"கொரோனா வைரஸின் பரமபத ஆட்டத்தில் தோல்வியுற்றோம்" - மனம் திறக்கும் அமெரிக்க மருத்துவர்கள்

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 6.20 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். 3.20 கோடி பேர் அந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸுக்கு எதிரான களத்தில் நேரடியாக இருப்பவர்கள் சுகாதார ஊழியர்கள். இங்கு பலருக்கும் கடந்த சில மாதங்களாக நடக்கும் சம்பவங்கள், பார்த்துப் பழகிப் போன ஒன்றாகி விட்டன.
மருத்துவமனைகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள், வைரஸ் தொடர்பாக தீவிரமாக பரவி வரும் தவறான தகவல்கள் என இந்த ஆண்டு நடப்பவை அனைத்தையும் கடந்த ஆண்டு கோடை பருவத்திலேயே இந்த மருத்துவர்கள் பார்த்து விட்டனர்.
ஆனால், இந்த ஆண்டு வைரஸுக்கு எதிரான நடவடிக்கையாக அறிமுகமான தடுப்பூசிகள் உள்ளன. அவை ஏதேனும் மாற்றத்தை செய்துள்ளனவா? தடுப்பூசி வந்த பிறகு வைரஸின் பாதிப்பு குறைந்து விட்டதாக மருத்துவர்கள் உணர்கிறார்களா?
அமெரிக்காவின் பல்வேறு தொழில்முறை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் பலரிடம் நாங்கள் பேசினோம்.
கொரோனா பெருந்தொற்றுடன் கடந்த 18 மாதங்களாக எப்படி இவர்கள் போராடி வந்தனர் என்ற கேள்விகளை முன்வைத்தோம்.
அவர்கள் அளித்த பதில்கள் இதோ...


கடந்த ஆண்டு பல மாற்றங்கள் நடந்தன. பல மாறவில்லை. கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் நான் வேலைக்கு செல்லும்போது எப்போது கொரோனா தொற்று ஏற்படுமோ, எனது குடும்பத்தாருக்கு வைரஸை பரப்புவேனோ என்ற அச்சம் இருந்தது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான மாதங்களில் நிலைமையில் முன்னேற்றம் காணப்பட்டது. மருத்துவமனைகளில் பழையபடி குடும்பங்கள் வரத் தொடங்கின. மருத்துவமனைகள், நோயாளிகள் சாதகமாகவே காணப்பட்டனர். கோடைப் பருவத்தை ஆவலுடன் எதிர்கொண்டோம். துரதிருஷ்டவசமாக டெல்டா திரிபு, அதை கையாள்வதில் நிலவிய கொள்கை தவறுகள், மீண்டும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கே நிலைமை சென்று விட்டது போல உணர்கிறேன்.
சொல்லப்போனால் நான் விரக்தியடைந்து விட்டேன். கடந்த ஆண்டு தடுப்பூசி ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. வைரஸ் பாதிப்புகள் அதிகமானபோது நிலைமையை சமாளிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
இம்முறை கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருவதைத் தடுக்கும் வகையில் நம்மிடையே தடுப்பூசி உள்ளது. ஆனாலும், சில மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் வைரஸ் பாதிப்புகளுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வெகு சிலரே இப்போது முக கவசம் அணிகிறார்கள். அப்படி தொடர்ந்தால், வேறு சில பருவகால வைரஸ் காய்ச்சல்களோ அதனுடன் சேர்ந்து டெல்டா திரிபு தாக்கமோ ஏற்படலாம் என நான் அஞ்சுகிறேன்.
கடந்த ஆண்டு மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்தபோது நமது அரசியல் தலைவர்கள் கொள்கை ரீதியாக எதிர்வினையாற்றினர். ஆனால், இம்முறை அப்படி செய்யவில்லை. எங்களுடைய டெக்சாஸ் மாகாண ஆளுநர், தடுப்பூசி போடாதவர்கள் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கினார்.
உண்மையில் பெருந்தொற்றை பயன்படுத்தி செய்யப்படும் அரசியலை தவிர்க்க ஏதேனும் வழி கிடைக்குமா என நான் எதிர்பார்க்கிறேன். அது நடந்தால், உயிர்களைக் குடிக்கும் கொரோனா பாதிப்பு, சிறு பாதிப்பை ஏற்படுத்தி மறையும் வைரஸாக மாறக்கூடும்.


கொரோனா பெருந்தொற்றை இன்னும் நாம் கட்டுப்படுத்தவில்லை. அதை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. அனேகமாக நாம் அடுத்த வைரஸ் எழுச்சியை நோக்கி செல்கிறோம். மற்ற இடங்களில் இல்லையென்றாலும் அமெரிக்காவில் அப்படித்தான் உள்ளது.
மற்ற மாகாணங்களில் கொரோனா பாதிப்பு நோயாளிகள் அதிகமாக சேருவதை பார்த்து மாசாசூசெட்ஸில் மருத்துவமனைகளை தயார்நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தடுப்பூசி எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் நாம் போடாமல் தவற விட்டதுதான் இதற்கு மூல காரணம் என நான் கருதுகிறேன். இது ஒரு போட்டி. அதில் நாம் தோல்வி அடைந்து விட்டோம். ஏனென்றால் டெல்டா திரிபுக்கு எதிர்வினையாற்றும் அளவுக்கு நமது தடுப்பூசி வலுவாக இருக்கவில்லை. அந்த திரிபு பற்றி நமக்கு இன்னும் அதிகமாகத் தெரியவில்லை.
கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும் கூட மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த புதிய திரிபு பற்றி, ஆரம்பத்திலேயே வைரஸ் தடுப்பு மருந்துக்கான ஆய்வின்போது நாம் ஆராயவில்லை. அதனால்தான் தற்போது ஃபைசர், மாடர்னா போன்ற தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், டெல்டா திரிபுக்காக தனியாக ஒரு பூஸ்டர் மருந்தை தயாரிக்க பரிசீலித்து வருகின்றன.
நாங்கள் காண்பதிலேயே மிகவும் மோசமான பாதிப்பு கர்ப்பிணிகளுக்கு ஏற்படுவதுதான். அது மிகவும் வலியை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு தடுப்பூசி பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், ஒரு மருத்துவராக அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என நான் பரிந்துரைப்பேன். மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு முன்பு போல சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைவதைத் தவிர்க்கலாம்.
நாம்தான் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.


2020 ஏப்ரல் முதல் பல விஷயங்கள் நடந்து விட்டன. கொரோனா பெருந்தொற்று மோசமாக இருந்த காலகட்டத்தில் தீவிர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றிய செவிலியர் என்ற முறையில் அந்த தருணங்கள் என்னை கடுமையாக பாதித்தன. நல்ல வேளையாக கோடை பருவத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இப்போது நிலைமை மாறி விட்டதால் நியூயார்க் நகரம் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
எப்போது இந்த நிலைமையில் இருந்து வெளிவருவோம் என்று எனக்கு உறுத்திக் கொண்டே இருக்கும். எனவே டெக்சாஸில் ஒரு நகரை தேர்வு செய்து அங்கு செல்ல முடிவெடுத்தேன். அப்படித்தான் கோடை முடிவில் 2020ஆம் வருட கடைசி காலத்தில் எல் பாசோவுக்கு வந்தேன். இங்கு ஒப்பந்த செவிலியர் பணியில் சேர்ந்தேன்.
ஆனால், எங்கு நிலைமை இயல்பாக இருக்கும் என நம்பினேனோ அங்கு கொரோனா பாதிப்பு வேறு ரூபத்தில் வந்தது. சென்ற சில நாட்களிலேயே எல் பாசோ நகரம் கொரோனா பாதிப்பின் மைய நகராக மாறியது. ஆயிரக்கணக்கானோர் வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் மீண்டும் நியூயார்க் நகருக்கே திரும்பி வந்து முழு நேர செவிலியர் பணியில் சேர்ந்தேன். இப்போது இங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வருவோரின் முகங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறேன். கொரோனா தடுப்பூசி போட அவர்கள் உற்சாகத்துடன் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை தங்களுக்குள்ளான வழக்கமாக ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல்லலாம் என அவர்கள் நம்புகிறார்கள்.
இந்த முயற்சிகளுக்கு மத்தியில்தான் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மருத்துவனைகளில் மீண்டும் ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. சுகாதார ஊழியர்கள் சமாளிக்க முடியாத நிலைக்கு செல்வதை பார்க்க முடிகிறது.
இந்த ஆண்டு கடைசியில் எப்போது குளிர்காலம் வரும் என அனைவரும் காத்திருக்கிறார்கள். வழக்கமாக பருவகால வைரஸ் கோடையின் கடைசியில் வரும். ஆனால், அதற்கு முன்பே மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதைப் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
கொரோனா தொடர்பான தவறான தகவல்கள், உள்நோக்கத்துடன் பரப்பப்படும் பிரசாரம், இன்டர்நெட் மூலம் வைரஸ் பற்றி பகிரப்படும் தவறான தகவல்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன். கடைசியில் இவை எல்லாம் நமது நாட்டைத்தான் பாதிக்கும் என்பதை நான் அறிவேன்.


கடந்த ஆண்டு நான் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதிலேயே மும்முரமாக இருந்தேன். ஒரு மருத்துவராக இருப்பதால், எனக்கு ஏற்படும் வைரஸை எனது மனைவி, குழந்தைகளிடம் பரவச் செய்வேனோ என்று மிகவும் அஞ்சினேன். காரணம், நான் அப்போது ஆயிரக்கணக்கான மருத்துவ நோயாளிகளை கவனித்துக் கொண்டிருந்தேன்.
நல்லவேளையாக தடுப்பூசிகள் சற்றே ஆறுதலான நிலையை தந்திருக்கின்றன. அதன் மூலம் வைரஸிடம் இருந்து நம்மால் பாதுகாக்க முடிந்துள்ளது. ஆனால், அது மட்டுமே வைரஸை ஒழிக்காது. அப்படியென்றால் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருவதும் உயிரிழப்பதும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் இதைத்தான் ஆறுதலான நடவடிக்கையாக நான் எண்ணிக் கொள்கிறேன்.
பிற செய்திகள்:
- மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி: அவசரப்பட்டு விட்டாரா ராமதாஸ்?
- மலேசிய அரசியல் நெருக்கடி: அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்
- ஆப்கானிஸ்தானை ஆளப் போகும் தாலிபன் தலைவர் யார்? - அவர் எப்படிச் செயல்படுவார்?
- வியட்நாமுடன் ஒப்பிடப்படும் ஆப்கானிஸ்தான்: அமெரிக்கா, ரஷ்யாவின் வழக்கமே இதுதானா?
- கொரோனா பரவலுக்கு மத்தியில் இலங்கை அமைச்சரவையில் மாற்றம்
- 90ஸ் கிட்ஸ் நீங்களென்றால் இந்த பிரச்னை உங்களுக்கு உள்ளதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












