இஸ்மாயில் சப்ரி யாகூப் மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக தேர்வு

பட மூலாதாரம், ismailsabri60, Facebook
மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு மலேசிய மன்னர் அப்துல்லா இந்த அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து அண்மைய சில தினங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பங்களும் மோதல்களும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 18 மாதங்களுக்கு முன்பு மலேசியாவின் பிரதமராக இருந்த மகாதீர் முகமது கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திடீரென பதவி விலகினார்.
இதையடுத்து ஏற்பட்ட அரசியல் திருப்பங்களின் முடிவில் மகாதீர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இடம்பெற்றிருந்த மொஹிதின் யாசின், அன்றைய ஆளும் கூட்டணியின் பக்காத்தான் ஹராப்பானில் இருந்து தமது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
பின்னர் எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் பெரிக்கத்தான் நேஷ்னல் என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றினார். பிரதமராகவும் பொறுப்பேற்றார்.
எனினும், ஆட்சி அமைத்த நாள் முதலே அவருக்கு முக்கிய கூட்டணிக் கட்சியான அம்னோவில் இருந்து பல்வேறு நெருக்கடிகள் எழுந்தன. அதன் முடிவில் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மொஹிதின் யாசின்.

பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில், அவரது அமைச்சரவையில் மூத்த அமைச்சராகவும், பின்னர் துணைப் பிரதமராகவும் பொறுப்பு வகித்த இஸ்மாயில் சப்ரி யாகூப்பை பிரதமர் வேட்பாளராக ஏற்க பெரிக்கத்தான் கூட்டணியின் உறுப்புக்கட்சிகள் முன்வந்தன. அம்னோ கட்சியின் உதவித் தலைவராகவும் உள்ளார் இஸ்மாயில் சப்ரி.
எனவே, அக்கட்சியின் அனைத்து எம்பிக்களும் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். முன்னாள் பிரதமர் (தற்போது காபந்து பிரதமர்) மொஹிதின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் நேஷ்னல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளும் பிளவுபடாத ஆதரவை அளித்ததை அடுத்து, ஆட்சி அமைக்க தேவையான எம்பிக்களின் ஆதரவை அவர் பெற்றார்.
இதற்கு முன்பு மலேசியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் கூட்டுறவு அமைச்சகம், ஊரக மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சகம் என பல அமைச்சகங்களை பல்வேறு காலகட்டங்களில் அவர் பதவி வகித்துள்ளார்.
நாளை பிற்பகலில் அவரது பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொஹிதின் யாசின் பதவி விலகியதை அடுத்து, பெரிக்கத்தான் நேஷ்னல் கூட்டணியில் பிளவு ஏற்படக்கூடும் என்றும், அதன் எதிரொலியாக மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என்றும் அரசியல் பார்வையாளர்கள் சிலர் ஆருடங்கள் வெளியிட்டனர். ஆனால், இம்முறையும் அவ்வாறு நிகழவில்லை. இதனால் அன்வார் ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பிற செய்திகள்:
- நிமிடத்துக்கு 10 லிட்டர் ஆக்சிஜன்; 62 நாள் எக்மோ - மீண்டும் பிறந்த திருச்சி முத்திஜா
- கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்க இந்திய அரசு தயாரா?
- ஆபத்தில் இருந்து தப்ப 'மனிதர்களை ஏமாற்றும் பாம்புகள்' - சுவாரசிய தகவல்கள்
- ஆஃப்கன் - நடு வானில் விமானத்தில் இருந்து விழுந்தவர் 19 வயது கால்பந்து வீரர்
- `இப்போதும் தனி ராஜாங்கம்; அதே விதிகள்' - கொடநாடு எஸ்டேட் இப்போது எப்படி இருக்கிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












