பாமக செய்த தவறு; எடப்பாடி போட்ட கணக்கு! - வட மாவட்டங்களில் கரை சேராத பின்னணி

எடப்பாடி

பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMI TWITTER

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

அ.தி.மு.க கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. `வன்னிய சமூக மக்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு கை கொடுக்கவில்லை' எனவும் கூறப்படுகிறது. என்ன நடந்தது?

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் பா.ம.க வென்றுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 8 தொகுதிகளை அ.தி.மு.க கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்த மாவட்டத்தில் சேலம் மேற்கு, மேட்டூர் ஆகிய தொகுதிகளில் பா.ம.க வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர, பென்னாகரம், தருமபுரி, மயிலம் ஆகிய தொகுதிகள் பா.ம.க வசம் வந்துள்ளன. இந்த முறை வடமாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே பா.ம.க வேட்பாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

ஏன் இப்படியொரு பின்னடைவு?

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வன்னிய சமூக மக்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தை பா.ம.க கையில் எடுத்தது. சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் அலுவலகம் முற்றுகை, மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் என புதிய முறைகளில் போராட்ட வடிவத்தைக் கையில் எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்தது. பா.ம.கவின் இடஒதுக்கீடு கோரிக்கைக்குத் தொடக்கத்தில் செவிசாய்க்காத அ.தி.மு.க அரசு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளன்று அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், வன்னிய சமூகத்துக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு அறிவிப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான ஒதுக்கீட்டில் இருந்து உள்ஒதுக்கீடாக இது வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த அறிவிப்பால் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் உற்சாகப்பட்டனர். அதற்கேற்ப, அ.தி.மு.கவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, வடமாவட்டங்களில் தங்களுக்கு செல்வாக்கான தொகுதிகளை பா.ம.க கேட்டு வாங்கியது. பா.ம.கவின் கோரிக்கைக்கு அ.தி.மு.க தரப்பில் உடனடியாக செவிசாய்ப்பதற்குக் காரணம், 2019 நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தொகுதிகளுக்காக நடந்த இடைத்தேர்தலில் பா.ம.கவுடன் கூட்டணி சேர்ந்ததால் சில தொகுதிகளில் அ.தி.மு.க பலன் பெற்றதுதான். ஆனால், மருத்துவர் ராமதாஸ் எதிர்பார்த்த அளவுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் அமையவில்லை என்கின்றனர் பா.ம.க வட்டாரத்தில்.

வாகை சூடிய தி.மு.க!

வாகை சூடிய தி.மு.க!

பட மூலாதாரம், Getty Images

குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ளதாகப் பார்க்கப்படும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தி.மு.க வெற்றிவாகை சூடியுள்ளது.

``எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியில் 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். சேலத்திலும் தருமபுரியிலும் அ.தி.மு.க கூட்டணி அமோகமாக வெற்றி பெறுகிறது. ஆனால், வடக்கு மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் வந்து சேரவில்லை. காரணம், வன்னிய சமூக மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை பிற சமூகங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசாங்கத்தை மிரட்டி இடஒதுக்கீடு வாங்கியதாகவே நினைத்தனர்" என்கிறார் பா.ம.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர்.

சேலம், தருமபுரி ஆச்சர்யம்!

தொடர்ந்து பேசுகையில், `` வடமாவட்டங்களில் ரெட்டியார், முதலியார், செட்டியார் ஆகிய சமூகங்களைச் சேர்ந்த மக்கள் நிறைந்துள்ளனர். இவர்களும் இடஒதுக்கீடு என்ற ஒரு காரணத்தை வைத்து எங்கள் கூட்டணியைப் புறக்கணித்துவிட்டனர். எடப்பாடி தொகுதியில் முதல்வருக்கு விழுந்த வாக்குகளைப் போல வடமாவட்டங்களில் எங்களுக்கு வாக்குகள் வரவில்லை. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வென்ற அ.தி.மு.க, இந்தமுறை தோல்வியை தழுவியுள்ளது.

வடமாவட்டத்தில் ஒரு தொகுதியில் இரண்டரை லட்சம் வாக்குகள் இருந்தால் அதில் 60 ஆயிரம் வாக்குகள்தான் எங்கள் பக்கம் வந்துள்ளன. அதில், கட்சிக்காரர்கள் என்ற முறையில் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் கிடைத்தன. பொதுவாக எந்தக் கூட்டணியில் பா.ம.க இருந்தாலும் மாம்பழத்துக்கு ஓட்டுப்போடக் கூடாது என்ற மனநிலையில் எஸ்.சி மக்கள் உள்ளனர். அதனால், இந்த அணிக்கு தலித் வாக்குகள் வரவில்லை. கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால் சிறுபான்மை வாக்குகளும் வந்து சேரவில்லை. அதேநேரம், கொங்கு வேளாள சமூக மக்கள், `நம்ம ஆள் எடப்பாடி வரட்டும்' என்ற மனநிலையில் வாக்குகளை அள்ளிக் குவித்துவிட்டனர். சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தலித் மக்களின் எண்ணிக்கை ஓரளவு குறைவு. அதேநேரம், வடமாவட்டங்களில் அவர்கள் சற்று அடர்த்தியாக உள்ளனர்.

பிரேமலதா கொடுத்த அதிர்ச்சி!

தவிர, இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவை ஒரு கட்சியாக பார்க்காமல் சாதிரீதியாக பார்த்தனர். தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பைக் காட்டினாலும், மக்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதில், `பணம் யார் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வோம். ஆனால், ஆட்சியை மாற்ற வேண்டும்' என்பதிலும் நடுநிலையான வாக்காளர்கள் உறுதியாக இருந்துள்ளனர்," என்கிறார்.

மேலும், `` பா.ம.க வேட்பாளர்கள் போட்டியிட்ட பல தொகுதிகளில் 1,000, 850, 500 வாக்குகள் என்ற வித்தியாசத்திலேயே ஆறு தொகுதிகளை பறிகொடுத்துள்ளோம். உதாரணமாக, விருத்தாச்சலத்தில் பா.ம.க கார்த்திகேயன் 862 வாக்குகளில் தோற்றார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வென்றார். இதே தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் 20,000 வாக்குகளைப் பெற்றுள்ளார். நெய்வேலியில் நின்ற பா.ம.க வேட்பாளர் ஜெகன் 977 வாக்குகளில் தோற்றார்.

ராமதாஸின் கணக்கு என்ன?

ராமதாஸின் கணக்கு என்ன?

பட மூலாதாரம், ANBUMANI RAMADOSS TWITTER

அதேபோல், திருப்போரூர் தொகுதியில் 1947 வாக்குகுள் வித்தியாசத்தில் திருக்கச்சூர் ஆறுமுகம் தோற்றார். இதையெல்லாம் கணக்குப் போட்டாலே 10 தொகுதிகளில் கூடுதலாக வெற்றி பெற்றிருப்போம். இதைவிட முக்கிய காரணம், பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யமும் வாக்குகளைப் பிரித்ததுதான்.

இந்தச் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கணக்குகளை மருத்துவர் ராமதாஸ் போட்டு வைத்திருந்தார். ஆளும் கட்சி பிளஸ் இடஒதுக்கீடு உள்பட பல்வேறு காரணங்கள் ஒன்று சேர்ந்ததால் 23 தொகுதிகளில் 15 தொகுதிகளில் உறுதியாக வெல்வோம் என மருத்துவர் ராமதாஸ் கணக்குப் போட்டார். அந்தக் கணக்கு பலிக்கவில்லை. 18 தொகுதிகளில் தோல்விக்கான காரணங்களை இன்னும் எங்கள் கட்சித் தலைமை ஆராயவில்லை. விரைவில் காணொளி கூட்டத்தை நடத்துவார் என எதிர்பார்க்கிறோம்," என்கிறார் விரிவாக.

``இடஒதுக்கீடு விவகாரம் கை கொடுக்கவில்லை என்பது தவறான தகவல். வன்னியர் இடஒதுக்கீட்டை முன்னெடுத்ததால்தான் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.கவும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும் தோற்றனர். தென் தமிழகத்தில் தோற்ற அளவுக்கு அ.தி.மு.க கூட்டணி இங்கு தோற்கவில்லை. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைக் கணக்கிட்டால் 40 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் என்பது ஆயிரம் வாக்குகள் என்ற அளவில்தான் உள்ளன," என்கிறார் வன்னிய சத்திரிய சாம்ராஜ்யம் என்ற அமைப்பின் தலைவர் சி.ஆர்.ராஜன்.

சி.வி.சண்முகம் தோற்றது ஏன்?

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய சி.ஆர்.ராஜன், `` கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் ஏராளமான மக்கள் நலப் பணிகளை முன்னெடுத்துள்ளனர். மக்களோடு அவர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இதனால் அந்தப் பகுதிகளில் அ.தி.மு.க அணி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், வடதமிழகத்தில் இருந்த அமைச்சர்கள் எல்லாம் மக்களோடு நெருங்கிப் பழகவில்லை என்பதையும் அறிய முடிகிறது. இந்தத் தேர்தலில் சி.வி.சண்முகம் தோல்வியடைவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தத் தோல்வியில் பா.ம.கவுக்கும் பங்கு உண்டு" என்கிறார்.

மேலும், `` பொதுவாகவே, வன்னிய சமூகத்தில் வேறொருவர் வளர்வதை பா.ம.க விரும்புவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க நன்றாகவே வளர்ந்துவிட்டது. நல்ல வேட்பாளர்களைப் போட்டிருந்தால் பா.ம.கவும் வெற்றி பெற்றிருக்கும். இடஒதுக்கீட்டின் பலன் தொடர்பாக சமூக மக்கள் மத்தியில் அ.தி.மு.கவினர் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை. அதேபோல், அ.தி.மு.க அணிக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட வன்னிய சங்கங்கள் ஆதரவு கொடுத்தன. இதனை ராமதாஸுக்கு பயந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. சமூக அமைப்புகளைக் களவேலை பார்க்கவும் விடவில்லை. இதுவும் பின்னடைவுக்கு முக்கிய காரணம்," என்கிறார்.

ஒருங்கிணைவு ஏற்படாத பின்னணி!

`வடமாவட்டங்களில் அ.தி.மு.க அணிக்குப் பின்னடைவு ஏன்?' என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாகப் பேசிய ஓ.பி.எஸ், ஆர்.பி.உதயகுமார் போன்றவர்கள், `இடஒதுக்கீடு தற்காலிகமானது' என்றார்கள். இதற்கு விளக்கம் கொடுத்த ராமதாஸ், `சட்டத்தில் தற்காலிகம், நிரந்தரம் என்றெல்லாம் இல்லை, இது நிரந்தர சட்டம்' என்றார். இது குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஒருங்கிணைவு ஏற்படாத பின்னணி!

பட மூலாதாரம், ANBUMANI RAMADOSS TWITTER

பொதுவாக, வடமாவட்டங்களில் பா.ம.க வீரியமாகக் கிளம்பும்போதெல்லாம் மற்ற சமூகத்தினர் எதிர்நிலையை எடுப்பது வழக்கமாக உள்ளது. அந்த மாவட்டங்களில் தி.மு.க, அ.தி.மு.கவுக்கு சமமான வாக்கு வங்கிகள் உள்ளன. இங்கு பா.ம.கவுடன் கூட்டணி சேரும் கட்சிக்கு கூடுதல் செல்வாக்கு ஏற்படுவதாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 5 சதவிகித வாக்குகளை பா.ம.க பெற்றது. ஆனால், அது மட்டுமே வெற்றிவாய்ப்பை மாற்றக் கூடியதாக இல்லை. தற்போது அவர்களின் வாக்கு வங்கியில் சேதாரம் ஏற்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. பிற சமூகங்களின் ஒருங்கிணைவு ஏற்படாததால் வடமாவட்டங்களில் பா.ம.கவுக்கு 11 தொகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு சாதகமாக வட மாவட்டங்களில் நிலைமை மாறலாம் என எதிர்பார்த்தும் அது நடக்கவில்லை" என்கிறார்.

அந்த 50 சதவிகிதம் பேர்!

`இடஒதுக்கீடே எதிராகப் போனதா?' என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பிரசார குழு தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எதிரொலி மணியனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இடஒதுக்கீட்டால் தங்கள் உரிமை பறிபோனதாக பிற சமூகத்தினர் நினைக்கிறார்கள். அது தவறானது. உள்ஒதுக்கீட்டில்தான் கொடுத்தார்கள் என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் ஏற்படவில்லை. இதுதொடர்பாக சிலர் தீவிர பிரசாரத்தையும் முன்னெடுத்தனர். இந்தத் தேர்தலில் பிற சமூகங்களைச் சேர்ந்த 50 சதவிகிதம் பேர் எங்கள் அணிக்கு வாக்களிக்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் இவையெல்லாம் மாறிவிடும்" என்கிறார்.

`` இந்தத் தேர்தலில் வன்னிய அமைப்புகளின் ஆதரவை பெறாமல் இருந்ததும் ஒரு காரணம் என்று கூறுவது ஏற்புடையதல்ல. அவர்கள் எல்லாம் முகவரியே இல்லாதவர்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. தேர்தல் நேரத்தில் முளைக்கக் கூடிய அமைப்புகள்தான் அவை. அதனால் அ.தி.மு.க அணிக்கு எந்தவிதப் பலனும் இல்லை. எடப்பாடியின் சொந்த மண்ணில் அவர் மீது பிற சமூக மக்களுக்கு இருந்த நம்பிக்கை, பிற தொகுதிகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் ஏற்படவில்லை என்பதுதான் பிரதான காரணம்.

நாங்கள் 1996 தேர்தலில் தனியாக நின்றபோதே 4 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஆளும்கட்சியாக இருந்த அ.தி.மு.கவே அந்தத் தேர்தலில் 2 தொகுதிகளில்தான் வென்றது. அதன்பிறகு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தது. ஒரு கட்சி 10 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்ததே பெரிய விஷயம். ஜெயலலிதா இல்லாமல் இத்தனை தொகுதிகளில் எடப்பாடி வென்றதை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறோம்" என்கிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :