ஆப்கானிஸ்தான் "தாலிபன்களிடம் சிக்கினால் என் தலை துண்டிக்கப்படும்" - பிரிட்டனில் குடியேறியவரின் வாக்குமூலம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கானர் கில்லிஸ்
- பதவி, பிபிசி ஸ்காட்லாந்து செய்திகள்
தாலிபனிடம் பிடிபட்டால் தாம் துன்புறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், தமது தலை துண்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பயந்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி ஸ்காட்லாந்தில் இருக்கும் க்ளாஸ்கோ நகரத்தில் குடியேறியுள்ளார் ஓர் ஆப்கானியர். இப்போதுதான் அவருக்கு நிம்மதியாக இருப்பதாக கூறியுள்ளார் அந்த மொழிபெயர்ப்பாளர்.
38 வயதான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இவர் மாகாணத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர்.
தாம் பிரிட்டிஷ் ராணுவத்திற்காக பணியாற்றியதால், தாலிபன்களின் இலக்குக்கு ஆளாகி இருப்பதாகக் கூறித் தமது பெயர், படம் உள்ளிட்ட தமது அடையாளங்களை வெளியிட விரும்பாமல் பிபிசியிடம் பேசினார் இவர்.
பிரிட்டனின் மறுகுடியேற்ற திட்டத்தின் கீழ், இந்த ஆண்டின் கோடை காலத்தில் ஸ்காட்லாந்தில் தமது மனைவி மற்றும் மூன்று வயது மகளோடு குடியேறியுள்ளார் அந்த மொழிபெயர்ப்பாளர்.
"நான் ஆப்கானிஸ்தானிலேயே இருந்திருந்தால், தாலிபன்கள் என்னை கொடுமைப்படுத்தி கொல்வர். அவர்கள் மொழிபெயர்ப்பாளர்களை துரோகிகளாகப் பார்க்கிறார்கள்" என்கிறார் அவர்.
"சர்வதேச படைகளுக்கு உதவுவதை நிறுத்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பல மொழிபெயர்ப்பாளர்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டது மற்றும் தலை துண்டிக்கப்பட்டது என பல சம்பவங்கள் இருக்கின்றன."
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் இடமாற்ற மற்றும் உதவித் திட்ட்டத்தின் கீழ் பிரிட்டனுக்கு வந்த 2,000 முன்னாள் ஆப்கானிஸ்தான் உழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களில் இவரும் ஒருவர்.

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் அப்கானிஸ்தான் தாலிபன்கள் பிடியில் வீழ்ந்த போது பிரிட்டன் தொடங்கி இருக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் மறுகுடியேற்ற திட்டத்தில் இருந்து இது வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
"என் தந்தையிடம் விடைபெற்று வருவது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. கொரோனா காரணமாக என்னால் அவரை கட்டியணைக்கக் கூட முடியவில்லை. தொலைவில் இருந்துதான் நான் விடைபெற்றேன். அப்போது அவர் அழத் தொடங்கினார்.
"நான் சார்ந்த சமூகத்தை விட்டு நான் வெளியேற வேண்டி இருந்தது. என் நண்பர்கள், என் வேலை, என் முதுகலை படிப்பு என எல்லாவற்றையும் விட்டு வெளியேற வேண்டி இருந்தது. அது அத்தனை பயத்தை கிளப்பக் கூடிய சூழல். நான் மிகவும் கடினமான முடிவை எடுக்க வேண்டி இருந்தது, அல்லது தாலிபன்களால் கொல்லப்படுவேன். அது உங்கள் வாழ்வை பொருளற்றதாக்கிவிடும். நீங்கள் மரணத்துக்காக காத்திருப்பீர்கள்."
க்ளாஸ்கோவில் மறுகுடியேறியது தொடர்பாக கேட்ட போது "அது மிகவும் ஆறுதலாக இருந்தது. இப்போது வாழ்கை மிகவும் மாறுபட்டதாக இருக்கிறது" என்கிறார் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய அவர்.
மறுகுடியேற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, எதிர் காலத்தில் பாதிக்கப்படக் கூடிய 20,000 ஆப்கானிஸ்தான் மக்களை பிரிட்டன் ஏற்றுக் கொள்ளவிருக்கிறது.
முதல் ஆண்டில் அத்திட்டத்தின் கீழ் 5,000 ஆஃப்கன் மக்கள் பிரிட்டனில் குடியேறுவர் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகளோ இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர்.
ஆப்கானிஸ்தான் இதுவரை இல்லாத அளவுக்கு நிலையற்று இருக்கிறது, அகதிகளுக்கு நிறைய உதவிகள் தேவைப்படுகின்றன என ஸ்காட்டிஷ் தேசிய கட்சியைச் சேர்ந்த இயான் ப்ளாக்ஃபோர்ட் தன் வாதங்களை முன்வைத்திருக்கிறார்.

க்ளாஸ்கோவைச் சேர்ந்த ரெஃப்யூஜி (Refuweegee) என்கிற அமைப்பு ஒவ்வொரு வாரமும் 150 அகதிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் மக்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்ய அவ்வமைப்பு தயார் நிலையில் இருக்கிறது.
2015ஆம் ஆண்டு சிரியாவில் இருந்து வந்த அகதிகளுக்கு உதவ மறுகுடியேற்றத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் ஸ்காட்லாந்தில் அகதிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள் இருக்கின்றன என்று பிபிசியிடம் கூறினார் அவ்வமைப்பின் நிறுவனர் செலினா ஹேல்ஸ்.
நெருக்கடி காலத்தின் போது 2,500-க்கும் அதிகமான சிரிய அகதிகள் ஸ்காட்லாந்தில் குடியேறினர்.
"நாம் இன்னும் அதிக அகதிகளை அனுமதிக்க வேண்டு என்று தான் நான் நினைக்கிறேன். நம்மிடம் போதுமான வீட்டு வசதிகள் எல்லாம் இருக்கின்றன" என்கிறார் செலினா.
"ஸ்காட்லாந்து முழுக்க இருக்கும் உள்ளூர் அதிகாரிகள் அகதிகளை ஆதரிக்கவும், அவர்கள் குடும்பத்தை வரவேற்கவும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என சிரிய ஒப்பந்தங்கள் நமக்கு காட்டின".
"சில உள்ளூர் அதிகாரிகள் இரண்டு அல்லது மூன்று அகதிகள் குடும்பங்களை மட்டுமே வரவேற்றனர். அவர்களுக்கு தற்போது அகதிகளாக வரும் குடும்பத்துக்கு என்ன மாதிரியான உதவிகள் தேவை என்பதை அறிவர்" என்கிறார் செலினா ஹேல்ஸ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












