ஆப்கானிஸ்தான்: எதிர்ப்பவர்களை வேட்டையாட தொழில்நுட்பத்தை கையாளும் தாலிபன்கள்

பட மூலாதாரம், Getty Images
தாலிபன்கள் ஊடகங்களுக்கு முன் அமைதியாகப் பேசினாலும், பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்போது பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள், கைரேகை ஸ்கேனர் போன்ற சாதனங்களை தாலிபன்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிவிட்டனர். தங்களுக்கு எதிர் கருத்து கொண்ட ஊடகவியலாளர்கள், மேற்குலக படைகளுக்கு உதவியவர்கள், மேற்குலகப் படையில் பணியாற்றியவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என தாலிபன்கள் பட்டியல் போட்டு வேட்டையாடத் தொடங்கியுள்ளனர்.
தற்போது அவர்கள் தேடும் நபர்களைக் கண்டுபிடிக்க ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
மக்கள் இலக்கு வைக்கப்படக் கூடாது என்பதற்காக, ஃபேஸ்புக் நிறுவனம் நண்பர்கள் பட்டியலை தேடும் வசதியை ஆப்கானிஸ்தானில் இருக்கும் கணக்குகளுக்கு நீக்கியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனமோ கடந்த வியாழக்கிழமை ஒரு புதிய பாதுகாப்பு நடவடிக்கையை அந்நிறுவனத்தின் தலைமை பாதுகாப்புக் கொள்கை அதிகாரி நதனில் க்லேசர் (Nathaniel Gleicher) அறிமுகப்படுத்தினார்.
"நாங்கள் ஒரு சொடுக்கில் மொத்த ப்ரொஃபைலையும் பூட்டி வைக்கும் பாதுகாப்பு சாதனத்தை ஆப்கானிஸ்தானில் இருக்கும் மக்களுக்காக அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.ஒருவரின் ப்ரொஃபைல் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் போது அவர்களது நண்பர்கள் தவிர வேறு யாரும் அவருடைய படங்களையோ, பதிவுகளையோ பார்க்க முடியாது" என தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் க்லேசர்.

பட மூலாதாரம், Photoshot
இன்ஸ்டாகிராமிலும் ஒருவரின் கணக்கை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என படிப்படியாக விளக்கும் வகையில் எச்சரிக்கை செய்திகள் கொடுக்கப்பட்டு வருகின்றன எனவும் கூறியுள்ளார் க்லேசர்.
மேலும் "மற்ற சமூக வலைதளங்கள், சிவில் சமூகங்கள், அரசாங்கங்கள் என பலதரப்பினரோடும் மக்களைப் பாதுகாக்க என்ன உதவிகள் எல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்ய நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்" என கூறியுள்ளார் க்லேசர்.
தாலிபன்களின் பதிவுகள் தங்கள் தளத்தில் தொடர்ந்து தடை செய்யப்படும் என ஃபேஸ்புக் கூறியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
ட்விட்டர் நிறுவனமும், தீவிரவாதத்தை ஊக்குவிக்கு அல்லது பொதுமக்களுக்கு எதிராக வன்முறையை ஆதரிக்கும் குழுக்களை ட்விட்டர் அனுமதிக்காது எனக் கூறியது.
கைரேகை மற்றும் ரெடீனா ஸ்கேன் சாதனம்
அமெரிக்கா மற்றும் ஆப்கன் அரசு, ஆப்கானிஸ்தான் மக்களில் பலரின் பயோமெட்ரிக் தரவுகளான கை ரேகை, ரெடீனா மற்றும் புகைப்படங்களை சேமித்து வைத்தது.
இந்த பதிவுகளைச் செய்ய 12 * 6 இன்ச் அளவுள்ள HIIDE (Handheld Interagency Identity Detection Equipment) என்று அழைக்கப்படும் சாதனம் ஒன்றை அமெரிக்க படைகள் பயன்படுத்தின.
இந்த விவரங்களைப் பயன்படுத்தி வெடிகுண்டுகளைச் செய்தது யார், ஒப்பந்ததாரர்கள் யார், உள்ளூரில் அமெரிக்க ராணுவத்தோடு பணிபுரிபவர்கள் யார் என்பதை எல்லாம் கண்டுபிடிக்க பயன்படுத்தினர்.
தற்போது அந்த HIIDE சாதனங்களில் சிலவற்றை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளதாக, சில ராணுவத்தினர் கூறுவதாக இண்டர்செஃப்ட் என்கிற வலைதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தாலிபன்கள் வீடுவீடாக நடத்தும் சோதனைகளில் ஒரு பயோமெட்ரிக் சாதனத்தைப் பயன்படுத்தி சோதனை நடத்துவதாக காபூல் நகரத்தில் வசிக்கும் ஒருவர் கூறுவதாக ராய்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
பயோமெட்ரிக் கட்டமைப்புகள் தற்போது தாலிபன்கள் வசம் உள்ளதாக ஆப்கன் அதிகாரி ஒருவர் நியூ-சையின்டிஸ்ட் என்கிற வலைதளத்திடம் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், EPA
தாலிபன்கள் கையில் மேற்குலகக் கூட்டுப் படையின் சில பயோமெட்ரிக் தரவுகள் கிடைத்திருக்கலாம், ஆனால் அதைப் பயன்படுத்தும் திறன் அவர்களுக்கு இருக்குமா எனத் தெரியவில்லை என அமெரிக்காவின் மரைன் சிறப்பு திட்ட கமாண்டோக்களில் பணியாற்றிய பீட்டர் கிர்னென் கூறுகிறார்.
HIIDE கருவிகள் மூலம் திரட்டப்பட்ட தரவுகள் அனைத்தும் பென்டகனில் Automated Biometrics Identification System எனப்படும் சிக்கலான அமைப்பில் தான் சேமித்து வைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே தாலிபன்கள் அத்தனை எளிதாக தரவுகளை பயன்படுத்துவது சாத்தியமில்லை என பத்திரிகையாளர் மற்றும் ராணுவ பயோமெட்ரிக் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆனி ஜேகப்சன் கூறுகிறார்.
பிற செய்திகள்:
- "தாலிபனிடம் சிக்கினால் என் தலை துண்டிக்கப்படும்" - ஆஃப்கனில் இருந்து தப்பியவரின் கதை
- மலேசியாவின் புதிய பிரதமர்: யார் இந்த இஸ்மாயில் சப்ரி யாகூப்?
- நிமிடத்துக்கு 10 லிட்டர் ஆக்சிஜன்; 62 நாள் எக்மோ - மீண்டும் பிறந்த திருச்சி முத்திஜா
- கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்க இந்திய அரசு தயாரா?
- ஆபத்தில் இருந்து தப்ப 'மனிதர்களை ஏமாற்றும் பாம்புகள்' - சுவாரசிய தகவல்கள்
- ஆஃப்கன் - நடு வானில் விமானத்தில் இருந்து விழுந்தவர் 19 வயது கால்பந்து வீரர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












