்பிட்ட சில அடிப்படையான ஒலி அசைகளை அவை மீண்டும் மீண்டும் உண்டாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மழலைக் குழந்தைகள் எவ்வாறு தெளிவின்றி ஒலி எழுப்புவது அவர்களின் பேச்சு திறனுக்கு அடிப்படையாக உள்ளதோ, அதைப்போன்றே வெளவால்கள் எழுப்பும் ஒலிக்கும் இந்த மழலை போன்ற ஒலி அடிப்படையாக உள்ளது தெரியவந்துள்ளது.
ஒலி எழுப்புவதை பயிற்சி செய்யும் வகையில் சூரியன் உதிப்பது முதல் மறைவது வரை அவை தொடர்ந்து இத்தகைய தெளிவற்ற ஒலியை எழுப்பிக் கொண்டே இருக்கின்றன என்று இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய முனைவர் அஹானா பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பணியாற்றும் அஹானா அதிக ஒலி எழுப்பக் கூடிய சக்கோப்டெரிக்ஸ் பைலினோட்டா (Saccopteryx bilineata) என்னும் ஒரு குறிப்பிட்ட வகை வெளவாலை ஆராய்ச்சி செய்தனர். (சேக் விங்டு பேட் என்று இவை ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.)
இந்த வகை வெளவால்கள் பாட்டு பாடும் பறவைகளைப் போலவே பாடுகின்றன. இவற்றுக்கு என ஒரு நுணுக்கமான வாய் மொழித் தொடர்பாடல் உள்ளது. இந்த ஒலி தனித்துவமிக்க அசைகளின் இசைத்தொகுப்பு போல இருக்கிறது, என்று அஹானா தெரிவிக்கிறார்.
அஹானா பெர்னாண்டஸ் மற்றும் அவரது சகாக்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு ’சயின்ஸ்’ என்கிற சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
வெளவால் குட்டிகள் தங்களது வசிப்பிடத்தில் இருந்துகொண்டே எழுப்பும் மழலை போன்ற ஒலிகளை இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் பகுப்பாய்வு செய்தார்கள்.

பட மூலாதாரம், மழலைக் குழந்தை போல ஒலி எழுப்பும் வெளவால் குட்டிகள்
இந்த ஆய்வில் முக்கியமாக இரண்டு விஷயங்கள் கண்டறியப்பட்டன.
- வெளவால்கள் வளர்ந்த பின் அவற்றின் பாடல்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான அசைகள் மீண்டும் மீண்டும் ஒலியாக எழுப்பப்பட்டன.
- மழலை குழந்தைகள் 'டா-டா-டா' போன்று ஒரே குறிப்பிட்ட ஒலியை மீண்டும் மீண்டும் உண்டாக்குவது போல வெளவால் குட்டிகளும் அந்த குறிப்பிட்ட ஒலியை தாள லயத்துடன் மீண்டும் மீண்டும் உண்டாக்கின.
மனிதர்கள் பேசுவதற்கு குரல் அமைப்பின் மீது மிகவும் நுணுக்கமான கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும்.
குழந்தைகளாக இருக்கும்போது அதற்கு இவ்வாறு பயிற்சி செய்வது அவசியம். இது இந்த வெளவால்களிலும் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த குறிப்பிட்ட வகை வெளவால்கள் மட்டும் இவ்வாறு பாடல் போன்ற மழலை ஒலியை எழுப்புகிறது என்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் 1,400-க்கும் மேலான வெளவால் வகைகள் உலகெங்கும் உள்ளதால் இப்படிப்பட்ட ஒலியை எழுப்பும் பிற வெளவால் இனங்களும் இருக்கலாம் என்று அஹானா தெரிவிக்கிறார்.
இது மட்டுமல்லாமல் இந்த ஆய்வின்போது இன்னொரு சுவாரசியமான ஒன்றையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இப்படி இந்த வெளவால் குட்டிகள் மழலை போன்ற ஒலியை எழுப்பும் பொழுது அவற்றை பிற வெளவால் குட்டிகள் கவனிக்கின்றன என்று கூறுகிறார் அஹானா.
ஒரு வெளவால் குட்டி 15 நிமிடம் அல்லது அதையொத்த நேரத்திற்கு மழலை போன்ற ஒலியை உண்டாக்கும் போது பிற வெளவால்களின் காதுகள் அசைவதை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இவை ஒன்றை ஒன்று கவனிக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.
ஆனால் இவற்றின் இந்த பயிற்சியின் மீது பிற குட்டிகள் கவனிப்பது எந்த அளவுக்கு தாக்கம் செலுத்தும் என்று தெரியவில்லை என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- எதிர்ப்பவர்களை வேட்டையாட தொழில்நுட்பத்தை கையாளும் தாலிபன்கள்
- "தாலிபனிடம் சிக்கினால் என் தலை துண்டிக்கப்படும்" - ஆஃப்கனில் இருந்து தப்பியவரின் கதை
- தமிழ்நாட்டில் போலி கொரோனா தடுப்பூசிகளின் பயன்பாடு உள்ளதா? - அரசு விளக்கம்
- வெளிநாட்டு நிறுவனங்களை கதிகலங்கச் செய்யும் சீனாவின் புதிய சட்டம்
- மலேசியாவின் புதிய பிரதமர்: யார் இந்த இஸ்மாயில் சப்ரி யாகூப்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












