எல்.முருகன் போகாத 3 கோயில்கள்; ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டம் - கொங்கு மண்டலத்தில் மக்கள் ஆசி யாத்திரை வெற்றி பெற்றதா?

பட மூலாதாரம், @Murugan_MoS twitter handle
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
`மக்கள் ஆசி யாத்திரை' என்ற பெயரில் கொங்கு மண்டலத்தில் மூன்று நாள்களாக நடந்து வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. `அருந்ததியர் சமூகத்துக்கான இடஒதுக்கீடு, பொதுப்பெயர் என பல்வேறு விஷயங்கள் இந்தப் பயணத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். மேற்கு மண்டலத்தில் பா.ஜ.கவின் அடுத்த வியூகம் என்ன?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ஜ.க மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன், இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு, கால்நடை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதன்பிறகு மக்களிடம் ஆசி பெறுவதற்கான பயணத்தைக் கடந்த 16 ஆம் தேதி கோவையில் தொடங்கினார். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் வழியாக நேற்று மாலை சேலம் மாவட்டத்தில் யாத்திரையை நிறைவு செய்தார்.
169 இடங்களில் யாத்திரை
பின்னர், சேலம் கோட்டை மைதானத்தில் பேசிய எல்.முருகன், ` மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சேலத்தில் இந்த யாத்திரையை நிறைவு செய்வதில் பெருமையடைகிறேன். கடந்த மூன்று நாள்களில் 169 இடங்களில் மக்களைச் சந்தித்துள்ளேன். சுதந்திர இந்தியாவில் பட்டியலின சமூகம், பழங்குடிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என அனைத்து சமுதாயத்தினரையும் அமைச்சர்களாக பிரதமர் அமர்த்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைப்பதற்குக்கூட தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனுமதி கொடுக்காமல் குழப்பம் விளைவித்தனர். எனவே, அனைவரையும் அவரவர் ஊர்களுக்குச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து ஆசி பெறுமாறு பிரதமர் கூறினார். அதை ஏற்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டேன். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம்" என்றார்.
இதையடுத்து, கொங்கு மண்டலத்தில் எல்.முருகனின் மக்கள் ஆசி யாத்திரைக்கு ஆதரவு கொடுத்த சத்திரியர் மகா சபையின் ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூகத்துக்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடு கொடுத்ததால், எந்தப் பயனும் கிடைக்கவில்லை. 100 பேர் உள்ள இடத்தில் 3 பேருக்கு வாய்ப்பு கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை.

பட மூலாதாரம், @Murugan_MoS twitter handle
நாடு முழுவதும் எங்கள் சமூகத்தினர் பல்வேறு பெயர்களில் 20 கோடிப் பேர் உள்ளனர். எங்களுக்கு மொத்தமாக 10 சதவிகிதம் கொடுத்தால் முன்னேற்றம் கிடைக்கும். இதனை 25 வருடங்களுக்குக் கொடுத்தாலே ஒரு தலைமுறை முன்னேறிவிடும். இங்கு அனைத்து சாதிகளுக்கும் சலுகைகள் உள்ளன. இடஒதுக்கீட்டை அனைவருமே வாங்குகிறார்கள். ஆனால், 18 சதவிகித ஒதுக்கீட்டில் 3 சதவிகிதம் வாங்கியதால் எங்களை சங்கடங்களுக்கு ஆளாக்குகிறார்கள்.
எல்.முருகன் சொன்ன பதில்
அடுத்ததாக, எங்களையெல்லாம் `மாதிகா' என்ற பொதுப் பெயரில் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முருகனிடம் முன்வைத்தோம். இதனைக் கேட்ட எல்.முருகன், `இதனை நான் முடிவு செய்ய முடியாது, அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன், நல்ல முடிவை எடுப்போம்' என்றார். கூடவே, `அனைவரும் டெல்லி வாருங்கள்' எனவும் அழைப்புவிடுத்தார். இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதத்தில் பிரதமரை சந்திப்பதற்கும் அனுமதி கேட்டுள்ளோம்" என்கிறார்.
அதேநேரம், எல்.முருகனின் கோவை பயணத்தில் காமராஜபுரம் பகுதியில் உள்ள அருந்ததியர் சமூகப் பெண்கள் திரண்டு வரவேற்பு கொடுத்துள்ளனர். அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதமும் முருகன் பெற்றார். இதற்காக நடந்த ஏற்பாடுகளால் முருகன் மிகவும் உற்சாகப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை மாவட்ட பா.ஜ.க துணைத் தலைவர் மதன்மோகனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கொங்கு மண்டலத்தில் அருந்ததியர்களுக்கான ஒரே கட்சியாக பா.ஜ.க இருக்கிறது. இந்தச் சமூக மக்களை திராவிடக் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. சமுதாய அமைப்புகளில் இருந்து விலகிய பலரும், `எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த ஒரே கட்சி பா.ஜ.கதான்' என்கின்றனர். ஊர் பெரியவர்கள் மத்தியிலும் வரவேற்பு பெருகியுள்ளது.
ஆதித்தமிழர் பேரவை உள்பட சில சமுதாய அமைப்புகள், அருந்ததியர் மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பா.ஜ.கதான் முக்கிய அங்கீகாரம் கொடுத்துள்ளது. அருந்ததியர் அமைப்புகளால் ஒரு எம்.எல்.ஏவைகூட வெற்றிபெற வைக்க முடியவில்லை. அதேநேரம், மத்திய அமைச்சர் பதவியை முருகன் பெற்றுள்ளார். அருந்ததியர் மக்களுக்கான 3 சதவிகித இடஒதுக்கீட்டைப் பற்றி மட்டுமே அனைவரும் பேசி வருகின்றனர். வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் இந்த மக்கள் எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை" என்றார்.
முருகன் போகாத 3 கோயில்கள்
``முருகனின் மக்கள் ஆசி யாத்திரைக்கான பிறகான சூழல் எப்படியுள்ளது?" என ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமானிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கோவைக்கு வருகை தந்த எல்.முருகன், கோணியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அது அனைவரும் வழிபடக் கூடிய இடமாக உள்ளது. காமராஜபுரத்தில் அருந்ததிய மக்களுக்காக 3 கோயில்கள் உள்ளன. அதில் எந்தக் கோயிவிலுக்கும் அவர் செல்லவில்லை. தங்கள் கோயிலுக்கு அவர் வருவார் என நினைத்து அங்குள்ள மக்கள் பரிவட்டம் கட்டுவதற்கும் தயாராக இருந்துள்ளனர். ஆனால், அவர் செல்லவில்லை" என்கிறார்.

பட மூலாதாரம், Adiyaman facebook page
தொடர்ந்து பேசிய அதியமான், `` இன்று காலையில் எல்.முருகன் என்னை அலைபேசியில் அழைத்தார். இதுவரையில் அவருக்கு நான் வாழ்த்து தெரிவிக்காததால், இணை அமைச்சரானதற்கு வாழ்த்து தெரிவித்தேன். அவரும், `அந்தப் பக்கம் வந்தேன், உங்களைச் சந்திக்கத் தவறிவிட்டேன்' என்றேன். `பரவாயில்லை. நீங்கள் இந்திய அரசில் பதவிக்கு வந்திருக்கிறீர்கள். சமூக மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்' என்றேன். ` நிச்சயமாக செய்கிறேன்' என்றார்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், எல்.முருகன் வருகையையொட்டி நான்கைந்து இடங்களில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்தோம். ஆனால், முன்கூட்டியே எங்கள் பேரவையின் நிர்வாகிகளை கைது செய்துவிட்டனர். தனிப்பட்ட முறையில் முருகன் மீது எங்களுக்கு எந்தவித வெறுப்பும் இல்லை. ஆனால், அவரது கருத்தியலில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனை எதிர்ப்பதுதான் எங்கள் வேலை. அவரது திட்டமே அருந்ததியர் மக்களை பழைய பாணியிலேயே கும்பிடு போட வைப்பது போன்ற செயல்களைச் செய்வதுதான்.
ஆர்.எஸ்.எஸ்ஸிடம் அடகு வைக்கிறாரா?
தேசிய எஸ்.டி, எஸ்.டி ஆணையத்தில் அவர் துணைத் தலைவராக இருந்த காலகட்டங்களில் பெரிதாக எதையுமே செய்யவில்லை. தற்போதுள்ள அதிகாரத்தை வைத்தாவது இந்த மக்களுக்கு அவர் நன்மை செய்தால் நல்லது. இந்தச் சுற்றுப்பயணத்துக்குப் பிறகு சொந்த சமூக மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளதை முருகன் அறிந்து வைத்துள்ளார்" என்கிறார்.
``அருந்ததியர் சமூகத்துக்கு திராவிடக் கட்சிகள் எதையுமே செய்யவில்லை என்பதை ஒரு பிரசாரமாக முன்னெடுக்கிறார்களே?" என்றோம். `` தி.மு.கவில் அருந்ததியர் சமூகத்துக்கு அமைச்சர் பதவி, எம்.பி பதவி, துணை சபாநாயகர் பதவி என ஏராளமான பதவிகளை கொடுத்தனர். இவை அனைத்தையும்விட 3 சதவிகித உள் ஒதுக்கீடு என்பது மிகவும் முக்கியமானது. அதன் காரணமாகத்தான் இந்த மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் அடைந்தனர். இவர்கள் முன்னேறியதற்கான வாய்ப்பு 3 சதவிகித உள்ஒதுக்கீட்டில்தான் இருந்துதான் தொடங்குகிறது. இத்தனையும் செய்த தி.மு.கவை பார்த்து, `நீங்கள் என்ன செய்தீர்கள்?' எனக் கேட்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
மக்கள் ஆசி யாத்திரை என்ற பெயரில் இந்துத்துவ கொள்கைளை திணிப்பதற்குத்தான் அவர் வந்துள்ளார். இது உண்மையான யாத்திரை கிடையாது. இந்த யாத்திரையையே கோமாளித்தனமான ஒன்றாகத்தான் பார்க்கிறேன். அருந்ததியர் மக்களை ஆர்.எஸ்.எஸ்ஸிடம் அடகு வைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்" என்கிறார்.
`` அருந்ததியர் சமூகத்துக்கான பொதுப்பெயர் கோரிக்கை முன்வைக்கப்படுகிறதே?" என்றோம். ``நாங்களும் அதனை முன்வைத்துள்ளோம். `மாதிகா' என்ற பெயர் ஆந்திராவில் அழைக்கப்படுகிறது. இங்கு அருந்ததியர் சமூகத்தில் உள்ள 7 சாதிகள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அவற்றையெல்லாம் இணைத்து அருந்ததியர் என ஒரே பெயராக அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தெரிவித்துள்ளோம். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு இந்திய அரசு அறிவிக்கும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால்தான் இது செல்லுபடியாகும். முருகன் தனிப்பட்ட முறையில் நினைத்தாலும் இது சாத்தியமாகாது" என்கிறார்.
இது மாற்றத்துக்கான விதை - சி.பி.ராதாகிருஷ்ணன்

பட மூலாதாரம், Special arrangement
எல்.முருகனின் மக்கள் ஆசி யாத்திரைக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து கேரள மாநில பா.ஜ.க பொறுப்பாளரும் தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். மக்கள் ஆசி யாத்திரையில் எல்.முருகனுக்குக் கிடைத்த வரவேற்பு, அவர்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாள்களாக நானும் முருகனுடன் இருந்தேன். இந்தப் பயணத்தில் அருந்ததியர் மக்கள் மட்டுமல்லாமல் பிற சமூக மக்களும் எல்.முருகனுக்கு உற்சாகமான வரவேற்பைக் கொடுத்தனர். இதனை பெரிய மாற்றத்துக்கான விதையாகத்தான் பார்க்கிறேன்," என்கிறார்.
மேலும், `` சமூக ஒற்றுமையைப் பற்றியும் சமூக நீதியைப் பற்றியும் தி.மு.க பேசி வருகிறது. அவர்கள் வாக்கு வங்கிக்காக மட்டுமே மதத்தைப் பயன்படுத்துவார்கள். ஒரே சாதிக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு சிறிய கட்சிகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்களின் கட்சி சார்பாக அவிநாசி தொகுதியில் போட்டியிட்ட நபர், பிற சமூகங்களுக்குள் வெறுப்பை விதைத்தார். நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் எண்ணம். இப்படியொரு சிந்தனை, உள்ளுணர்வின் அடிப்படையில் வர வேண்டும்," என்கிறார்.
``அருந்ததியர் சமூகத்துக்கான பொதுப் பெயர் கோரிக்கை முன்வைக்கப்படுகிறதே?" என்றோம். `` முக்குலத்தோர் சமூகம், ஒன்றுபட்ட சமூகமாக உள்ளது. வன்னியர் சமூகத்தில் உள்ள சில பிரிவுகளை ஒன்றாக்கியுள்ளனர். அருந்ததிய மக்களின் பொதுப்பெயர் கோரிக்கை நியாயமானது. `நாங்கள் நினைத்தால்தான் நடக்கும்' எனக் கூறுவதெல்லாம், குறைவான பட்டதாரிகளைக் கொண்ட சமூகத்துக்குச் செய்கின்ற அநீதியாகத்தான் பார்க்கிறேன். பொதுப்பெயர் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமும்," என்கிறார்.
பிற செய்திகள்:
- தாலிபனின் வெற்றிக்கு உதவிய ஆப்கன் ராணுவ முறைகேடுகளும் உளவியல் சிக்கல்களும்
- ஆப்கானிஸ்தான் தோல்வியால் வல்லரசு பட்டத்தை இழக்கிறதா அமெரிக்கா?
- தாலிபன்களால் கொல்லப்படலாம் என அஞ்சினாரா அதிபர் அஷ்ரப் கனி? தப்பிச் சென்றது ஏன்?
- தாலிபனுடன் அமெரிக்கா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருப்பது என்ன?
- நடுவானில் விமானத்தில் இருந்து கீழே விழுந்த மக்கள் பற்றி ஜோ பைடன் கூறியது என்ன?
- ஆப்கானிஸ்தான் தோல்வியால் வல்லரசு பட்டத்தை இழக்கிறதா அமெரிக்கா?
- கொடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமி அஞ்சுகிறாரா? மறு விசாரணையால் என்ன நடக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












