இந்து - முஸ்லிம் ஒற்றுமை: அலங்காரம் செய்யப்பட்ட அல்லா கோயில்; தஞ்சாவூா் அருகே மொஹரம் கொண்டாடிய இந்துக்கள்

இந்து - முஸ்லிம் ஒற்றுமை

பட மூலாதாரம், Jasmin Merdan /getty images

படக்குறிப்பு, கோப்புப்படம்

(இன்று 21.08.2021 சனிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

அலங்காரம் செய்யப்பட்ட அல்லா கோயில்; மொஹரம் கொண்டாடிய இந்துக்கள்

தஞ்சாவூா் அருகே காசவளநாடுபுதூா் கிராமத்தில் மத நல்லிணக்கத்தைப் பறை சாற்றும் விதமாக மொஹரம் பண்டிகையை இந்துக்கள் வெள்ளிக்கிழமை கொண்டாடினா் என தினமணியில் செய்தி பிரசுரமாகியுள்ளது.

இஸ்லாமியா்களின் தொடக்க மாதமான மொஹரம் மாதத்தின் பத்தாம் நாளை மொஹரம் பண்டிகையாக இஸ்லாமியா்கள் கொண்டாடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காசவளநாடு புதூா் கிராமத்தில் மத நல்லிணக்கத்தை பறை சாற்றும் விதமாக ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகை கிராம விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி, மொஹரம் பண்டிகையையொட்டி, இக்கிராமத்தில் இந்துக்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற 10 நாள்களுக்கு முன்பே விரதத்தைத் தொடங்கினா். அங்குள்ள அல்லா கோயிலில் வியாழக்கிழமை முதல் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. மேலும், ஒலிபெருக்கிகள் மூலம் இஸ்லாமிய பாடல்கள் ஒலிக்கப்பட்டன. அக்கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

மொஹரம் பண்டிகையான வெள்ளிக்கிழமை பஞ்சா எனப்படும் கரகம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குத் தாரை தப்பட்டை முழங்க கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கரகத்துக்குத் தண்ணீா் ஊற்றி, எலுமிச்சை மாலை மற்றும் பட்டு துண்டை சாற்றி வழிபட்டனா். பின்னா், பஞ்சா கரகத்துடன் அங்குள்ள பூக்குழியில் (தீமிதி) இறங்கி வழிபட்டனா். இவா்களுக்கு திருநீறும், எலுமிச்சையும் பிரசாதமாக வழங்கப்பட்டன.

மேலும், பெண்கள் புதிய மண் கலயம் அல்லது புதிய பாத்திரத்தில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டு, பின்னா் பொதுமக்களுக்கும், உறவினா்களுக்கும் வழங்கினா். இதற்காக வெளியூா்களில் வசிக்கும் இக்கிராம மக்களும் ஊருக்குச் சென்று கொண்டாடினா்.

இக்கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டப்பட்டபோது உள்ளங்கை உருவத்தில் உலோகம் கிடைத்ததாகவும், அது அல்லாவின் கையாகக் கருதி கோயில் அமைத்து வழிபட்டு வருவதாகவும், ஏறத்தாழ 300 ஆண்டுகளாக மொஹரம் பண்டிகையை கொண்டாடி வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனா் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டாட்சித் தத்துவத்தை பாஜக அழித்துக் கொண்டிருக்கிறது - மு.க. ஸ்டாலின்

மு க ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின்

மாநில உரிமைகள் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரிய மரியாதை இல்லாததால், இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவம் அழிக்கப்பட்டு வருகிறது என திமுக குற்றம்சாட்டியிருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

நேற்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பாஜக அல்லாத 19 எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து மெய்நிகர் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

அதில் திமுக சார்பாக முதல்வர் ஸ்டாலின், திமுக நாடாளுமன்றத் தலைவர் டி ஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். அக்கூட்டம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூட்டறிக்கையையும் பகிர்திருக்கிறார் முக ஸ்டாலின்.

"பாஜகவுக்கு மாநில உரிமைகள் மீது பெரிய மரியாதை இல்லைஎன்பதால், கூட்டாட்சித் தத்துவம் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய அவசியம். சமீபத்தைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நம் ஒற்றுமை வெளிப்பட்டது. அது மென்மேலும் வலுபெற வேண்டும். திமுக இந்த அனைத்துக் கட்சி கூட்டறிக்கையை முழுமையாக ஆதரிக்கிறது" என தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார் ஸ்டாலின்.

அதோடு, எதிர் கட்சிகள் இந்திய ஆரசுக்கு வைத்திருக்கும் 11 கோரிக்கைகளையும் ஸ்டாலின் தன் ட்விட்டர் கணக்கில் பகிர்ந்திருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம்: விரிவான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு

நிலக்கரி கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலக்கரி கோப்புப் படம்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்ததாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல் மின்நிலையத்தில் உள் ஒதுக்கீடு மற்றும் வெளி ஒதுக்கீடு கிடங்குகளில் சேமிக்கப்பட்டு வருகிறது.

வெளி ஒதுக்கீடு கிடங்கில் வைக்கப்படும் நிலக்கரிகள் ரெயில் மூலம் மேட்டூர் அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டுக்கு எடுத்து செல்லப்படுகிறது. உள் ஒதுக்கீடு கிடங்குகளில் உள்ள நிலக்கரி வடசென்னை அனல் மின்நிலையத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி கிடங்குகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

நிலக்கரி கிடங்கில் இருப்பு சரிபார்க்கப்பட்டது. அப்படி சரிபார்க்கப்பட்டதில் வடசென்னை அனல் மின்நிலையத்தில் மட்டும் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும், இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த இருப்பை சரிபார்க்க கூடிய பணியை இயக்குனர் (உற்பத்தி), இயக்குனர் (விநியோகம்) மற்றும் தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி ஆகிய 3 பேர் சேர்ந்து கடந்த 6, 8 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் அடிப்படையில்2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பில் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

இதில் மேற்கொண்டு என்ன தவறுகள் நடந்திருக்கின்றன என்பதை முழுவதுவாக கண்டறியப்பட்டு, நிச்சயம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான விரிவான விசாரணை நடைபெறுகிறது என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், @CMOTamilnadu, Twitter

படக்குறிப்பு, தமிழ்நாடு அரசு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்துக்கு, மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, 2018ஆம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான 2018, மே 22 அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, பேரணியாகச் சென்றனர்.

அப்போது நடைபெற்ற கலவரத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியின்போது, இரு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, வன்முறை குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது.

2018 ஜூன் 4 அன்று விசாரணை ஆணையம் விசாரணையைத் தொடங்கியது. முதலில் விசாரணைக்காக அளிக்கப்பட்ட 3 மாத கால அவகாசம், பின்னர் 6 மாத காலமாக நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மே 14 அன்று, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணையின் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 6 மாத காலம் நீட்டித்து தமிழக அரசு நேற்று (ஆக. 20) அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஆக.23-ம் தேதி முதல் 2022, பிப். 22-ம் தேதி வரை இந்த ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :