ராமதாஸின் 2016 முழக்கம் தொடர்வது ஏன்? - பா.ம.க தலைமை சொன்னதும் செய்ததும் என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ்

பட மூலாதாரம், Ramadoss

படக்குறிப்பு, பாமக நிறுவனர் ராமதாஸ்
    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இருக்காது' என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.

` பா.ம.கவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதைவிட அன்புமணியின் ஆட்சி அமைய வேண்டும் என்பதையே ராமதாஸ் முன்வைக்கிறார். பரந்துபட்ட தமிழ்நாட்டுக்கான கட்சியாகவும் பா.ம.க இல்லை' என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். ராமதாஸின் நோக்கம் ஈடேறுமா?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் 23 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி வென்றது. இதன்பின்னர், தி.மு.க அரசோடு பா.ம.க இணக்கமாகச் செல்வது போன்ற தோற்றம் தென்பட்டது.

வன்னியர் சாதிக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிட்டதற்காக தி.மு.க அரசைப் பாராட்டவும் பா.ம.க தவறவில்லை.

இதனால், `உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-பா.ம.க கூட்டணி தொடருமா?' என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் ராமதாஸ் அளித்த பேட்டி அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றம், முன்னேற்றம், அன்புமணிதான்!

அதிமுக உடன் பாமக

பட மூலாதாரம், AIADMK FB

படக்குறிப்பு, அதிமுக உடன் பாமக

அந்தப் பேட்டியில், ` வேளாண்மைத் துறைக்காக தனி பட்ஜெட்டை வெளியிட்டதற்காக அரசை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம். பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அ.தி.மு.கவுக்குமான உறவு சுமூகமாக உள்ளது.

இந்தக் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீட்டினால் வட மாவட்டங்களிலும் சில பகுதிகளிலும் பாதிப்பு இருந்தது. இந்த இடஒதுக்கீடு தொடர்பாக பலருக்கும் புரிதல் இல்லை. இதற்கு எதிராகப் பேசும் அ.தி.மு.க தலைவர்களுக்கும் சமூகநீதி குறித்த புரிதல் இல்லை' என்றார்.

தொடர்ந்து பேசுகையில், ` நாங்கள் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம். தற்போதைய கூட்டணியிலேயே தேர்தலை சந்திப்போம். எங்களின் இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதுதான். அந்தத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி இருக்காது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம்' எனக் கூறிவிட்டு, `அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மாற்றம், முன்னேற்றம், அன்புமணிதான்' என்றார்.

``ராமதாஸின் பேட்டியை எப்படி எடுத்துக் கொள்வது?" என அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` நான்கே முக்கால் வருடங்களுக்குப் பிறகு உள்ள நிலைப்பாட்டை இப்போது தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தக் கருத்து, மற்ற கட்சிகளுக்கு பா.ம.க மீது ஓர் அவநம்பிக்கையைத்தான் கொடுக்கும். டாக்டர் ராமதாஸ் அவசரப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது" என்கிறார்.

`` உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிதான் என்று ராமதாஸ் கூறியிருக்கிறார். அ.தி.மு.கவை பொறுத்தவரையில் பா.ம.க ஒரு தவிர்க்க முடியாத கூட்டணிக் கட்சி. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 23 இடங்களோடு தங்களை எடப்பாடி பழனிசாமி நிறுத்திவிட்டார் என்ற ஆதங்கம் பா.ம.கவுக்கு இருக்கிறது. அந்தத் தேர்தலில், `தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க இல்லை' என்று முரசொலியில் கோடிட்டுக் காட்டியதால்தான் அ.தி.மு.க அணியில் குறைவான இடங்கள் கிடைத்தன.

மீண்டும், `அனைத்துக் கதவுகளும் திறந்திருக்கிறது' என்று கூறினால் அதிகப்படியான இடங்களைப் பெற முடியும் என்பதால், அதனை நோக்கி பா.ம.க காய்களை நகர்த்துவதாகவே பார்க்கிறேன். இது பலன் கொடுக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்" என்கிறார்.

நம்பகத்தன்மையுள்ள கூட்டாளியா?

அதிமுக, பாஜக உடன் பாமக

பட மூலாதாரம், ARUN SANKAR

படக்குறிப்பு, அதிமுக, பாஜக உடன் பாமக

`` ராமதாஸின் பேச்சை அவரே மதிப்பதில்லை என்பதுதான் உண்மை. `தேசியக் கட்சிகளோடும் திராவிடக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை' என்றார். அந்தப் பேச்சை அவர் மதிக்காததால்தான் அவர்களோடு கூட்டணி வைத்தார்.

`எங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவர்கூட அரசியலுக்கு வர மாட்டார்' என்றார். அதனையும் அவர் மதிக்கவில்லை. தனது மகனுக்காகத்தான் அவர் அரசியலே செய்கிறார்.

`கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும், பார் உள்ளளவும் பைந்தமிழ் உள்ளளவும் திராவிடக் கட்சிகளோடு கூட்டணி வைக்க மாட்டேன்' என்று கூறியதையும் அவர் மதிக்கவில்லை. அ.தி.மு.க அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆளுநரிடம் புகார் கொடுத்தார். அதனையும் அவர் மதிக்கவில்லை. ஒரு நம்பகத்தன்மையுள்ள கூட்டாளியாக அவர் இல்லை" என்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான வன்னியரசு.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ``அரசியலில் இன்று தவிர்க்க முடியாத சக்தியாக வி.சி.க வளர்ந்து வருவதை பா.ம.க பார்க்கிறது. வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்களும் வி.சி.கவில் இணைந்து வருகின்றனர். அதற்கு திருப்போரூர் தொகுதியின் வெற்றியும் ஒரு காரணம். இதனை அறிந்து கொண்டு, `அரசியல் சக்தியாக வளர வேண்டும் என்றால் வி.சி.கவோடு இணக்கமாக இருக்க வேண்டும்' என ராமதாஸ் விரும்புகிறார்.

தனிமைப்படுத்தப்படுகிறதா பா.ம.க?

அன்புமணி ராமதாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வி.சி.க அரசியல் சக்தியாகவும் தீர்மானிக்கக் கூடிய சக்தியாகவும் இருப்பது பொதுத்தளத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

கடந்த காலங்களில் சமூகரீதியாக வெறுப்பு அரசியலைப் பரப்பியதில் ராமதாஸுக்கு முக்கியப் பங்கு உண்டு. காதல் திருமணம் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வந்த பிறகு வரவில்லை. ஏதோ நாங்கள்தான் உருவாக்கியதாக பரப்புரையை மேற்கொண்டார். பா.ம.க என்பது நம்பத்தகுந்த அரசியல் கட்சி அல்ல.

ராமதாஸின் அரசியல் நிலைப்பாடு மாறாத வரையில் எந்த ஒட்டு உறவும் ஏற்படப் போவதில்லை. அவரோடு யாரும் அணி சேரவில்லையென்றால் அவர்களை வன்னிய மக்களுக்கு எதிரானவர்களாக பிரசாரம் செய்கிறார்.

வன்னிய மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. அவர்களுக்காக உழைக்கும் வேல்முருகனோடு நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். அந்த மக்களால் பா.ம.க தனிமைப்படுத்தப்படுவதால்தான் இப்படியொரு நிலையை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்" என்கிறார்.

``மீண்டும் மாற்றம், முன்னேற்றம் என்ற பா.ம.கவின் முழக்கம் எடுபடுமா?" என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` தமிழ்நாடு அரசியல் என்பது ராமதாஸை மையமாக வைத்து நகரவில்லை.

தேர்தல் நேரத்தில் தனது நிலைப்பாடுகளை அவர் பலமுறை மாற்றியுள்ளார். கூட்டணி மாற்றங்களைச் செய்த வகையில் முதலிடம் பா.ம.கவுக்குத்தான் கிடைக்கும். அவரது மகன் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார். பா.ம.கவின் ஆட்சி என்பதைவிட அன்புமணியின் ஆட்சி அமைய வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது" என்கிறார்.

பேரத்துக்கான யுக்தியா?

பாமக நிறுவனர் ராமதாஸ்

பட மூலாதாரம், The India Today Group

படக்குறிப்பு, பாமக நிறுவனர் ராமதாஸ்

தொடர்ந்து பேசியவர், `` பரந்துபட்ட தமிழ்நாட்டுக்கான கட்சியாக பா.ம.க இல்லை. 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அவர்களால் 5 சதவீத வாக்குகளைப் பெற முடிந்தது. அனைத்துத் தரப்பு மக்களின் கட்சியாக எப்போது மாறும் எனத் தெரியவில்லை. தொடர்ந்து மக்களுக்கான போராட்டங்களை நடத்தி ஆதரவைப் பெருக்கலாம். வெறுமனே ஒருவரின் விருப்பம் மட்டுமே ஆட்சியை அமைக்க உதவப் போவதில்லை.

தமிழ்த் தேசிய உணர்வுகளைப் பேசிய கட்சி என்றாலும், வன்னியர்கள் என்ற நோக்கிலேயே செயல்பட்டு வருகிறது. அதனைக் குறிப்பிட்டால் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. அனைத்து நடவடிக்கைகளிலும், `பேரம்' என்ற அடிப்படையில் செயல்படும் சிறிய கட்சிகளைப் பார்க்கிறோம். அதனை ஒரு குற்றமாகவும் நான் பார்க்கவில்லை. தாங்கள் ஆசைப்படுவது நடக்கும் அளவுக்கு அவர்களின் நடவடிக்கைகள் அமைவதில்லை என்பதுதான் கள நிலவரம்" என்கிறார்.

``ராமதாஸின் முழக்கம் கட்சிக்குள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?" என பா.ம.கவின் பிரசாரக் குழுவின் மாநிலத் தலைவர் எதிரொலி மணியனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` மருத்துவரின் கருத்தை மிகவும் நியாயமான ஒன்றாகப் பார்க்கிறோம்.

2016 தேர்தலில் முன்னெடுத்த கொள்கையை மீண்டும் முன்னெடுப்பதால் மிகுந்த மகிழ்ச்சி. கட்சிக்காரர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். திராவிடக் கட்சிகளோடு தேசியக் கட்சிகளோடு கூட்டணி இல்லாமல் போனால் மிகுந்த வரவேற்பு கிடைக்கும். அந்தக் கொள்கையை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என விரும்புகிறோம். மற்றபடி விமர்சனங்களைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :