இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி எவ்வாறு செல்கிறது? மூன்றாம் அலைக்கு தயாராகிவிட்டதா?

தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Getty Images

கொரோனா மூன்றாம் அலையின் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் இந்தியாவில் தடுப்பு மருந்து செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

செவ்வாயன்று, 24 மணி நேரத்தில் சுமார் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதிலிருந்து இதுதான் அதிகப்படியான எண்ணிக்கை என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும் மக்கள் தொகையில் வெறும் 13 சதவீத அளவிலானவர்களுக்கு மட்டுமே இரு டோஸ் தடுப்பு மருந்தும் செலுத்தப்பட்டுள்ளது.

உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகம்பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்த வருடத்திற்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என இந்தியா திட்டமிட்டுள்ளது. இருப்பினும் தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் உள்ள தயக்கம் ஆகியவற்றால் இது சாத்தியமாவது கடினம்தான்.

தற்போது தினமும் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் 80 முதல் 90 லட்சம் பேருக்கு தினமும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே இந்த வருடத்திற்குள் தடுப்பூசி செலுத்த தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும்.

பெரும்பாலான வளரும் நாடுகள் தடுப்பூசி தட்டுப்பாட்டால் சிரமப்பட்டன. உலகளவில் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான இந்தியா தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை.

இருப்பினும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் முன்னதாகவே அதற்கான கொள்முதல் ஆணையை வழங்கவில்லை. ஏப்ரல் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா பேரழிவை சந்தித்தது. அதன்பின் தடுப்பூசி செலுத்தும் திட்டம் வேகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் தடுப்பூசி இயக்கத்தை எவ்வாறு செயல்படுத்துகிறது?

ஜனவரி 16 தேதியிலிருந்து இந்தியா இதுவரை 565 மில்லியன் (56.5 கோடி) டோஸ்களுக்கும் அதிகமாக தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது.

A vaccination centre on a bus in Kolkata

பட மூலாதாரம், Getty Images

சுமார் 440 மில்லியன் (44 கோடி) பேர் தடுப்பு மருந்தின் முதல் டோஸை பெற்றுள்ளனர். மேலும் 125 மில்லியன் (12.5 கோடி) பேர் இரு டோஸ்களை பெற்றுள்ளனர்.

வியாழன்ன்று இந்தியாவில் 36 ஆயிரத்து 400 பேருக்கு புதியதாக கொரோனா ஏற்பட்டிருந்தது. இது மே மாதம் தொற்று பாதிப்பு உச்சத்தில் இருக்கும்போது பதிவான எண்ணிக்கையை காட்டிலும் பத்து மடங்கு குறைவு.

இருப்பினும் புதிய திரிபுகளின் ஆபத்துகளுக்கு மத்தியிலும் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் கிட்டதட்ட முழுவதுமாக விலக்கப்பட்டுள்ளதால் மூன்றாம் அலையை தவிர்க்க முடியாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒருபுறம் தடுப்பு மருந்து குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும் மறுபுறம் தடுப்பு மருந்து எடுத்து கொள்வதில் உள்ள பாலின வித்தியாசம் குறித்து நிபுணர்கள் கவலை கொள்கின்றனர்.

அரசின் தகவல்படி வெறும் 6 சதவீத பெண்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். குறிப்பாக கிராமப் புறங்களில் குறைவான பெண்களே தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். அங்கு இணைய வசதிகள் அற்ற நிலை, தடுப்பூசி குறித்த அச்சம் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.

தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Getty Images

கிராமப் புறங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்தாலும், நகரத்தில்தான் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்தியாவில் ஆகஸ்டு-டிசம்பர் காலக்கட்டத்தில் 135 கோடி டோஸ் தடுப்பூசி இருக்கும் என ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தது மத்திய அரசு.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றால் 180 கோடி டோஸ்கள் தேவை.

நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கிடைக்க வாய்ப்புள்ள ஐந்து தடுப்பு மருந்துகள் குறித்து தெரிவித்திருந்தது

-50 கோடி டோஸ்கள் கோவிட்ஷீல்டு

-40 கோடி டோஸ்கள் கோவாக்சின்

-30 கோடி டோஸ்கள் இந்திய நிறுவன பயோலஜிக்கல் -இ

-10 கோடி டோஸ்கள் ஸ்புட்னிக்- வி

-5 கோடி டோஸ்கள் சைகோவ் -டி, இது அகமதாபாத்தை சேர்ந்த சைடஸ்-காடில்லா நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் எந்த தடுப்பு மருந்து பயன்படுத்தப்படுகிறது?

இந்தியாவில் மூன்று தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ராசெனிகாவின் கோஷீல்டு, இந்திய நிறுவனமான பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின், ரஷ்யாவின் ஸ்புட்னிக்- வி.

மேலும் இந்திய மருந்து நிறுவனமான சிப்லாவிற்கு மாடர்னா தடுப்பு மருந்தை இறக்குமதி செய்யும் அதிகாரத்தையும் வழங்கியுள்ளது. இந்த மாடர்னா தடுப்பு மருந்து கோவிட் - 19க்கும் எதிராக 95 சதவீத அளவில் பயனாற்றுகிறது. இருப்பினும் இந்தியாவுக்கு எத்தனை டோஸ்கள் வழங்கப்பட்டன என்பது தெளிவாக தெரியவில்லை. ஜான்சன் & ஜான்சன் தடுப்பு மருந்துக்கும் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல தடுப்பு மருந்துகள் பல்வேறு அனுமதி நிலையில் உள்ளன.

India coronavirus

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இந்தியாவில் கொரோனா விநியோகம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி வழங்கல் என்கிறது இந்திய அரசு.

இந்தியாவை பொறுத்தவரை அரசு மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் இலவசமாக தடுப்பு மருந்து கிடைக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தியும் தடுப்பு மருந்து செலுத்தி கொள்ளலாம்.

அரசு கிளினிக்குகள், பொது சுகாதார மையங்கள் ஆகியவற்றில் இலவச தடுப்பு மருந்து வழங்க அரசு 500 கோடி ரூபாய் செலவு செய்கிறது.

தடுப்பு மருந்துக்கு பிறகு ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன?

தடுப்பு மருந்து செலுத்தி கொண்ட பிறகு சிலருக்கு பக்க விளைவுகள் உள்ளன.

எந்த ஒரு பக்க விளைவாக இருந்தாலும் அவை வெளிப்படையாக அரசாங்கத்தால் மக்களுக்கு சொல்லப்பட வேண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர். அப்போதுதான் மக்களுக்கு தடுப்பூசி குறித்த அச்சம் விலகும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் மே மாதம் வரை 23,000 பேருக்கு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மயக்கம், தலைச்சுற்றல், காய்ச்சல், வலி போன்ற சிறிய பிரச்னைகள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 700 பேருக்கு தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜூன் மாதம் வரை 488 பேர் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும் அரசாங்கம் இது தடுப்பு மருந்தால் ஏற்படவில்லை என்று தெரிவிக்கிறது. மேலும் கோவிட்-19ஆல் ஏற்படும் உயிரிழப்பை காட்டிலும் தடுப்பு மருந்தால் ஏற்படும் உயிரிழப்புகள் மிக மிக குறைவே என அரசாங்கம் தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :