90s Kids அதிர்ஷ்டம் இல்லாதவர்களா? சோதனைகளை எப்படி கடப்பார்கள்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பாலா அடாமோ இடியோட்டா
- பதவி, பிபிசி நியூஸ், பிரேசில்
மில்லெனியல்ஸ் - பொதுவாக 1990களிலும் புத்தாயிரத்தின் தொடக்கமான 2000ஆம் ஆண்டுகளின் தொடக்க வருடங்களுக்கும் மத்தியில் பிறந்தவர்கள் '90ஸ் கிட்ஸ்' என பரவலாக அழைக்கப்படுகிறார்கள்.
கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் ஃபோன்கள், இணையம், உலகளாவிய தகவல் பரிமாற்றம் போன்றவற்றை சிறு வயதிலிருந்தே பார்த்தவர்கள் இவர்கள். இந்தத் தலைமுறையினருக்குத் தங்கள் மீதே அதீத எதிர்பார்ப்பு இருந்தது.
தங்கள் பெற்றோருடன் ஒப்பிடும்போது இவர்கள் கூடுதல் ஆண்டுகள் படித்திருந்தனர். இவர்களின் சமூக அமைப்பும் பன்முகத்தன்மை வாய்ந்தது. ஆகவே, 1981க்கும் 1996க்கும் நடுவில் பிறந்த மில்லினியல் தலைமுறை, முந்தைய தலைமுறையினரை விட செழிப்பாகவும் உலகளாவிய தாக்கத்துடனும் இருக்கும் என்று கனவு கண்டது.
ஆனால், தங்களின் மூதாதையர்களோடு ஒப்பிடும்போது மில்லினியல்களுக்குக் கடன் அதிகம் என்றும், இவர்கள் நெடுங்காலம் பெற்றோர்களின் வீடுகளிலேயே வசிக்கிறார்கள் எனவும் சர்வதேச கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சொத்து, கார் போன்றவற்றை வாங்குவதுபோன்ற ஒரு வாழ்வியல் மைல்கல்லை அடைவதற்கும் இவர்கள் அதிக காலம் எடுத்துக்கொள்கிறார்கள்.
எதிர்பார்ப்புகளுக்கும் நிஜத்துக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருப்பதால், "தோற்றுப்போனவர்கள்", "சோம்பேறிகள்", "பெற்றோரைச் சார்ந்து இருப்பவர்கள்" என்று சமூக ஊடகங்களும் மீம்களும் இவர்களைக் கிண்டலடிக்கின்றன. இது போதாதென்று இவர்களுக்குப் பின்னால் வந்த ஜென்-இஸட் தலைமுறை, இவர்களை "க்ரிஞ்ச்" என்று கடந்துபோகிறது.
மில்லினியல்களின் பிரச்சனை என்ன? அவர்கள் உண்மையிலேயே தோற்றுப்போனவர்கள்தானா?
நியாயமற்ற குற்றச்சாட்டு
பல ஆய்வாளர்கள் தவறு இவர்கள் மீது இல்லை என்கிறார்கள்.
"ஸ்மார்ட்ஃபோன்களும் இணைய இணைப்பும் வந்த ஆரம்ப காலகட்டங்களில் இவர்கள் பெரியவர்களாக வளர்ந்தார்கள். ஆகவே, இந்த உலகத்தில் தன் பங்கு என்ன என்பதைப் பற்றிய தெளிவான, உயர்ந்த எண்ணங்களை வடிவமைத்துக்கொள்ள இவர்களால் முடிந்தது. அதற்குக் காலமும் இடமும் உதவி செய்தன. இவர்களது பெற்றோர்களும் நீங்கள் வெற்றிபெறுவீர்கள் என்று இவர்களிடம் சொன்னார்கள். முந்தைய தலைமுறையினரோடு ஒப்பிடும்போது, பெரிய அளவிலான தொடர்புகளும் தாக்கமும் இவர்களுக்குக் கிடைத்தன" என்கிறார் ஜேஸன் டார்சி. இவர், மில்லினியல்கள் மற்றும் ஜென் இஸட்டைச் சேர்ந்தவர்களின் உலகளாவிய பழக்கங்களை ஆராயும் தலைமுறை இயக்கவியல் மையத்தின் தலைவராக இருக்கிறார்.
வரலாற்றிலேயே மிகவும் துரதிருஷ்டவசமான தலைமுறை

பட மூலாதாரம், Getty Images
ஆனால் 2008-2009 பொருளாதார நெருக்கடிக்குப் பின் வந்த பிரச்சனைகள், கோவிட்-19 பெருந்தொற்று போன்ற பல முக்கிய பின்னடைவுகளையும் இவர்கள் சந்தித்தார்கள் என்கிறார் டார்சி. "வெற்றிபெறுவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருந்தும் பணவீக்கம், ஊதியத் தேக்கம், பணத்தேவைகள் அதிகரிப்பது, பணிநீக்கம் போன்ற பல பிரச்சனைகளையும் அவர்கள் சந்திக்கவேண்டியிருந்தது" என்கிறார்.
புள்ளியியல் தரவுகளும் இவரது வாதத்தையே முன்வைக்கின்றன.
அமெரிக்காவின் வாஷிங்க்டன் போஸ்டில் 2020ல் வந்த ஒரு கட்டுரை, "அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துரதிருஷ்டவசமான தலைமுறை" என்று மில்லினியல்களைக் குறிப்பிடுகிறது.
"இப்போது உள்ள கோவிட்-19 பெருந்தொற்றை வைத்துப் பார்த்தால், வேறு எந்த அமெரிக்கத் தலைமுறையோடும் ஒப்பிடும்போது மில்லினியல் தலைமுறையின் பொருளாதார வளர்ச்சிதான் மிகவும் மெதுவானது" என்கிறது அந்தக் கட்டுரை. "இந்த பொருளாதார இழப்பின் வடு அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். குறைந்த வருமானம், அதனால் குறையும் செழிப்பு, வீடு வாங்குவதில் தாமதம் போன்ற பல வழிகளில் அது வெளிப்படும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தலைமுறைக்குமான மைல்கல்
ஒவ்வொரு தலைமுறைக்கும் "மாற்றம் தரும் தருணம்" என்பது உண்டு என்கிறார் டார்சி. அந்தந்த தலைமுறையினரின் பொதுவான அச்சங்கள், கல்விமுறை, வாழ்க்கைமுறை, எதிர்காலத்தைப் பற்றிய புரிந்துணர்வு எல்லாவற்றையும் இதுதான் தீர்மானிக்கிறது.
உதாரணமாக, 1928க்கும் 1945க்கும் நடுவில் பிறந்த "மௌனத் தலைமுறை" இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்டது.
பேபி பூமர்கள் (1946-64) வியட்நாம் போரையும் நிலவில் மனிதன் கால் பதித்ததையும் பார்த்தார்கள்.
எக்ஸ் தலைமுறையை (1965-1980) சேர்ந்தவர்கள் பனிப்போரின் முடிவையும் ஹெச்.ஐ.வி நோயின் பரவலையும் பார்த்தார்கள்.
1997க்கும் 2012க்கும் நடுவில் பிறந்த ஜென் இஸட், கோவிட்-19 அனுபவத்தால் பாதிக்கப்படும்.
இயற்கைப் பேரிடர்கள், கொள்ளைநோய்கள், அரசியல் நிகழ்வுகள் போன்ற சிறு நிகழ்ச்சிகளாலும் தலைமுறைகள் பாதிக்கப்படலாம்.
மில்லியல்களின் தனித்துவம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
"கல்விக்கட்டணம் உலக அளவில் உயர்ந்தது, வீடுகளின் விலை அதிகரித்தது ஆகியவை முக்கியமான நிகழ்வுகள். சிறு நிகழ்வுகள்கூட உலகம் முழுக்க செய்தியாகப் பரவின, நாம் இணைய இணைப்பு பெற்றிருக்காவிட்டால் இவற்றை யாரும் கண்டுகொண்டிருக்கவே மாட்டார்கள். ஜென் இஸட் தலைமுறையினரின் வருகைக்கு முன்பு, மில்லினியல் ஒரே மாதிரியானவர்களாக இருந்தார்கள். எல்லாரும் ஒன்றுதான் என்று இதைப் புரிந்துகொள்ளக் கூடாது. தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு, கலாச்சாரம், அரசியல் போன்றவற்றில் அவர்களுக்கு ஒத்த கருத்துக்கள் இருந்தன. பொருளாதாரங்கள் இப்போது இணைக்கப்பட்டுள்ளன, வங்கி அமைப்புகள், வணிக அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பெரிய பன்னாட்டு நிறுவனங்களாக இருக்கின்றன. இந்த இணைப்பு மனப்பான்மை முந்தைய தலைமுறையினருக்கு இருக்கவில்லை" என்கிறார் டார்சி.
தகவல் பரவலாலும் இந்த இணைப்பாலும் மில்லினியல்களுக்கு எல்லா நிகழ்வுகளும் தெரிகின்றன. உள்ளூர் நிகழ்வுகள்கூட உலக நிகழ்வுகளாக மாறுகின்றன. "நான் உலகப் போர் போன்ற நிகழ்வுகளைப் பற்றிப் பேசவில்லை. ஒரு நாட்டில் நடக்கும் வங்கிப் பிரச்சனை கூட மற்ற நாடுகளைத் தாக்குகிறது. அது பற்றிய தகவல் பரவுகிறது. இது முக்கியமானது" என்கிறார் டார்சி.
"பகிரப்படும் பொருளாதாரமும்" வேலையில் பாதுகாப்பில்லாத உணர்வும்

பட மூலாதாரம், Getty Images
தங்கள் பெற்றோருடைய தலைமுறையோடு ஒப்பிடும்போது மில்லினியல்கள் வேலை பற்றிய அதீத பாதுகாப்பற்ற உணர்விலேயே இருக்கிறார்கள்.
நிதி சமரசங்கள், தொழிலாளிகளுக்கான விதிமுறைகள் நெகிழ்த்தப்பட்டது, சந்தைப் போட்டி, பகிரப்படும் பொருளாதாரம் ஆகியவை மில்லினியல்களின் வேலையுடைய தன்மையை மாற்றியிருக்கின்றன. தேவைப்படும்படி வளைத்துக்கொள்ளவும் படைப்பூக்கத்தோடு செயல்படவும் அனுமதிக்கும் அதே நேரத்தில், அந்த வேலை எப்போதுவேண்டுமானாலும் போகலாம் என்ற எண்ணத்தையும் அது கொடுத்திருக்கிறது.
"முந்தைய தலைமுறையோடு ஒப்பிடும்போது மில்லியனியல்களின் முதலாளி- தொழிலாளி ஒப்பந்தம் வித்தியாசமானது. வாழ்நாள் முழுவதும் ஒரே நிறுவனத்திடம், ஒரே முதலாளியிடம் வேலை செய்யவேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை. அதைத்தான் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. தங்கள் வேலையைத் தாங்களே வடிவமைத்துகொள்ளும் சுதந்திரமும் உற்சாகமும் அவர்களுக்கு இருக்கிறது என்றாலும் ஒவ்வொரு முறை வேலையை மாற்றும்போதும் அவர்களுக்குக் கிடைக்கும் காப்பீடு உள்ளிட்ட பயன்கள் மாறுகின்றன. ஆகவே பொறுப்பு அவர்களிடமே வந்துவிடுகிறது. என்னால் முழுவதுமாக பதில் சொல்ல முடியவில்லை. புதிய கண்டுபிடிப்புகளில் நன்மைகளும் தீமைகளும் உண்டு. தீமைகள் ஒரு தலைமுறையை அதிகமாக பாதித்துவிடுகின்றன. சில தலைமுறைகள் சற்று கூடுதலாகவே தாக்கப்படுகின்றன" என்கிறார் டார்சி.
இதுபோன்ற பின்னடைவுகள் அவர்களுக்கு எரிச்சலூட்டுகின்றன என்று அவர் தெரிவிக்கிறார்.
"இந்த சவால்களால் வேலை, திருமணம், குழந்தை, வீடு, சேமிப்பு போன்ற பல விஷயங்கள் தள்ளிப் போனதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். தங்கள் இலக்குகள் அமுக்கப்படுவதாக அவர்கள் உணர ஆரம்பித்தார்கள். கொடுத்துவைத்த மில்லினியல்கள்கூட தங்கள் பாதையில் தடைகள் பல இருப்பதை உணர்ந்தார்கள். தங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களால், முந்தைய தலைமுறையைவிட எல்லாவற்றுக்கும் சிரமப்படவேண்டியிருப்பதாக அவர்களுக்குத் தோன்றியது என்று சொல்லலாம். அதனால் அவர்கள் எல்லாவற்றையும் எட்டிப் பிடிக்க வேண்டியிருந்தது" என்கிறார்.
மில்லினியல்களின் பலம்

பட மூலாதாரம், Getty Images
மில்லினியல்களின் வாழ்வில் எல்லாமே மோசம் என்று சொல்லிவிட முடியாது. பன்முகத்தன்மையை அவர்கள் மிகவும் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வதாகவும், தங்கள் நுகர்வுப் பழக்கங்களைப் பற்றிய தன்னுணர்வோடு அவர்கள் செயல்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாலின சம்பள ஏற்றத்தாழ்வு, வேலைவாய்ப்பு ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு எதிராக செயலாற்றிய முதல் தலைமுறை மில்லினியல் தலைமுறைதான். இதைவிட ஆழமான மாற்றங்கள் ஜென் இஸட்டிடம் விடப்பட்டுவிட்டதாக டார்சி போன்ற நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மில்லினியல்கள் தொழில்முனைப்பை மதிக்கும் தலைமுறையினர். "தொழில் முனைவோரை ஆதர்சமாகவும் ஆசான்களாகவும் பார்க்கத் தொடங்கிய முதல் தலைமுறை இதுதான். மற்ற தலைமுறையினர், வெற்றிபெற்ற பெரிய நிறுவனங்களின் அதிபர்களையும் அரசுத் தலைவர்களையுமே அப்படி நினைத்தார்கள். தொழில்முனைவோரை இணையம் தூக்கிவைத்துக் கொண்டாடியபோது மில்லியனியல்கள் வளர்ந்து பெரியவர்களானார்கள். குறைவான முதலீட்டோடு இணையத்திலேயே அவர்களால் தொழில் தொடங்க முடியும். வேறு ஒரு வேலையில் இருந்துகொண்டே கூடுதல் வருமானத்துக்காக இவர்கள் தனித் தொழில்களைத் தொடங்கினார்கள்" என்கிறார் டார்சி.
இவரது ஆராய்ச்சியில், வயது முதிர்ந்த மில்லினியல்கள் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்ள நினைப்பதையும் கண்டறிந்துள்ளார். அவர்களது பெற்றோர்கள் அந்த வயதில் இருக்கும்போது இப்படி ஒரு பெரிய மாற்றத்தைக் கற்பனையாகக் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
"தங்கள் வாழ்வின் இரண்டாம் பகுதியில் வேறு ஒன்றைச் செய்யவேண்டும் என்று, வேலை பிடிக்காத பல மில்லினியல்கள் நினைக்கிறார்கள். இதற்கு வாழ்க்கை நிலை ஒரு காரணம். இப்போது உள்ள கொள்ளை நோய் அடுத்த காரணம். எது முக்கியம், தன் நேரத்தை எப்படி செலவிடுவது என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் ஆழமாக யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்" என்று சொல்கிற டார்சி, தானும் சக ஆராய்ச்சியாளர்களும் மில்லினியல்கள்மீது நம்பிக்கையோடு இருப்பதாகக் கூறுகிறார்.
"மில்லினியல்களுக்குப் பல திறமைகள் உண்டு. அவர்கள் இன்னும் இளமையோடு இருக்கிறார்கள். அடுத்தடுத்த வருடங்களில் வரப்போகும் பொருளாதார மீட்சி அவர்களுக்கு பெருமளவில் உதவும். தங்கள் பாதையைக் கண்டுபிடித்து முடிவெடுக்க அவர்களுக்கு நிறைய அவகாசம் இருக்கிறது. ஒருபக்கம் அவர்கள் துரதிருஷ்டவசமானவர்கள் என்றால், இன்னொரு பக்கம் அவர்களுக்கு நேரமும் பாக்கியிருக்கிறது. அது ஒரு நன்மைதான்" என்கிறார்.
பல நாடுகளில் மில்லினியல்கள்தான் வேலைகளிலும் மேலாண்மையிலும் அதிக பங்களிப்பு தருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தலைமுறைகளைப் பிரிக்கும் முறை
தலைமுறைகளின் பெயர்கள் சிரிப்பூட்டுபவையாக இருக்கலாம், ஆனால் ஆராய்ச்சியாளர்களுக்கு இது முக்கியமானது. அமெரிக்காவின் முக்கிய ஆராய்ச்சி மையமான ப்யூவின் தலைவர் மைக்கேல் டிமோக், "தலைமுறைகள் காலப்போக்கில் எப்படி மாறுகின்றன என்று ஆராய்ச்சி செய்ய இது உதவும்" என்கிறார்.
"ஒரு தலைமுறை வளர்ந்த காலத்தில் இருந்த வெவ்வேறு நிகழ்வுகள், மாற்றங்களின் அனுபவங்கள் அவர்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது, அவர்களின் கோணத்தை எப்படி மாற்றுகிறது என்று பார்க்க இது வழி வகுக்கிறது" என்கிறார் இவர்.
1981 -1996 பிறந்தவர்களை மில்லினியல் என்று ப்யூ வகைப்படுத்துகிறது. டார்சியின் ஆய்வு மையம், 1977-1995ல் பிறந்தவர்களை மில்லினியல் என்கிறது.
"தொடக்க வருடம் முக்கியமல்ல. அவர்கள் தொழில்நுட்பத்தை எப்போது உணர்ந்தார்கள் என்பதுதான் முக்கியம். வசிக்கும் இடம் நகரமா புறநகரா, பெற்றோர் படித்தவர்களா,வசதியானவர்களா ஆகியவற்றைப் பொறுத்து தொழில்நுட்பம் இவர்கள் வாழ்வில் நுழைந்த காலம் மாறும். 9/11 நிகழ்வு உலகம் முழுதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1995க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இது நினைவிருக்காது. அதனால்தான் 1995 என்று இறுதி ஆண்டை நிர்ணயித்தோம் என்கிறார் டார்சி.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதி: "விவசாயிகள் நலனில் கவனம் செலுத்துவோம்" - சுதந்திர தின உரை முக்கிய தகவல்கள்
- எதிரிகளின் ரத்தம் குடித்த சிதியர்கள் - யார் இந்த திகில் உலக ராஜாக்கள்?
- கொரோனா தொற்றில் இருந்து இந்தியா மீளவில்லை - சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் எச்சரிக்கை
- ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா
- கோவை தலித் அரசு ஊழியர் காலில் விழுந்தது ஏன்? புதிய வீடியோ காட்டும் தலைகீழ் திருப்பம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












