புத்தர் சிலையை உடைத்த தாலிபன் ஆட்சியை இலங்கை ஏற்கக்கூடாது - ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், இலங்கை முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
தாலிபன், ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றியுள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை அடைவதாக இலங்கை அரசு தரப்பு கூறுகிறது.
ரணில் விக்ரமசிங்க கூறுவதென்ன?
எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து, இலங்கை அரசாங்கம் தாலிபன் ஆட்சியை ஏற்றுக்கொள்ளக்கூடாது என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
பயங்கரவாதிகளுக்கு தாலிபன்கள், ஒரு மத்திய நிலையமாக இருப்பார்களாயினும், அதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தாலிபன்களின் அபாயத்தை சிந்தித்து செயற்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகின்றார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ள உலகத்திற்கு, தற்போது மற்றுமொரு அச்சுறுத்தலை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
ஆப்கானிஸ்தானை, தாலிபன்கள் இதற்கு முன்னர் ஆட்சி செய்த காலப் பகுதியில், பயங்கரவாத குழுக்கள் பல அங்கு உருவாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
உலக வர்த்தக மையத்தின் மீதான செப்டம்பர் 11 தாக்குதலை, அல்-கய்தா, ஆப்கானிஸ்தானிலிருந்தே திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

பட மூலாதாரம், Getty Images
இவ்வாறான பின்னணியில், தாலிபன்களின் ஆட்சியின் கீழ், ஆப்கானிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களின் மத்திய நிலையமாக மாறும் என்ற சந்தேகம் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அவ்வாறு பயங்கரவாதிகளின் மத்திய நிலையமாக, ஆப்கானிஸ்தான் மாறுமாக இருந்தால், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
காபூல் நகரிலுள்ள ஆப்கானிஸ்தானிற்கான இலங்கை தூதரகத்தை அங்கிருந்து தற்போது அப்புறப்படுத்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
பாமியன் புத்தர் சிலை
ஆப்கானிஸ்தானின் பாமியன் புத்தர் சிலை தாலிபன்களினால் உடைக்கப்பட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தாhர்.
அவ்வாறு புத்தர் சிலையை உடைத்த தாலிபன்களை ஏற்றுக்கொண்டால், இந்த வலயத்தில் இல்லாது செய்த பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் நிலைமை ஏற்படும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் பாமியன் பள்ளத் தாக்கில் காணப்பட்ட மிக பழமை வாய்ந்த உலகிலேயே மிக பெரிய புத்தர் சிலையை, தாலிபன்கள் 2001ம் ஆண்டு தகர்த்தியிருந்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த புத்தர் சிலை உடைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
இவ்வாறான நிலையில், தாலிபன்களின் ஆட்சியின் கீழ் பௌத்த மதத்திற்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்பட்டு வருகின்ற நிலையில், இது தொடர்பில் தாலிபன்களின் ஊடகப் பேச்சாளர் சுஹைல் ஷாஹீன் இலங்கையின் பிரபல ஆங்கில பத்திரிகையான டெய்லி மிரருக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
தாலிபன்களின் ஆட்சியின் கீழ், ஆப்கானிஸ்தானிலுள்ள பௌத்த மதத் தலங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாது என அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின், அதனை தான் முழுமையாக மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை அடைவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவிக்கின்றார்.

பட மூலாதாரம், ஜனாதிபதி ஊடகப் பிரிவு
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
சார்க் வலயத்திலுள்ள சகோதர நாடு என்ற அடிப்படையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து உணர்வுப்பூர்வமாக அவதானித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து, தாம் அமைச்சரவை இதுவரை எதுவும் கலந்துரையாடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த விவகாரம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை விரைவில் தெளிவுப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியுடன், இலங்கை பிரதமர் பேச்சு
ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் நிலைமைகள் குறித்து, ஆராய்ந்திருந்ததுடன், இலங்கையின் ஆதரவு ஆப்கானிஸ்தானுக்கு என்றும் உள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












