கொரோனா வந்து குணமானவர்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போட்டால் போதுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி
இந்தியாவில் தடுப்பூசி மருந்துகளுக்கு நிலவும் பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்னையாகி வரும் நிலையில், ஒரே ஒரு டோஸ் தடுப்பூசி போதும் என்ற செய்தி சற்று ஆறுதலையும் அனைவரின் கவனத்தையும் கவர்வது இயல்பு. அப்படி ஒரு செய்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியிலிருந்து வருகிறது.
கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகிப் பின் குணமடைந்தோருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே போதுமானது என்று உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.
BHU பேராசிரியர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளனர். அதில், ஆராய்ச்சியின் முடிவுகளின் அடிப்படையில், கொரோனா நோய்த்தொற்று குணப்படுத்தப்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதனால் 2 கோடி தடுப்பூசி டோஸ்கள் மிச்சமாகும் என்பது அவர்கள் தரப்பு வாதம். இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 2 கோடிக்கும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை பற்றிய செய்திகளுக்கு இடையில், இந்தச் செய்தி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிஎச்யூ ஆய்வும் அதன் முடிவுகளும்

பனாரஸ் இந்து பல்கலைக்கழக நரம்பியல் துறையின் இரண்டு பேராசிரியர்கள் விஜய் நாத் மிஸ்ரா மற்றும் அபிஷேக் பதக் மற்றும் மூலக்கூறு மானுடவியல் துறை பேராசிரியர் ஞானேஷ்வர் சௌபே ஆகியோர் கொரோனா வந்து குணமடைந்த 20 பேர் மீது இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களில் முதல் 10 நாட்களில் போதுமான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது என்பதை அவர்கள் கண்டறிந்தனர். தடுப்பூசியின் முதல் டோஸ் கொரோனா நோயால் பாதிக்கப்படாத நபர்களில் பல ஆன்டிபாடிகளை உருவாக்குவதில்லை.
ஆனால் வெறும் 20 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இதுபோன்ற பரிந்துரைகளை பிரதமருக்கு அனுப்புவது சரியானதா?
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், பேராசிரியர் சௌபே பிபிசியிடம், "உலகின் பிற நாடுகளிலும் இதுபோன்ற ஒரு ஆய்வு நடந்துள்ளது. அமெரிக்காவில் எம்ஆர்என்ஏ தடுப்பூசி குறித்து இதேபோன்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றின் முடிவுகளும் எங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை ஒத்திருக்கின்றன. இது எங்கள் ஆய்வு முடிவுகளுக்கு மேலும் வலு சேர்க்கின்றது. நாங்கள் பரிந்துரைக்க மட்டுமே செய்துள்ளோம். இந்திய அரசிடம் வளங்களுக்குக் குறைவு இல்லை. எங்கள் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில், மத்திய அரசே இது குறித்த தரவுகளைச் சேகரிக்கக் கூடும். இதற்கு ஒரு மாதம் கூட ஆகாது," என்று கூறுகிறார்.
இந்த முதல் ஆய்வு, முதல் அலையின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்ட வட இந்திய மக்கள் மீது இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கோவாக்சின் போட்டுக்கொண்டவர்கள் மீதான ஆய்வை இப்போது மேற்கொண்டு வருவதாகவும் பேராசிரியர் சௌபே கூறுகிறார்.
அறிவியல் பின்புலம் என்ன?

பட மூலாதாரம், Reuters
மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத் துறையின் தலைவர் சுனில் கர்க், விஞ்ஞான அடிப்படையில் பார்த்தால், ஆராய்ச்சி முடிவுகளில் கூறப்பட்டவை சாத்தியமாகும் என்று நம்புகிறார். ஒருவித தொற்று ஏற்பட்டவுடன், உடலுக்குள் இருக்கும் நினைவக செல்கள் அடுத்த முறை அதே நோய் வரும்போது அவற்றை எவ்வாறு கையாள்வது என்பதை நினைவில் கொள்கின்றன. கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு, வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உடலில் தயாரிக்கப்படுகின்றன மற்றும் வைரஸுடன் போராட நினைவக செல்கள் பயிற்சி பெறுகின்றன. அதாவது, கொரோனா ஒரு முறை தாக்கியவர்களுக்கு அது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டது போன்றதாகும்.
ஆனால் டாக்டர் சுனிலா இதை இன்னொரு கோணத்தில் பார்க்கிறார். சில தடுப்பூசிகள் புதிய வகை பிறழ்வு வைரஸ்களுக்கு எதிராகவும் திறன் மிக்கதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் கோவிட் -19 ஒரு முறை தாக்கியபின், இரண்டாவது முறை புதிய வகை வைரஸ் தாக்கவும் சிறிதளவு வாய்ப்புள்ளது. இந்தக் காரணத்திற்காகத் தான், இந்திய அரசின் இரண்டு டோஸ் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதே சரி என்று இவர் கூறுகிறார்.
டாக்டர் சுனிலா மத்திய அரசின் கோவிட் -19 பணிக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசின் ஆதரவு
BHU பேராசிரியர்கள் தங்கள் பரிந்துரைகளை 15 நாட்களுக்கு முன்பே அனுப்பியிருந்தனர். ஆனால் இது வரை அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பிரதமர் நரேந்திர மோதியின் நாடாளுமன்றத் தொகுதியில் BHU வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.
(இந்த கட்டுரையை பின்வரும் மொழிகளில் அவற்றின் மீது கிளிக் செய்து படிக்கலாம்: ஹிந்தி, குஜராத்தி, பஞ்சாபி)
இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கிலச் செய்தித்தாள், தடுப்பூசி பிரச்சாரத்தைக் கண்காணிக்க இந்திய அரசு ஒரு புதிய தளத்தை தயார் செய்து வருகிறது என்றும் இது தடுப்பூசி இயக்கத்தை மேலும் மேம்படுத்த உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


இதில், வெவ்வேறு தடுப்பூசி டோஸ்களை கலப்பது, ஒற்றை டோஸ் தடுப்பூசியின் விளைவைக் கண்காணிப்பது ஆகியவை குறித்த தரவு சேகரிக்கப்படும், இது அவ்வப்போது தடுப்பூசி உத்தியை மாற்ற உதவும். ஆனால் இந்த ஒற்றை டோஸ் தடுப்பூசி குறித்த சோதனை, கோவிட் -19 இலிருந்து மீண்டு வந்தவர்களிடம் மட்டும் தான் செய்யப்படுகிறதா அல்லது பொது மக்களிடமும் செய்யப்படுகிறதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கொரொனாவிலிருந்து மீண்டவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?
கொரோனா தடுப்பூசி பிரசாரம் தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதலை இந்திய அரசு மே மாதத்தில் தான் வெளியிட்டது. புதிய வழிகாட்டுதலின் படி, கொரோனாவிலிருந்து குணமானவர்களுக்கு நோய்த்தொற்றிலிருந்து விடுபட்ட 3 மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி போடலாம். ஆனால் இந்திய அரசின் வழிகாட்டுதல்களில், அத்தகையவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி தான் பரிந்துரைக்கப்படுகிறது.
கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டு 3 மாதங்களுக்குப் பிறகுதான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (சி.டி.சி) இணையதளத்தில் தடுப்பூசி தொடர்பான கேள்வி-பதில் பகுதியும் கூறுகிறது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் எவ்வளவு காலம் இருக்கும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை என்றும் சி டி சி கூறுகிறது. எனவே கோவிட் -19 ல் இருந்து மீண்ட பிறகும் கூட அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்றே அது பரிந்துரைக்கிறது.
இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்படும் அனைத்து உலக நாடுகளிலும் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களுக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி தான் பரிந்துரைக்கப்படுகிறது.
சி.டி.சி வழிகாட்டுதல்களின்படி, ஒரு நபர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு 2 வாரங்களுக்குப் பிறகுதான் (கோவாசின் மற்றும் கோவிஷீல்ட் போன்றவை) முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவராகக் கருதப்படுகிறார்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்றா ஒற்றை-டோஸ் தடுப்பூசிகளைப் பொருத்தவரை, ஒரு நபர் ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 2 வாரங்களுக்குப் பிறகு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டவராகக் கருதப்படுகிறார்.
BHU பேராசிரியர்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டால் இந்த வரையறையும் மாற்றப்பட வேண்டும்.
இது போன்ற ஆய்வுகள் வேறு எங்கு செய்யப்பட்டன?

பட மூலாதாரம், ADRIANA DUDULEANU / EYEEM
BHU இன் பேராசிரியர்கள் மேற்கொண்ட இதே போன்ற ஆய்வை உலகின் பிற நாடுகளும் செய்து வருகின்றன. இதே போன்ற செய்திகள் வேறு பல ஆராய்ச்சிப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.
லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் இணையதளத்தில் சுகாதாரப் பிரிவில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்ட மக்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ் ஒரு பூஸ்டர் டோஸாக செயல்படுகிறது என்று கூறுகிறது.
இந்த ஆராய்ச்சி இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் 51 பேர் மீது நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவுகள் கிடைத்தன, அதில் 24 பேர் கொரொனா தாக்கியவர்கள். மற்றவர்கள் கொரொனா பாதிப்புக்குள்ளாகாதவர்கள். தடுப்பூசியின் முதல் டோஸுக்குப் பிறகு, குறைந்த எண்ணிக்கையிலான அறிகுறிகளைக் கொண்ட கொரோனா நோயாளிகளில் காணப்படும் அதே எண்ணிக்கையிலான ஆன்டிபாடிகள் கொரொனா தாக்காதவர்களின் உடலில் காணப்பட்டன.
அதேசமயம், கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு அதிக ஆன்டிபாடிகள் உருவாகின.
அமெரிக்காவில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனமான சிடார்ஸ் சைனாய், ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி கொண்டு இதேபோன்ற ஆராய்ச்சியை மேற்கொண்டது. 228 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில், கொரோனா நோய்த்தொற்று குணப்படுத்தப்பட்டவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு உருவான ஆன்டிபாடிகளின் அளவு, கொரொனா தாக்காதவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு உருவாகும் ஆன்டிபாகிகளின் அளவை ஒத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












