இலங்கை அமைச்சரவையில் திடீர் மாற்றம் - கோவிட் பரவலுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை ஏன்?

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கை அமைச்சரவையில் இன்று (ஆகஸ்ட் 16) சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அமைச்சரவை திருத்தத்திற்கு அமைய, 6 அமைச்சு பொறுப்புக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அத்துடன், புதியதொரு அமைச்சு பொறுப்பும் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 புதிய அமைச்சர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று சத்திய பிரமாணம் செய்துக்கொண்டனர்.

இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், சுகாதார அமைச்சு பொறுப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் மாற்றம்

இதுவரை காலமும் சுகாதார அமைச்சராக பதவி வகித்த பவித்ரா வன்னியாராட்சி, அந்த அமைச்சு பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.

இதன்படி, ஊடகத்துறை அமைச்சராக இதுவரை காலம் பதவி வகித்த கெஹெலிய ரம்புக்வெல, புதிய சுகாதார அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

சுகாதார அமைச்சராக பதவி வகித்த பவித்ரா வன்னியாராட்ச்சி, போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல வசமிருந்த ஊடகத்துறை அமைச்சு பொறுப்பு, டளஸ் அழகபெரும வசமானது.

பவித்ரா வன்னியாராட்சி

பட மூலாதாரம், PMD SRI LANKA

படக்குறிப்பு, பவித்ரா வன்னியாராட்சி

மின்சக்தி அமைச்சராக பதவி வகித்த டளஸ் அழகபெரும, ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த, காமினி லொக்குகேயிற்கு, மின்சக்தி அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய வெளியுறவு அமைச்சர்

கல்வி அமைச்சராக பதவி வகித்த ஜீ.எல்.பீரிஸ், புதிய வெளிவிவகார அமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த தினேஷ் குணவர்தன, புதிய கல்வி அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் நாமல் ராஜபக்ஷவிற்கு, மேலதிகமாக அபிவிருத்தி இணைப்பு கண்காணிப்பு அமைச்சு பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்தது.

இதன்படி, புதிய அமைச்சரவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டது.

PMD SRI LANKA

பட மூலாதாரம், PMD

படக்குறிப்பு, கெஹலிய ரம்பூக்வெல

25 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 39 ராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்றார்கள்.

இந்த நிலையில், இடைப்பட்ட காலப் பகுதியில் புதிய சில இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரதான 6 அமைச்சு பொறுப்புக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் அனைத்து விதத்தில் சவால்களை எதிர்நோக்கியுள்ள அமைச்சு பொறுப்புக்களிலேயே இவ்வாறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :