ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள்: அமெரிக்கா, ரஷ்யா, சீனாவின் 'மகா ஆட்டம்' - - என்ன நடக்கப் போகிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
காபூல் நகரத்தைக் கைப்பற்றி தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததும் அண்டை நாடுகள் அனைத்தும் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்திருக்கின்றன.
ஆனால் சீனாவுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. தாலிபன்களுடன் நட்புறவை விரும்புவதாக அந்த நாடு அறிவித்திருக்கிறது. இது இன்று எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஒரு மாதத்துக்கு முன்பே தாலிபன்களின் அரசியல் பிரிவு தலைவர் சீனாவுக்குச் சென்று அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து வந்தார்.
தனது அண்டை நாட்டில் இருந்து மேற்குலக நாடுகளின் படைகள் திடீரென புறப்பட்டுச் சென்றிருப்பது ஒரு வகையில் சீனாவுக்கு மகிழ்ச்சியளிக்கவே செய்யும். ஆனால் அமெரிக்கா புறப்படுச் சென்றுவிட்டதால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடனேயே சீனா செயல்பட்டு வருகிறது.
ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளைப் போல ஆப்கானிஸ்தானுக்குச் சென்று சீனா ஒருபோதும் சண்டையிட்டதில்லை. ஆனால் சுமார் 70 கிலோ மீட்டர் நீளமான எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
மிகமிகக் குறைந்த நீளம் கொண்ட எல்லைதான் இது. ஆனாலும் இது சீனாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த பகுதி ஜின்ஜியாங் மாகாணத்தை ஒட்டிய எல்லையில் அமைந்திருக்கிறது. இது வீகர் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி.
வீட்டு வாசலுக்கு அருகே ஓர் அடிப்படைவாத ஆட்சி தோன்றியிருப்பது உள்நாட்டில் சிக்கலை ஏற்படுத்தும் என்ற கவலை சீனாவுக்கு இருக்கிறது.
ஏனென்றால் உள்நாட்டில் வீகர் இஸ்லாமியர்கள் பிரச்னை எப்போதும் புகைந்து கொண்டே இருக்கிறது. அருகே தாலிபன்கள் இருப்பது இதை மேலும் சிக்கலாக்கக்கூடும்.
சீனாவின் அரசு ஊடகங்கள் ஆப்கானிஸ்தானைப் பற்றிக் குறிப்பிடும்போது "வல்லரசுகளின் கல்லறை" என்று கூறுகின்றன. அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளைப் பின்பற்றி படுகுழியில் விழுந்துவிடக்கூடாது என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் வெளியிட்ட தலையங்கம் கூறுகிறது.

பட மூலாதாரம், Reuters
இப்போதைக்கு வீகர் இஸ்லாமியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கக்கூடாது என்ற அடிப்படையான நிபந்தனையுடன்தான் தாலிபன்களுக்கு சீனா ஆதரவளிக்கும் என்று நம்பப்படுகிறது.
ரஷ்யாவுக்கு ஏற்பட்ட ஆறாத வடு

1980-களில் ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன்களுடன் சண்டையிட்டு ஆறாத வடுக்களைப் பெற்ற அனுபவம் ரஷ்யாவுக்கு உண்டு. இன்று அமெரிக்காவுக்கு ஏற்பட்டதைப் போன்றதொரு நிலைமை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.
1970-களின் இறுதியில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கைத் தடுப்பதற்காக அமெரிக்கா, செளதி அரேபியா, துருக்கி, பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முஜாஹிதீன்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்தன.
ஆயுதங்களுடன் முஜாஹிதீன்களின் கெரில்லா போர் முறைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் சோவியத் ஒன்றியப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டே வெளியேற நேர்ந்தது. இந்தப் போரால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 50 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளானார்கள். அந்தக் காலகட்டத்தில் உலகமெல்லாம் இருந்த அகதிகளில் இது பாதி எண்ணிக்கை.
எந்த அடிப்படை வசதியும் இல்லாத அகதி முகாம்களில் மக்கள் அடைபட்டிருந்தனர். சிறு கூடாரங்களிலும், வெட்டவெளியிலும் படுத்துறங்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. பெற்றோரை இழந்த பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் மதரஸாக்களில் உறவுகள் அற்ற அனாதைகளாகவே வளர்ந்தனர். பந்தபாசம் ஏதுமின்றி இளைஞர்களாகி நின்றபோது, அவர்கள் மீண்டும் ஆயுதங்களை தூக்கினர். அவர்கள்தான் இன்றுவரை ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரஷ்யாவில் இன்றைக்கும் தாலிபன் இயக்கம் தடை செய்ப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருக்கிறது. ஆனாலும் பழைய வடுக்களை எல்லாம் மறந்து இன்று ரஷ்யா தாலிபன்களை ஆதரிக்கிறது. காபூலில் பேச்சுவார்த்தையும் நடத்தியிருக்கிறது.
அஷ்ரப் கானியை விட தாலிபன்கள் நன்றாக ஆட்சி செய்வார்கள் என்று ரஷ்யத் தூதர் கூறியிருப்பதால், அந்நாட்டின் முழு ஆசியும் தாலிபன்களுக்கு கிடைக்கும் என்பது புலனாகிறது.
பாகிஸ்தானின் நிலை என்ன?
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்த காலத்திலேயே தாலிபன்களுக்கு ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் மீது தொடர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. ஆனால் பாகிஸ்தான் அதை எப்போதும் ஒப்புக் கொண்டதில்லை.
ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியம் நடத்திய உக்கிரமான போரின்போது வெளியேறிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு பாகிஸ்தான். 1990-களின் தொடக்கத்தில் தாலிபன் இயக்கத்துக்கு பாகிஸ்தான் பேராதரவு கொடுத்தது. ஆனால் பிற்பாடு இரானுக்கும் பாகிஸ்தானுக்கும் தாலிபன்களுடன் சிக்கலான உறவே நீடித்து வந்திருக்கிறது.
ஆனால் காபூலின் எல்லைக்கு தாலிபன்கள் வந்த செய்தி பரவியதுமே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதை ஆதரிப்பது போன்ற கருத்தை வெளியிட்டார். அடிமைத் தனத்தின் சங்கிலிகளை தாலிபன்கள் உடைத்து எறிந்துவிட்டதாக அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் புதிய உத்தி
அமெரிக்கா திடீரென ஆப்கானிஸ்தானை கைவிட்டுச் சென்றது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பலரும் கவலை தெரிவிக்கின்றனர். இது நம்பியவர்களுக்குச் செய்யும் துரோகம் என்றுகூட விமர்சிக்கின்றனர்.
நான்கு அதிபர்கள் 20 ஆண்டுகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் செலவு செய்து மீண்டும் தாலிபன்களிடமே ஆட்சியைக் கொடுப்பதா என்றும் கேள்வி எழுப்புகின்றனார்.
ஆனால் இந்தக் கேள்விக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது உரையில் தெளிவான பதிலைக் கூறியிருக்கிறார். வேறு நாட்டைக் கட்டியெழுப்புவது அமெரிக்காவின் வேலையில்லை என்று கூறியிருக்கும் அவர், அமெரிக்க மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்தப் போர் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்கா, தகுதிவாய்ந்த மக்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் அவர்களுக்கு உதவி செய்யும் என்று கூறியிருக்கிறது. அகதிகளுக்கு சுமார் 3.7 ஆயிரம் கோடி ரூபாய் உதவுவதாகவும் கூறியிருக்கிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிச் சென்றிருக்கலாம். ஆனால் முழுமையாகக் கைவிட்டுச் செல்ல முடியாது என்கிறார் பிரிட்டிஷ் உளவு அமைப்பைச் சேர்ந்த ராபர்ட் ஹன்னிகன்.

பட மூலாதாரம், Getty Images
இந்த முக்கிய நாடுகளின் விருப்பங்களுக்கு இடையே சிக்கிய நாடு ஆப்கானிஸ்தான் என்பதை அதன் வரலாறு நமக்கு உணர்த்துகிறது என்கிறார் ஹன்னிகன்
"இணைந்து பணியாற்றுவதற்குக் கடினமான ரஷ்யா மற்றும் சீனாவைப் போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்கு தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய தருணம் அமெரிக்காவுக்கு வந்திருக்கிறது." என்கிறார் அவர்.
"காலநிலை மாற்றம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அனைவருக்கும் முக்கியமான விவகாரங்களில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் ஜோ பைடன் நிர்வாகம் தெளிவாக இருக்கிறது"
19-ஆம் நூற்றாண்டில் தங்களது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காக பிரிட்டனும் ரஷ்யாவும் ஆப்கானிஸ்தானில் மோதிக் கொண்டன. அதை மகா ஆட்டம் என்று அழைத்தார்கள்.
அந்த ஆட்டம் இன்றும் நீடித்திருக்கும் ஒரு விளையாட்டுதான். ஆட்டக்காரர்கள் அதிகரித்திருக்கிறார்கள். மேற்குலக நாடுகளுக்கு சோர்வு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஆப்கானிஸ்தான் இன்றைக்கும் முக்கியமானதுதான்.
பிற செய்திகள்:
- தாலிபன் வெற்றிக்குப் பிந்தைய நாளில் காபூல் வாழ்க்கை - நேரடி தகவல்
- பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆனந்தக் கண்ணன் திடீர் மறைவு - என்ன ஆனது?
- மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி: அவசரப்பட்டு விட்டாரா ராமதாஸ்?
- முத்த வரலாறு: மனிதர்கள் ஏன் முத்தம் கொடுக்கிறார்கள்?
- கொரோனா வைரஸ் ஆடும் பரமபதம் - கவலையில் அமெரிக்க மருத்துவர்கள்
- ஆப்கானிஸ்தான் அதிர்ந்து கொண்டிருந்த நாளில் காபூல் வானில் போராடிய இந்திய விமானம்
- ஆப்கன் ஆபத்தை விவரிக்கும் காட்சிகள் - ஓடுபாதையில் புறப்பட்ட விமானத்தில் ஏறிய மக்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












