கோவிட்-19: கொரோனா தடுப்பூசி உங்கள் கைகளுக்கு எப்படி வந்து சேரும்
முன்னெப்போதும் காணாத, உலக அளவிலான அறிவியல் முயற்சியின் விளைவாக பல கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பேரழிவை விளைவிக்கும் இந்த நோயில் இருந்து பலவீனமானவர்களை பாதுகாப்பதற்கான நம்பிக்கையை இவை அளிக்கின்றன.
அறிவியல் ஆய்வகங்களில் இருந்து மக்களின் கைகளுக்கு அந்த தடுப்பூசிகள் எப்படிப் பயணித்தன என்பதை அறிய கீழே தள்ளவும்.
தடுப்பூசிகளின் பயணம் ஆய்வகத்தில் தொடங்குகிறது.

புதிதாகத் தோன்றிய கொரோனா வைரசின் மரபீனித் தொடர் (ஜெனடிக் சீக்வன்ஸ்) 2020 ஜனவரியில் வெளியிடப்பட்ட பிறகு இதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கினர்.
தடுப்பூசி உருவாக்கத்தின் பல கட்டப் பணிகள் ஒரே நேரத்தில் நடந்தன. முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகம் முழுவதும் பல குழுக்கள் இணைந்து செயல்பட்டன. 10 ஆண்டுகள் நடக்கும் தடுப்பூசி உருவாக்கும்பணி அழுத்திச் சுருக்கி 12 மாதங்களில் முடிக்கப்பட்டது.
இதற்கு முந்தைய கொரோனா வைரஸ்களால் ஏற்பட்ட சார்ஸ், மெர்ஸ் போன்ற நோய்களைப் பலர் ஆராய்ந்தனர். இதன் மூலம் கோவிட்-19 ஆராய்ச்சியில் சாதகமான தொடக்கம் சாத்தியமானது.
இந்த வைரசின் 'ஆன்டிஜென்' பகுதி எது என ஆய்வாளர்கள் நுட்பமாகத் தேடினர். வைரஸ் மனித உடலில் நுழையும்போது இந்த ஆன்டிஜென்தான் நோய் எதிர்ப்பு வினையைத் தூண்டும்.
வெற்றிகரமான தடுப்பூசிகள் பலவற்றில் வைரசின் தீங்கிழைக்காத நுண்ணிய துகள் இடம் பெற்றிருக்கும். அல்லது அத்தகைய துகளை நம் உடலில் உருவாக்கும் வழிமுறை இருக்கும்.
கணினி மாதிரிகளைக் கொண்டும், ஆய்வகத்தில் உயிரணுக்களைக் கொண்டும், பக்க விளைவுகளை கண்காணிப்பதன் மூலமாகவும் ஆய்வாளர்கள் இந்த ஆன்டிஜென்களை பரிசோதனை செய்தனர்.
பிறகு இந்த தடுப்பூசிகள் மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டன,

ஆய்வகப் பரிசோதனை முடிந்த பின், இத் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல் திறன் பற்றி உறுதி செய்வதற்காக உலகம் முழுவதும் தன்னார்வலர்களுக்கு இது செலுத்தப்பட்டது. ஒருவருக்கு எவ்வளவு மருந்து செலுத்தவேண்டும் என்பதை கண்டறிவதற்காகவும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
வழக்கமாக இது போன்ற தடுப்பூசி பரிசோதனைகளை நடத்தி முடிக்க 10 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால், கோவிட்-19 தடுப்பூசியை விரைவாக உருவாக்க வேண்டும் என்பதற்காக, இந்தப் பரிசோதனையின் பல கட்டங்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.
வெற்றிகரமான பரிசோதனைகளின் முடிவுகள் மருந்து பாதுகாப்பு ஒழுங்காற்று அமைப்புகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.
இந்த மருந்துகளுக்கு ஒப்புதல் தரலாமா என்பதை முடிவு செய்வதற்காக இந்த அமைப்புகளின் விஞ்ஞானிகள் ஒவ்வொரு தடுப்பூசியின் பாதுகாப்பு, தரம், செயல் திறன், ஆகியவற்றை விமர்சனபூர்வமாக மதிப்பீடு செய்தனர்.
ஒப்புதல் தருவதை விரைவுபடுத்துவதற்காக பிரிட்டன் ஒழுங்காற்று அமைப்பு, 'சுழல் பரிசீலனை' என்ற புதிய முறையைக் கையாண்டது. இதன்படி, நடப்பில் உள்ள பரிசோதனையில் போதிய தரவுகள் கிடைத்த உடனே அவை ஆராயப்பட்டன. முழு பரிசோதனையும் முடிந்த பிறகு, மொத்தமாக ஆராயும் முறையில் இருந்து இது மாறுபட்டது.
பிறகு தடுப்பூசி மருந்துகள் பெரும் அளவில் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும்.

வழக்கமாக, இப்படி மருந்துக்கு ஒப்புதல் கிடைத்த பிறகே மருந்து நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.
ஆனால், கொரோனா தடுப்பூசி விஷயத்தில் மட்டும், ஆராய்ச்சியும், மேம்பாடும் நடந்துகொண்டிருக்கும் போதே உற்பத்தித் திறன் மேம்படுத்தப்பட்டது. இந்த முயற்சியில் செலவிடப்பட்ட பெருமளவு பணம்தான் இதற்குக் காரணம்.
ஒரு தடுப்பூசி பாதுகாப்பானது, செயல் திறன் மிக்கது என்பது கண்டறியப்பட்டு, அங்கீகாரம் அளிக்கப்பட்டவுடன் நிறுவனங்கள் கூடிய விரைவில் அவற்றை விநியோகிக்கத் தயார் நிலையில் இருந்தன.
ஒரு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பணி என்பது அதன் செயலூக்கம் மிக்க உள்ளடக்கத்தை பெரும் அளவில் தயாரித்து, அதை நிலையாக்கிகள் முதலிய பிற உள்ளடக்கங்களுடன் கலப்பது ஆகும்.
நோய் எதிர்ப்பு வினையை மேம்படுத்தும் 'அட்ஜூவன்ட்' எனப்படுவதும் பல நேரங்களில் சேர்க்கப்படும்.
பெரும் அளவிலான தடுப்பூசி மருந்துகள் கொண்ட ஒரு தொகுப்பு (பேட்ச்) உற்பத்தி செய்யப்பட்டவுடன் அது தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கிருமி நீக்கப்பட்ட தொழிற்கூடங்களில் குப்பிகளில் அடைக்கப்பட்டு, உரிய இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
குளிரூட்டப்பட்ட வண்டிகளில் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படும்.

உற்பத்தியாளர்கள் வெளியே அனுப்பியதில் இருந்து அவற்றை சரியான வெப்பநிலையில் பராமரிப்பதற்காக அவை குளிர்ப்பதனம் செய்யப்பட்ட வண்டிகள் மூலம் உரிய இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
பழைய முறை தடுப்பூசிகள் பலவும் 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், சில கோவிட் -19 தடுப்பூசிகள் பல மடங்கு அதிகம் குளிரூட்டப்பட்ட நிலையில் வைக்கப்படவேண்டியவை.
எடுத்துக்காட்டாக, ஃபைசர் - பயோ என்டெக் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி குளிர் நிலையில் பராமரிக்கவேண்டும்.
ஆனால், பிரிட்டனில் உருவான ஆக்ஸ்ஃபோர்டு - அஸ்ட்ரோஜெனீகா தடுப்பூசியை சாதாரண குளிர்சாதனப் பெட்டியின் தட்ப நிலையில் பராமரித்தாலே போதும். எனவே, இது எதிர்கொள்ளும் சிக்கல் குறைவு. ஏற்கெனவே உள்ள, பிற மருந்துகளை அனுப்பும் குளிர்ப்பதன வண்டிகளே இதற்குப் போதும்.
யாரால் வாங்க முடியுமோ அவர்களுக்கு அல்ல, யாருக்கு அதிகம் தேவையோ அவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வது இந்த உலகப் பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அவசியம்.
உயர் வருமான நாடுகளின் அரசுகள், பல்வேறு தடுப்பூசிகளை பெருமளவில் வாங்குவதற்கு கொள்முதல் ஆணைகளை தந்தன. ஆனால், குறைந்த, நடுத்தர வருமான நாடுகளின் நோயுறத்தக்க மக்களுக்கும் தடுப்பூசி செல்வதற்காக உலக சுகாதார நிறுவனம் 'கோவேக்ஸ்' என்ற திட்டத்தை உருவாக்கியது.
தடுப்பூசிகள் மைய கிடங்குகளில் இருந்து ஊசிபோடும் மையங்களுக்கு செல்கின்றன.

ஒரு நாட்டுக்கு தடுப்பூசி சென்றவுடன், அவற்றின் ஒவ்வொரு திரளும் பாதுகாப்பான இடத்தில் தரப் பரிசோதனைக்கு உள்ளாகின்றன. பிறகே அவை விநியோகிக்கப்படுகின்றன.
ஃபைசர் தடுப்பூசிகளை வைக்க தனிச்சிறப்பான உறைநிலை கருவிகள் தேவை. இதற்காக பல நாடுகள் அதி உயர் உறைநிலைக் கிடங்குகளை உருவாக்கியுள்ளன.
பரிசோதகர்கள் அங்கீகரித்தப் பிறகு, சிறிய தொகுப்புகளாக தடுப்பூசிகள் பிரிக்கப்பட்டு, மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் மற்றும் பிற தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
இறுதியாக அவை தடுப்பூசி போடும் இடங்களுக்கு செல்லும் முன்பாக வட்டார கிடங்குகளில் சிறிது ஓய்வெடுக்கும்.
தடுப்பூசி மையங்கள் இறுதியாக மக்களுக்கு ஊசியை செலுத்தும்.

தடுப்பூசி மையங்களில் உள்ள பயிற்சி பெற்ற ஊழியர்கள் இந்த சிறிய தொகுப்புகளைப் பெற்று அவற்றை மக்களுக்கு செலுத்துவதற்காக சரியான முறையில் இருப்பு வைப்பார்கள்.
உறை நிலையில் இருக்கும் இந்த தடுப்பூசிகளை மீண்டும் உருக வைக்கவேண்டும். அல்லது, செறிவு குறைக்கவேண்டும். பிறகே இவற்றைப் பயன்படுத்த முடியும்.
சிரிஞ்சில் ஏற்றிய பிறகு, ஆட்களின் தோள்பட்டையில் இது செலுத்தப்படும். அங்கிருந்து தடுப்பு மருந்தின் உண்மையான பணி தொடங்குகிறது.
உடம்புக்குள் சென்ற மருந்து என்ன செய்கிறது? கொரோனா வைரசை நாம் எதிர்கொள்ள நேர்ந்தால் அதை எதிர்த்துப் போராடுவதற்கு நம் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு பயிற்சி அளிக்கிறது. கோவிட் -19 என்ற நாசகர நோயால் நம் உடல் நலம் குறையாமல் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
காலமும், ஊசி போட்டுக் கொண்டவரை தொடர்ந்து கண்காணிப்பதும், இந்தப் பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை நமக்குச் சொல்லும்.

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பது சாத்தியமா?
கொரோனா வைரசுக்குப் பின்: சோஷியலிசம் வருமா? காட்டுமிராண்டி நிலை வருமா?
கொரோனா வைரஸை Pandemic என்று குறிப்பிட காரணம் என்ன? - விரிவான விளக்கம்