மொராதாபாத்: முஸ்லிம்கள் வீடு வாங்கியதால் இந்துக்கள் வெளியேறுவதாக கூறுவது ஏன்?

சிவன் கோயிலில் கூடும் கூட்டம்

பட மூலாதாரம், SHAHBAZ ANWAR

படக்குறிப்பு, சிவன் கோயிலில் கூடும் கூட்டம்
    • எழுதியவர், ஷாபாஸ் அன்வர்
    • பதவி, மொராதாபாத்திலிருந்து பிபிசி இந்திக்காக

மொராதாபாத்தில் இஸ்லாமிய சமூகத்தினர் வீடுகளை வாங்கியதால் அங்கிருந்து வெளியேறுவதாக இந்துக்கள் அச்சுறுத்துவது உண்மையா?

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தில் உள்ள லாஜ்பத் நகரின் சிவன் கோயில் பி-பிளாக் காலனியில் இருந்து, பல இந்து குடும்பங்கள் வெளியேறுவதாக விடுத்துள்ள அச்சுறுத்தல் மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் தற்போது விவாதத்தில் உள்ளன.

காலனியின் சுமார் 81 இந்து குடும்பங்கள், கடந்த ஆகஸ்ட் முதல் ஒரு கோவிலில் கூட்டத்தை நடத்த ஆரம்பித்தன. பின்னர் பல இந்து அமைப்புகள் ஒவ்வொன்றாக இதில் இணைய ஆரம்பித்தன. ஒவ்வொரு நாளும் பஜ்ரங்தள், விஷ்வ இந்து பரிஷத், கர்னி சேனா, இந்து யுவ வாஹினி ஆகிய அமைப்புகளின் தொண்டர்கள் இங்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

மூன்று நாட்களுக்கு முன்பு காவல்துறை கண்காணிப்பாளரும், மாவட்ட ஆட்சியரும் அங்கு வந்து காலனி மக்களிடம் பேசினார்கள்.

"மனதில் சந்தேகம் மற்றும் அதிருப்தி உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களின் அதிருப்தியை அகற்ற, குடியிருப்போர் நல சங்கத்தை உருவாக்கும் யோசனை அளிக்கப்பட்டது. காலனியில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளும் இந்த சங்கத்தின்மூலம் தீர்க்கப்படும். அடுத்த இரண்டு - மூன்று நாட்களில் சந்திப்பை நடத்துவதாக, அவர்கள் உறுதியளித்தனர்," என மொராதாபாத் மாவட்ட ஆட்சியர் ஷைலேந்திர குமார் சிங் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அதிருப்திக்கு என்ன காரணம்

சிவன் கோயிலில் கூடும் கூட்டம்

பட மூலாதாரம், SHAHBAZ ANWAR

படக்குறிப்பு, சிவன் கோயிலில் கூடும் கூட்டம்

உண்மையில் இந்த தகராறு அனைத்தும் கட்கர் காவல் நிலையப் பகுதியின் லாஜ்பத் நகர் பகுதியில் உள்ள சிவன் கோயில் காலனி தொடர்புடையது. இந்த காலனியின் வெளிப்புறம் அமைந்துள்ள இரண்டு வீடுகளின் விற்பனை தொடர்பாக தகராறு தொடங்கியது. வீடுகளை விற்றவர்கள் இந்துக்கள், அவற்றை வாங்கியவர்கள் இஸ்லாமியர்கள்.

காலனி மக்கள் ஆகஸ்ட் 1 முதல் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க ஒவ்வொரு நாளும் சிவன் கோவிலில் கூடுகிறார்கள். அவர்களில் ஒருவர் முன்னாள் கவுன்சிலர் விவேக் ஷர்மா. விவேக் ஷர்மா சுயேச்சை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இப்போது அவர் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்துள்ளார்.

"காலனியின் நுழைவு வாயில் ஒன்றின் அருகே ஞானபிரகாஷ் ரஸ்தோகி மற்றும் மற்றொரு வாயிலுக்கு அருகே விகாஸ் மோகன் அகர்வால் ஆகியோரின் வீடுகள் இருந்தன. இவர்கள் இருவரும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள். இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு தங்கள் வீடுகளை முஸ்லிம்களுக்கு விற்றுள்ளனர். காலனியில் 81 வீடுகள் இந்துக்களுக்கு சொந்தமானது. அனைவருக்கும் பல பண்டிகைகள் உள்ளன. ஈத்-உல்-அஜா மழைக்காலத்தில் வருகிறது. அப்போது விலங்குகளின் பலிகள் நடக்கும், நாங்கள் இங்கு எப்படி வாழ முடியும்? "என்று அவர் வினவுகிறார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கர்னி சேனாவின் மாவட்ட தலைவர் யோகேந்திரா ராணாவும் விவேக் ஷர்மாவின் கூற்றை ஏற்றுக்கொள்கிறார். யோகேந்திரா ராணா கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். அவர் வேறு பல இந்து அமைப்புகளில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்திருக்கிறார்.

"இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் முஸ்லிம்கள் வீடு வாங்குவதன் பொருள் என்ன? இதற்குப்பின்னால் எதோ சதி இருக்கிறது. முஸ்லிம்கள் வீடு வாங்கினால், இந்துக்கள் ஏன் வெளியேற வேண்டும்? நாங்கள் கைரானா அல்லது காஷ்மீர் போல, இந்து குடும்பங்களை இந்த இடத்திலிருந்து போக அனுமதிக்க மாட்டோம். உள்ளூர் நிர்வாகம் கேட்கவில்லை என்றால், நாங்கள் அரசிடம் விஷயத்தை கொண்டுசெல்வோம். போராட்டம் தேவைப்பட்டால், நாங்கள் அதிலிருந்தும் பின்வாங்க மாட்டோம். வாங்கிய வீடுகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வீடுகள் விற்கப்பட்ட தினத்திலிருந்து பூட்டியே உள்ளன. ஆனால் பலமுறை இறைச்சித் துண்டுகள் முதலியவை அங்கே கிடந்ததாக காலனியில் சிலர் கூறுகின்றனர்.

இதனுடன் மொட்டைமாடிகளில் காற்றாடி பறக்கவிட வந்த இளைஞர்களை ஏசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கர்னி சேனாவின் மாவட்ட தலைவர் யோகேந்திர குமார்

பட மூலாதாரம், SHAHBAZ ANWAR

படக்குறிப்பு, கர்னி சேனாவின் மாவட்ட தலைவர் யோகேந்திர குமார்

"நான் சிவன் கோயிலுக்கு அருகில் வசிக்கிறேன். இங்குள்ள முஸ்லிம் சமுதாய மக்கள் பல மடங்கு அதிக விலைக்கு வீடுகளை வாங்குகிறார்கள். காற்றாடி பறக்கவிடும்போது ஏசுகின்றனர். ஈத் அன்று சாலைகளில் அசுத்தத்தை பரப்புகின்றனர். இது எங்கள் பாதுகாப்பு தொடர்பான விஷயம், "என்று காலனியில் வசிக்கும் ஷாலினி சதா கூறுகிறார்.

காலனியில் வசிக்கும் மற்றொரு பெண் மீனு "இங்கு அனைவரும் ஒரே குடும்பம் போல் வாழ்கின்றனர். நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம். எனவே இது போன்ற கலவரங்கள் நடப்பதையோ, எங்களை யாரும் தொந்தரவு செய்வதையோ நாங்கள் விரும்பவில்லை,"என்கிறார்.

வீட்டு சொந்தக்காரர்கள் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடையவர்களா?

"வீடுகளை வாங்குவதன் பின்னணியில் உள்ள சதி என்ன, என்பதை விசாரிக்க வேண்டும். இரண்டு வீடுகளையும் விற்றதால், நாங்கள் அனைவரும் குடிபெயர்வதற்கான முடிவை எடுத்துள்ளோம்," என்று மற்றொரு காலனி குடியிருப்பாளரான துஷார் அகர்வால் கூறுகிறார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றொரு காலனிவாசியான ரிங்கு காஷ்யப், காலனியின் வீடுகள் முஸ்லிம்களால் வாங்கப்பட்டதால் வருத்தமடைந்துள்ளார். இந்த வீடுகளை விற்றவர்கள் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் என்பது அவரது கோபத்தை அதிகமாக்கியுள்ளது.

மற்றொரு குடியிருப்பாளரான ரவி சட்டா "இந்த வீடுகள் ஏன் அதிக விலைக்கு வாங்கப்பட்டது என்பது எங்களுக்குப் புரியவில்லை. இரண்டு வீடுகளும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன,"என்றார்.

வீடு வாங்கியவர்கள் மற்றும் விற்றவர்கள், இது பற்றிய சரியான தகவலை கொடுக்க மறுக்கிறார்கள்.

இது வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் அந்தப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் ரூபாய் சதுர மீட்டர் என்ற சர்கிள் ரேட் நிலவுகிறது. இந்த இரண்டு வீடுகளில் ஒன்று 138 சதுர மீட்டரிலும் மற்றொன்று 162 சதுர மீட்டரிலும் இரண்டுமாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது.

அதன்படி, வீட்டின் விலை நிச்சயமாக கோடிகளில் இருக்கும்.

விற்பனைக்கு ஏன் தடை?

விகாஸ் மோகன் அகர்வால் விற்ற வீடு

பட மூலாதாரம், SHAHBAZ ANWAR

படக்குறிப்பு, விகாஸ் மோகன் அகர்வால் விற்ற வீடு

காலனியில் விற்கப்பட்ட ஒரு வீட்டின் உரிமையாளர் ஞான பிரகாஷ் ரஸ்தோகி.

அவருக்கு அருகிலேயே சொந்தமாக இரண்டாவது வீடும் உள்ளது. அதில் அவர் வசிக்கிறார். அவர் கடந்த மாதம் தனது வீட்டை ஒரு முஸ்லிம் மருத்துவருக்கு விற்றுள்ளார்.

அவரே இதை உறுதிப்படுத்துகிறார். பிபிசி அவரிடம் பேசியது. க்யான் பிரகாஷ் ஒரு வயதான நபர்.

"நான் விற்ற வீடு பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த வீடு சுமார் 138 சதுர மீட்டர் கொண்டது. நான் 12 வயதிலிருந்தே சங் பணியாளராக இருக்கிறேன். மோதி அவர்களே, 'அனைவருடனும், அனைவருக்கும் மேம்பாடு' என்று குறிப்பிட்டுல்ளார். நமது அரசியலமைப்பு ஒன்று, மூவர்ண கொடி ஒன்று. அப்படியிருக்கும் போது இந்த மனநிலை சரியில்லை, "என்று அவர் குறிப்பிட்டார்.

"ஒரு சமயம் ஒரு இந்து பெண்ணுக்கு அவசரகாலத்தில் சிகிச்சை தேவைப்பட்டபோது, ​​அவருக்கு இந்த முஸ்லிம் மருத்துவர் தான் சிகிச்சை அளித்தார்." என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில் கியான் பிரகாஷ், நகரத்தில் மதிப்புமிக்க சமூக பதவிகளை வகித்ததற்கான ஆதாரமாக, தனது ஆவணங்களைக் காட்டுகிறார். அவரது மகன் தீபக் ரஸ்தோகி. காலனியின் பிரதான சாலையில் பல வீடுகள் விற்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பல முஸ்லிம்களால் வாங்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

காலனியின் விற்கப்பட்ட மற்றொரு வீட்டின் உரிமையாளர் விகாஸ் மோகன் அகர்வால். விகாஸ் மோகன் அகர்வால், தானும் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடையவர் என்று கூறுகிறார்.

விகாஸ் மோகன் அகர்வால் மொராதாபாத்தில் சுகம் ஸ்வீட்ஸ் என்ற கடையின் உரிமையாளர்.

"சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நான் வீட்டை ஒருவருக்கு விற்றேன். இந்த வீடு சுமார் 162.9 சதுர மீட்டர் கொண்டது. இந்த தெருவில் சுமார் 10 வீடுகள் உள்ளன. அதில் எட்டு ஏற்கனவே விற்கப்பட்டுள்ளது. என் வீடு இதில் ஏழாவதாக விற்கப்பட்டது. நான்கு வருடங்களாக இந்த வீட்டை விற்க முயற்சித்தேன், யாரும் அதை வாங்காதபோது, ​​முஸ்லிம் சமுதாயத்தின் ஏற்றுமதியாளர் ஒருவருக்கு இதை விற்றேன். எல்லா சட்ட வேலைகளும் முடிந்துவிட்டன,"என்று அவர் தெரிவித்தார்.

இதில் என்ன தவறு

க்யான் பிரகாஷ் ரஸ்தோகி

பட மூலாதாரம், SHAHBAZ ANWAR

படக்குறிப்பு, க்யான் பிரகாஷ் ரஸ்தோகி

க்யான் பிரகாஷ் மற்றும் விகாஸ் அகர்வால் ஆகியோரின் வீடுகளை வாங்கியவர்களில் ஒரு குடும்பத்துடன் பிபிசி பேசியது.

அவரது வீட்டின் அழைப்பு மணியை அடித்தபோது,​​நாங்கள் அங்கு வந்ததற்கான காரணம் என்ன என்று வீட்டின் ஜன்னலுக்கு உள்ளேயிருந்து கேட்கப்பட்டது. அறிமுகத்திற்குப் பிறகு, சந்தேகத்துடனும் தயக்கத்துடனும் உரையாடல் தொடங்கியது. ஆனால் அவர் தனது பெயர் வெளியே வரக்கூடாது என நிபந்தனை விதித்தார்.

"ஏன் இவ்வளவு சலசலப்பு என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் இங்கு வீடு வாங்கிய முதல் முஸ்லிம் அல்ல. இங்கு வீடு வாங்குபவர்கள் அனைவரும் எங்களுக்குத் தெரிந்தவர்கள்தான். எங்களுடன் பேச ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் இங்கு வருகின்றன. ஆனால் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. எல்லாமே சட்டபூர்வமாக செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு அதிக நெருக்குதல் கொடுத்தால், நாங்கள் சட்டத்தின் உதவியைப் பெறுவோம். "என்று அவர் தெரிவித்தார்.

க்யான் பிரகாஷ் ரஸ்தோகியின் வீட்டை வாங்கியவர், ஒரு பிரபல மருத்துவர்.

"நான் என்ன பேசினாலும் என் பெயரை எழுதக்கூடாது. நான் தொழில் முறையில் ஒரு மருத்துவர். என் மனைவியும் ஒரு மருத்துவர். நாங்கள் சமூக நல்லிணக்கம் உள்ளவர்கள். சமூகப் பணி தொடர்பான பல அமைப்புகளுடன் எனக்கு தொடர்பு உள்ளது . நாங்கள் அங்கு குடியேறினால் யாராவது எதிர்ப்பார்களா என்று வீட்டின் உரிமையாளரிடம் நான் முன்பே கேட்டேன். இருப்பினும், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலர் அந்த தெருவில் வீடுகளை வாங்கியுள்ளனர்," என்று அவர் குறிப்பிட்டார்.

மற்றொரு மருத்துவர், சையது முகமது ரஸியின் க்ளினிக் அதே தெருவில் உள்ளது.

மற்றொரு முஸ்லிம் நபருக்கு பங்கு வர்த்தக அலுவலகம் அங்கு உள்ளது. அவர் அங்கு இருப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை என்று காலனி மக்கள் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் டாக்டர் ரஸியின் உறவினர் ஓவைஸ் சர்தாஜ், "நாங்கள் இங்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீடு வாங்கினோம். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்கிறோம். யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை," என்கிறார்.

இந்த விஷயம் நிலம் தொடர்பானதா, மதம் தொடர்பானதா?

க்யான் பிரகாஷ் ரஸ்தோகி விற்ற வீடு

பட மூலாதாரம், SHAHBAZ ANWAR

படக்குறிப்பு, க்யான் பிரகாஷ் ரஸ்தோகி விற்ற வீடு

லாஜ்பத் நகரின் பெண் கவுன்சிலர் பூனம் பன்சால் இந்த விஷயத்தை வேறு கோணத்தில் பார்க்கிறார்.

"அந்த பகுதியில் நில மாஃபியா செயல்படுகிறது. இவர்கள் இடைதரகர்கள் மூலம் தொடர்பு கொண்டு வீடுகளை காட்ட முயற்சி செய்கிறார்கள். பேராசை காரணமாக சிலர் இந்த வீடுகளை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு விற்றுள்ளனர்." என்று அவர் கூறினார்.

பூனம் பன்சால் பேராசை என குற்றம் சாட்டினார். ஆனால் நான்கு வருடங்களாக வீட்டை வாங்க யாரும் கிடைக்கவில்லை, எனவே வாங்க ஒப்புக்கொண்டவருக்கு அதை விற்றதாக வீட்டின் உரிமையாளர் கூறுகிறார்.

இந்த விஷயத்தின் தீர்வு குறித்துப்பேசிய பூனம் பன்சல், "நிர்வாக அதிகாரிகள் இங்கு வந்திருந்தனர். வாங்கும் மற்றும் விற்கும் நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்."என்றார்.

லாஜ்பத் நகரின் மக்கள் தொகை சுமார் 25 ஆயிரம். வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் பத்தாயிரம். மக்கள்தொகையில் 70 சதவிகிதம் இந்துக்கள், முப்பது சதவிகிதம் மக்கள் முஸ்லிம்கள்,"என்று முன்னாள் கவுன்சிலர் விவேக் ஷர்மா குறிப்பிட்டார்.

இந்த சர்ச்சைகள் காலனிக்குள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அந்த காலனியின் எதிர்புற சாலையில் பல முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :