செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 13 பேர் பலியா?

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 13 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், இந்த மரணங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நடக்கவில்லை என்கிறது அரசு.
சென்னைக்கு அருகே உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகளில் 13 பேர் நேற்று இரவு ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் உயிரிழந்ததாக இன்று காலையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
மாநிலத்தில் வெகு வேகமாக கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், இந்தச் செய்தி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 1,343 படுக்கைகளுடன் செயல்படும் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாட்டின் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்று. இதில் 425 ஆக்ஸிஜன் வசதிகளைப் பெற்றிருக்கின்றன.
இந்த நிலையில், நேற்று இரவில் அட்மின் ப்ளாக் எனப்படும் கட்டடத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 176 பேரில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறந்துவரும் நிலையில், செங்கல்பட்டில் ஏற்பட்ட இந்த மரணங்கள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதா?

13 பேர் உயிரிழந்தது உண்மைதான் என்றாலும் இந்த மரணங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படவில்லை என்கிறார் இந்த மருத்துவமனையின் டீன் டாக்டர் ஜே. முத்துக்குமரன். "செங்கல்பட்டு மருத்துவமனையில் 20,000 கிலோ லிட்டர் கொள்ளளவுள்ள ஆக்ஸிஜன் கொள்கலன் இருக்கிறது. அதில் தினமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் லிட்டர் வரையில் திரவ ஆக்ஸிஜன் நிரப்பப்படும். இதில் தினமும் 2.9 ஆயிரம் கிலோ லிட்டர் அளவுக்கு பயன்பாடு இருக்கும். ஆனால், கடந்த சில நாட்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், தேவை என்பது 3 ஆயிரம் லிட்டரிலிருந்து 5 ஆயிரம் லிட்டராக உயர்ந்தது. இந்தத் தேவைக்கேற்படி ஆக்ஸிஜனை நிரப்பிவந்தோம்," என்றார்.
"ஆனால், நேற்று இரவு ஆக்ஸிஜன் அழுத்தத்தில் சிறிய குறைவு ஏற்பட்டது. உடனடியாக 180 டி - டைப் சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டு தேவைப்படும் நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்டது மேலும் எங்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் ஐநாக்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு 7.5 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டு, நிரப்பப்பட்டது. இதனால் இரவு ஒரு மணிக்குள் அழுத்தக் குறைவு சரியானது. ஆனால், இந்தக் அழுத்தக்குறைவால் யாரும் உயிரிழக்கவில்லை," என பிபிசியிடம் தெரிவித்தார் டாக்டர் முத்துக்குமரன்.
தற்போது செங்கல்பட்டு மருத்துவமையில் ஆக்ஸிஜன் தேவைப்படும் பிரிவில் 309 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 50 பேர் வென்டிலேட்டரில் உள்ளனர். 259 பேர் குழாய் மூலம் ஆக்ஸிஜன் பெற்று வருகின்றனர். இவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நேரிட்டிருந்தால் மிகத் தீவிரமாக ஆக்ஸிஜன் தேவைப்படும் இவர்கள் உயிரிழந்திருக்க மாட்டார்களா என கேள்வி எழுப்புகிறார் முத்துக்குமரன்.
"இறந்தவர்களில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்"

"நேற்று மாலைதான் 5 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் இங்கே நிரப்பப்பட்டது. நேற்று இரவு 11 மணியளவில் ஆழுத்தக் குறைவு ஏற்பட்டதாக தகவல் வந்ததும் வேறு இடங்களில் இருந்து ஆக்ஸிஜனைக் கொண்டுவந்து நிரப்பினோம். அதுவரை டி - டைப் சிலிண்டர் மூலம் ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் 13 பேர் இறந்ததாக தகவல் வந்தது. அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் மருத்துவ கல்வி இயக்குநரும் விசாரணை நடத்துவார்" என்று ஊடகங்களிடம் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ்.
உயிரிழந்த 13 பேரில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்றும் மீதமுள்ள 12 பேர் வைரல் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது. இவர்கள் கொரோனா நோயாளிகளாக இருந்தால், இவர்களது உடல் உறவினர்களிடம் கொடுக்கப்பட்டிருக்க மாட்டாது. ஆனால், 11 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கஸ்தூரி என்ற பெண்மணியின் உடலும் சந்திரசேகர போஸ் என்ற வட இந்தியரின் உடலும் மட்டுமே மார்ச்சுவரியில் வைக்கப்பட்டுள்ளன என்கிறார் டீன்.
"உயிரிழந்த 13 பேரில் 80 சதவீதம் பேருக்கு மேல் இணை நோய் உள்ளவர்கள். அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களே தவிர ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழந்தவர்கள் அல்ல. உயிரிழப்பு நடந்தது உண்மை. ஆக்ஸிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட அழுத்தக் குறைவும் உண்மை. ஆனால், இரண்டிற்கும் தொடர்பு இல்லை" என்கிறார் முத்துக்குமரன்.
மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை

பட மூலாதாரம், TWITTER
இதற்கிடையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவருவதால் போதிய அளவில் மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமிக்க வேண்டுமெனக் கோரி மருத்துவர்கள் இன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
"இங்கு செவிலியர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. தினமும் 200 - 300 பேர் கொரோனா பாதிப்புடன் வருகிறார்கள். இவர்களைக் கவனிப்பதில் பெரும் சுமையை செவிலியர்கள்தான் எதிர்கொள்கிறார்கள். ஆனால், போதுமான செவிலியர்கள் இல்லாததால், கடுமையான பணிச்சுமையுடன் அனைவரும் வேலை செய்கிறார்கள்" என்கிறார் செவிலியர்கள் சங்கத்தின் தலைவரான ஏழுமலை.
தமிழ்நாட்டில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், மாநிலத்திலேயே சென்னைதான் அதிக அளவிலான நோயாளிகளைக் கொண்ட மாவட்டமாக இருந்துவருகிறது. இதற்கு அடுத்தபடியாக, சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 1,608 பேர் செங்கல்பட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். மாவட்டத்தில் தற்போது மொத்தமாக 9,663 பேர் இந்நோய்க்காக சிகிச்சைபெற்று வருகின்றனர். நேற்றுவரை 981 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிற செய்திகள் :
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
- ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?
- மோதியின் தொகுதியை சிதைக்கும் கொரோனா: கடுஞ்சினத்தில் மக்கள்
- சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை - புதிய நெருக்கடி
- ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












