'கடல்கன்னி போன்ற குடை' - அந்தமான் நிக்கோபாரில் புதிய தாவர இனம் கண்டுபிடிப்பு

Indian scientists discover 'mermaid' plant species

பட மூலாதாரம், felix bast

அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டம் அருகே ஒரு புதிய வகை தாவர இனத்தை இந்திய அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள்.

2019ஆம் ஆண்டு அந்தத் தீவு கூட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட உயிரியலாளர்கள் அங்கு கடலில் வாழும், பச்சை நிற பூஞ்சை ஒன்றைக் கண்டனர்.

அப்பொழுதுதான் அந்தப் பூஞ்சை முதல்முறையாக அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்வதற்கு இரண்டரை ஆண்டு காலம் ஆகியுள்ளது.

சுமார் 40 ஆண்டு காலத்தில் புதிதாக ஒரு பூஞ்சை இனம் அந்தமான் அருகே கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் பூஞ்சை பற்றிய ஐந்து சுவாரசிய தகவல்கள் இதோ.

  • இந்தப் பூஞ்சை இனத்துக்கு அசெடாபுலேரயாரியா ஜலகன்யகே (Acetabularia jalakanyakae) என்று பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். சமஸ்கிருதத்தில் 'ஜலகன்யகா' என்றால் கடல்கன்னி என்றும் பெருங்கடல்களின் பெண் கடவுள் என்றும் பொருள்.
  • டென்மார்க்கைச் சேர்ந்த புனைக்கதை எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் கதையில் உள்ள கற்பனை கதாபாத்திரமான 'லிட்டில் மெர்மெய்ட்' (Little Mermaid) கதாபாத்திரத்தால் உந்தப்பட்டு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட உயிரியலாளர்கள் கூறுகிறார்கள். 'மெர்மெய்ட்' என்பது கற்பனையான கடல் கன்னியைக் குறிக்கும்.
  • இந்தப் புதிய கண்டுபிடிப்பு மிகவும் வியப்பளிக்கும் வகையில் உள்ளது. ஒரு கடல் கன்னிக்கு இருக்கும் குடையைப் போல மிகவும் நுணுக்கமான வடிவமைப்பைக் கொண்ட மேல்கூரை இந்தப் பூஞ்சைக்கு உள்ளது என்று இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய முனைவர் ஃபெலிக்ஸ் பஸ்ட் கூறுகிறார்.
  • புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்தத் தாவர இனத்துக்கு இருக்கும் முக்கியத்துவம் என்னவென்றால் ஒரே மிகப்பெரிய அணுவால் இது உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த தாவர இனத்தின் டிஎன்ஏவை தங்கள் ஆய்வகத்தில் உள்ள பிற தாவர இனங்களின் டிஎன்ஏவுடன் ஒப்பிடுவதற்காகவே இந்த உயிரியலாளர்கள் 18 மாத காலத்துக்கும் அதிகமான காலத்தைச் செலவு செய்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையும் இந்தியன் ஜர்னல் ஆப் ஜியோ-மரைன் சயின்சஸ் எனும் சஞ்சிகையில் பதிப்பிக்க ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடலில் உள்ள பவளப் பாறைகள்

பவளப் பாறைகள்

பட மூலாதாரம், ALEXIS ROSENFELD / getty images

உலகிலேயே மிகவும் நல்ல நிலையில் எஞ்சி இருக்கும் கடைசி பவளப்பாறை இனங்கள் சில அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் உள்ளன. இந்தப் பவளப் பாறைகள் பல கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு தஞ்சம் அளிக்கின்றன .

அவற்றில் பல்வேறு வகையான பூஞ்சை இனங்களும் அடக்கம். ஆனால் கடல் நீரின் வெப்பம் அதிகரித்து வருவது மற்றும் கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரித்து வருவது ஆகியவை கடலில் நல்ல நிலையில் உள்ள பவளப் பாறைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

கடல் நீரின் வெப்பம் அதிகரித்தால் அந்த நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு குறையும்; இது உயிர்வாழ்வதற்கு ஆக்சிஜனை நம்பியுள்ள கடல்வாழ் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய அபாயமாக இருக்கும். அதில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்தத் தாவர இனமும் அடக்கம் என்று முனைவர் ஃபெலிக்ஸ் பஸ்ட் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :