சாக்கி அன்வரி - அமெரிக்க விமானத்தில் இருந்து கீழே விழுந்து இறந்த 19 வயது ஆப்கானிஸ்தான் கால்பந்து வீரர்

அமெரிக்க விமானத்தில் இருந்து கீழே விழுந்து இறந்த 19 வயது கால்பந்து வீரர்

பட மூலாதாரம், AFGHAN SPORTS SOCIETY

காபூல் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய அமெரிக்க அரசுக்குச் சொந்தமான விமானத்தைப் பிடித்து தொங்கிக்கொண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முயன்ற இளம் கால்பந்தாட்ட வீரர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்ததை ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

19 வயதான சாக்கி அன்வரி ஆப்கானிஸ்தான் தேசிய ஜூனியர் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தவர்.

அவர் எப்பொழுது உயிரிழந்தார் என்பது குறித்த மேலதிக தகவல்கள் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் மேற்கத்திய நாடுகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் குடிமக்கள் மற்றும் தங்களுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியர்கள் ஆகியோரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

அதே விமானங்கள் மூலம் தாங்களும் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

காபூலில் இருந்து கிளம்பிய அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விமான ஓடுபாதையில் இருந்து கிளம்பும் போது அந்த விமானத்தின் அருகிலேயே பலநூறு பேர் ஓடுவது மற்றும் அதை பிடித்து தொங்க முயல்வது ஆகிய காணொளிகள் திங்களன்று வெளியாகின.

விமானத்தைப் பிடித்து தொங்கிக்கொண்டு நாட்டில் இருந்து தப்ப முயன்றவர்களில் குறைந்தது இரண்டு பேர் நடுவானில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் விமானம் கத்தாரில் தரையிறங்கிய பின்பு அதன் லேண்டிங் கியர்-இல் மனித உடல் பாகங்கள் இருந்ததாக அமெரிக்க விமானப் படையும் உறுதிப்படுத்தியது.

People trying to board USAF aeroplane at Kabul airport

பட மூலாதாரம், Unknown

சாக்கி அன்வரிக்கு சமூக ஊடகங்களில் இரங்கல்

ஆப்கானிஸ்தானின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுக்கான பொது இயக்குநரகம் சாக்கி உயிரிழந்ததற்கு தமது ஃபேஸ்புக் பக்கத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளது.

"அவர் சொர்க்கத்தில் இளைப்பாறட்டும்; தமது குடும்பம் நண்பர்கள் மற்றும் சக விளையாட்டு வீரர்களுக்காக கடவுளிடம் பிரார்த்திக்கட்டும்," என்று அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஆஃப்கன் தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம் தற்போது சுமார் 4,500 அமெரிக்க படையினரின் தற்காலிக கட்டுப்பாட்டில் உள்ளது.

உரிய பயண ஆவணங்கள் எதுவும் இல்லாமல் அந்த விமான நிலையத்திற்கு செல்ல முயற்சி செய்யும் ஆப்கனிஸ்தான் குடிமக்களை தாலிபன்கள் தடுத்து வருகின்றனர்.

ஆனால் முறையான பயண ஆவணங்கள் இருப்பவர்களும் அந்த விமான நிலையம் செல்வதற்கு மிகவும் இன்னல்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. இதனால் ஏராளமான அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாட்டினர் விமான நிலையத்துக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

தற்போது ஏராளமான வெளிநாடுகள் தங்களது குடிமக்களையும் அதிகாரிகளையும் மீட்பதற்காக காபூல் விமான நிலையத்துக்கு ராணுவ விமானங்களை அனுப்பி வைத்துள்ளன. இதனால் காபூல் ஹமீத் கர்சாய் விமான நிலையத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

பைடன்

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில் அமெரிக்க படைகளை ஆஃப்கனில் இருந்து வெளியேற்றும் முடிவை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் நியாயப்படுத்தியுள்ளார்.

தாலிபன்கள் இந்த வேகத்தில் முன்னேறுவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது என்றும் ஏபிசிக்கு அளித்த பேட்டியில் ஜோ பைடன் கூறினார்.

காபூலில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி தவிர்க்க முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பறுவதற்கு வாய்ப்புக் குறைவு என்று தாம் கூறியது கடந்த மாதத்தில்தான் என்றும் பைடன் கூறினார்.

இவ்வளவு வேகமாக தாலிபன்கள் முன்னேறியதற்கு ஆப்கானிஸ்தான் அரசும் அவர்களது ராணுவமும்தான் காரணம் என்றும் பைடன் குற்றம்சாட்டினார்.

ஆனால் பிபிசியிடம் பேசிய உளவுத்துறை வட்டாரங்கள், "ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்குவதில் உள்ள அபாயங்களை பைடன் வெகு முன்னரே புரிந்து வைத்திருந்தார்" எனக் கூறின.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :