லெஸ்பியன் வரலாறு: தன்பாலின உணர்ச்சிகளை கவிதையில் வெளிப்படுத்திய பழங்கால கிரேக்க கவிஞர் சாஃபோ

சாஃபோ லெஸ்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1883ல் முதல் முறையாக வெளியிடப்பட்ட சாஃபோவின் புனையப்பட்ட ஓவியம்

(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் வெளியிட்டது பிபிசி தமிழ். அந்த வரிசையில், பதினைந்தாம் கட்டுரை இது)

கிரேக்கத்தின் லெஸ்போஸின் சாஃபோ (கி.மு 620 முதல் 570 வரை வாழ்ந்தவர்) ஒரு கிரேக்க பாடலாசிரியரராக அறியப்படுகிறார். இவருடைய படைப்பு பண்டைய கிரேக்கத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. சாஃபோ இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரது உருவச்சிலை, நாணயம் மற்றும் மட்பாண்டங்களில் அவரது புனையப்பட்ட உருவம் பொறிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டிருக்கிறார். வரலாற்றைக் கடந்து இவர் இன்றளவும் நீடித்து நிற்கக் காரணம், உலகின் முதலாவது பெண் தன்பாலின விருப்பம் கொண்ட பெண்ணாக இவர் அறியப்படுவதுதான்.

அந்த அளவுக்கு தமது படைப்புகளில் பெண்கள் கொண்டிருக்கும் தன் பாலின உணர்ச்சி மற்றும் அழகியலை தமது எழுத்துகள் விவரித்து, அந்த உணர்வுக்கு சமூகத்தில் உயிர் கொடுக்க தாம் வாழ்ந்த காலத்திலேயே முற்பட்டிருக்கிறார் சாஃபோ.

இவர் வாழ்ந்த லெஸ்போஸ் நகரில் இருந்தே பெண்கள் தன்பாலினத ஈர்ப்பு உணர்வாளர்களை அடையாளப்படுத்தும் 'லெஸ்பியன்' என்ற சொல் வழக்கத்தில் வந்துள்ளதாகவும் ஒரு கருத்து உள்ளது.

சாஃபோ வாழ்ந்த காலத்தை விட அவர் வாழ்ந்து மறைந்த காலத்தில்தான் அவரது படைப்புகள் போற்றப்பட்டு வந்துள்ளன. சம காலத்துடன் ஒப்பிடும்போது, அந்த படைப்புகள், எண்ணிக்கை அளவில் குறைவுதான். ஆனாலும், அவர் எழுதியதாக நம்பப்படும் ஒன்பது தொகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான கவிதைகளில் 650 வரிகள் மட்டுமே தொல்லியல் அறிஞர்களால் மீட்கப்பட்டுள்ளன. அந்த வகையில், அந்த வவிதை வரிகள், சுதா (கி.பி 10), பண்டைய எழுத்தாளர்களின் குறிப்புகள், சாஃபோவின் சொந்த கவிதைகளின் வழியாகவே தற்காலத்தில் அறிய முடிந்துள்ளது.

சாஃபோ வாழ்ந்ததாக நம்பப்படும் நூற்றாண்டில் தண்டனைக்கு உள்ளாகக் கூடிய மற்றும் தடை செய்யப்பட்ட லெஸ்பியன் உறவு தொடர்பான காதல் கவிதைகளை அப்போது இருந்த மத்திய வரலாற்றுக் கால தேவாலயம் அழித்தொழிக்க நடவடிக்கை எடுத்ததாக பிற்கால புராணங்கள் கூறுகின்றன,

மேலும் போப் ஏழாம் கிரிகோரி, சாஃபோவின் படைப்புகளை எரிக்க உத்தரவிட்டதற்கான சான்றுகள் உள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கி.பி 1073இல் பழங்கால தொல்லியல் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டோ நகலெடுக்கப்படாமலோ இருந்ததால் அழிந்து விட்டன என்றும் சாஃபோ அயோலிக், கிரேக்க பேச்சுவழக்கில் எழுதினார். அவரது படைப்புகளை, அட்டிக் மற்றும் ஹோமெரிக் பேச்சு மொழிகளில் புலமை பெற்றிருந்த லத்தீன் எழுத்தாளர்களுக்கும் சிரரமாக இருந்திருக்கலாம் என்றும் ஒரு கூற்று உள்ளது.

இதை எல்லாம் மீறி காலநடையில் சாஃபோவின் படைப்புகள் நகலெடுக்கப்பட்டதில் எஞ்சியவை மட்டுமே அவர் வாழ்ந்த காலத்தில் விட்டுச் சென்ற படைப்புகளுக்கு உயிர் கொடுத்து வந்துள்ளன. அதன் மூலமே சாஃபோ என்ற பெண், இப்படித்தான் வாழ்ந்திருப்பார் என்ற முடிவுக்கு தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

சாஃபோ லெஸ்பியன்

பட மூலாதாரம், Hulton Archive/Getty Images

படக்குறிப்பு, சக கலைஞரின் பாடலை தமது தோழியுடன் சாஃபோ கேட்பதை சித்திரிக்கும் ஓவியம்

சாஃபோவின் சில வாழ்க்கை வரலாறு, அவரது வாழ்நாளிலோ சிறிது காலத்திற்குப் பிறகோ எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவரது வாழ்க்கையின் வடிவம் பிற்கால எழுத்தாளர்களால் அறியப்பட்டது, ஆனால் பாரியன் பளிங்கு போன்ற கல்வெட்டுகளைத் தவிர (கிரேக்கத்தில் 1582-299 BCE க்கு இடையில் சில நிகழ்வுகளின் வரலாறு) இந்த வேலைப்பாடுகள் எப்படி என்பதை அறிய முடியவில்லை.

பிளேட்டோவால் (L. 428/427-348/347 BCE) அவர் மிகவும் பாராட்டப்பட்டார் அவர். தனது படைப்புகளில் ஒரே பாலின உறவுகளையும் குறித்து எழுதினார். தற்போதைய நாளில், அவர் ஒரு சிறந்த ஓரினச்சேர்க்கை கவிஞராக புரிந்து கொள்ளப்படுகிறார் மற்றும் LGBTQ சமூகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலருக்கு உத்வேகம் அளித்துள்ளார்.

சாஃபோவின் வாழ்க்கை

சாஃபோ கிரேக்கத்தின் லெஸ்போஸ் தீவில் ஒரு பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தார். செல்வச் செழிப்பான அவரது வாழ்க்கை, தனது சொந்த வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அவரே எடுத்துக் கொள்ள அனுமதித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும், இந்த கூற்றை ஒரு சிலர் மறுக்கிறார்கள்.

"பண்டைய கிரேக்கத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள் தங்கள் நகர-மாநிலங்களின் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களின்படி திருமணம் செய்து கொண்டனர், மேலும் சாஃபோவின் செல்வம் அவரது குடும்பம் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளிலிருந்து அவரை விட்டு வைக்கவில்லை. பெரும்பாலும், லெஸ்போஸ் மற்றும் சாஃபோவின் தனித்துவமான ஆளுமை மீது பெண்களுக்கு அதிக மரியாதை இருந்ததால் தன் விருப்பப்படியான வாழ்வை சாஃபோ தேர்வு செய்தார்," என்று எழுதுகிறார் வரலாற்றாசிரியர் வெண்டி ஸ்லாட்கின்.

அவர் மேலும் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "பெண்களின் வாழ்வில் கடுமையான கட்டுப்பாடுகள், சமுதாயத்தில் சுதந்திரமாக நடமாட இயலாமை, வியாபாரம் நடத்துதல் அல்லது உள்நாட்டில் அல்லாத பயிற்சியை பெற இயலாமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, முக்கியமான [பெண்] கலைஞர்களின் பெயர்கள் எங்களுக்கு தெரியவில்லை. இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. பழங்கால கிரேக்க அறிஞர்களில் பிளேட்டோ போன்றோர் மட்டுமே சாஃபோவை அங்கீகரித்து பாராட்டியுள்ளனர். அவர் ஏதென்ஸ் அல்லது ஸ்பார்டாவிலிருந்து வரவில்லை, ஆனால் பெண்கள் கலாசாரம் மற்றும் பெண்களுக்கு அதிக மரியாதை கொடுத்த லெஸ்போஸ் நகரில் இருந்து வந்திருந்தார் என்கிறார் வெண்டி ஸ்லாட்கின்.

சாஃபோ லெஸ்பியன்

பட மூலாதாரம், Getty Images

பிளேட்டோ உண்மையிலேயே சாஃபோவை புகழ்ந்தாரா என்பதற்கு வலுவான ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை. மேலும் இது பிளேட்டோவுக்கு பிந்தைய காலத்தில் வந்த எழுத்தாளர்களின் படைப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அப்படியிருந்தும், இந்த சொற்றொடர் உள்ளது அடுத்த தலைமுறை உலகில் வலம் வர, சாஃபோ விட்டுச் சென்ற நற்பெயரே காரணம் என்று கருதப்படுகிறது.

சாஃபோ லெஸ்போஸில் ஒரு பெண்களுக்கான பள்ளியை நடத்தியதாகக் கூறப்படுகிறது, ஆனால் இது பம்பிலியாவில் ஒரு பெண் பள்ளியை நடத்தும் அவரது ஆதரவாளர் தாமோபிலாவுடையதாக இருக்கலாம் என்றும் அது 19ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து உள்ளது. பணக்கார பெற்றோர் தங்களுடைய மகள்களை திருமணத்திற்காக தயார்படுத்தவும் சாஃபோவுடைய உணர்வுக் கவிதை பற்றி அறிந்து கொள்ளவும் இந்த பள்ளிக்கு தங்களுடைய மகள்களை அனுப்பியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சாஃபோவின் வாழ்காலத்தில் அவரது பருவத்தின் எல்லா நிகழ்வுகளும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் சிறு வயதில் பாடலை இசைக்க கற்றுக் கொள்ளும் சூழலில் அவர் வளர்ந்தார் என்று அறியப்படுகிறது,

அவர் திருமணம் செய்த நபர் ஒரு கட்டத்தில் இறந்திருக்கலாம் என்றும் அந்த நபருடன் வாழ்ந்த வாழ்வின் அடையாளமாக சாஃபோவுக்கு க்ளீஸ் என்ற மகள் இருந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது. இந்த க்ளீஸ் என்ற பெயர், சாஃபோவின் தாயாருடையது என்றும் சில வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

சாஃபோவுக்கு மூன்று சகோதரர்கள் இருக்கலாம் என்றும் அவர்கள் எரிகியஸ், சராக்ஸஸ் மற்றும் லாரிச்சஸ் என்றும் அறியப்படுகிறது. பிந்தைய இருவர் பற்றி தமது கவிதையிலேயே சாஃபோ குறிப்பிட்டிருக்கிறார். தமது திடமான அரசியல் பார்வைகள் காரமமாக இருமுறை அவர் சிசிலியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் வரலாற்றாய்வாளர் விக்கி லியோன் கூறுகிறார்.

பழங்கால நூல்களில் சாஃபோவின் உயரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் குட்டையான உருவம் கொண்டவர் என்றும், கருமை நிறமாகவும் இருந்ததாக பல நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மீதான காதல் மற்றும் ஆர்வம் சாஃபோவின் கவிதைகளில் ஊற்றெடுத்து காணப்பட்டது. ஆனால் பெரும்பாலான அறிஞர்கள் அவரது படைப்புகளை சுயசரிதையாக வாசிப்பதற்கு எதிராக அறிவுறுத்துகின்றனர். காலங்காலமாக கவிஞர்கள் தங்கள் சொந்த ஆளுமையை வெளிப்படுத்தாத படைப்புகளை எழுதியதைப் போலவே, சாஃபோவும் தமது உணர்வுகளை கவிதை வடிவில் இயற்றியிருக்கலாம் என்பது அந்த அறிஞர்களின் வாதம்.

சாஃபோ லெஸ்பியன்

பட மூலாதாரம், Heritage Images

அவர் தனது கவிதையில் வடித்த எழுத்துகளை வைத்தே அவர் பெண்களின் நெருக்கம், உணர்ச்சி பற்றிய புரிதலை கொண்டிருந்தவர் என்றும் அவற்றை வைத்தே அவர் ஒரு பெண் தன்பாலின ஈர்ப்பாளர் என்றும் சில அறிஞர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

சாஃபோ விரிவான தலைப்புகளில் பெண் தன் பாலின ஈர்ப்பு பற்றி உரையாடியிருக்கலாம் மற்றும் அவரது பாலியல் நோக்குநிலையை விலக்கி வைக்க எந்த காரணமும் இல்லை என்றும் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார், வரலாற்று அறிஞர் சர் ரிச்சர்ட் லிவிங்ஸ்டன்.

அவரது கருத்தின்படி, சாஃபோ ஒரு லெஸ்பியன் ஆகக் கூட இருக்கலாம். ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான கவிதைகளை எழுதியிருக்கிறார். அதில் நமக்கு கிடைத்தவை மட்டுமே காதல், உணர்ச்சி, பெண்கள் தன்பாலின ஈர்ப்பு தொடர்பான கவிதைகள். அவற்றை மட்டுமே வைத்து அவர் லெஸ்பியன் என்ற முடிவுக்கு முழுமையாக வர இயலாது என்கிறார் ரிச்சர்ட் லிவிங்ஸ்டன்.

சாஃபோவின் பாலியல் தொடர்புகள்

எது எப்படியிருந்தாலும், சாஃபோ ஒரு தன் பாலின சேர்க்கை கவிஞர் என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, கி.மு. கிரேக்க பாடலாசிரியர் அனாக்ரியான் (கிமு 582 - 485),சாஃபோவுக்குப் பிறகு, லெஸ்போஸின் பெண்களை 'லெஸ்பியன்ஸ்' என்ற வார்த்தையை பயன்படுத்திக் குறிப்பிடுகிறார்.

"சாஃபோ பெரும்பாலும் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தார். பாலியல் நோக்குநிலை எதுவாக இருந்தாலும், காதல் அனுபவத்தை வெளிப்படுத்தி பிரபலமடைந்தார். காதல் ரசம் சொட்டச் சொட்ட அவர் தன் பாலியன பெண்களின் அழகியலை விவரித்தார்."

அறிஞர்களான மேரி ஆர். லெஃப்கோவிட்ஸ் மற்றும் மவுரீன் பி. ஃபான்ட் குறிப்பிடுகையில், "சாஃபோவின் பல கவிதைகள் ஆண்கள் பார்க்காத ஒரு உலகத்தை விவரிக்கிறது: பாலினத்தை பிரித்து வைத்திருக்கும் சமூகத்தில் பெண்கள் ஒருவருக்கொருவர் ஆழமான அன்பை உணர முடியும்" என்பதை அவரது கவிதை வலியுறுத்துகிறது. இந்த வழிகளில், சாஃபோவின் படைப்பில், 'லெஸ்பியன்' என்பது அன்பை மிகச் சரியாக வெளிப்படுத்தும் திறன் அல்லது அது பாலியல் நோக்குநிலைக்கு ஆதரவாக வாதிடுகிறது.

சாஃபோ தனது கவிதையில் காதலில் விழும் உற்சாகத்தை விளக்குகிறார். மீது கவனம் செலுத்துகிறார். சாஃபோ எழுதிய ஓட் டூ அப்ரோடைட் நூலைத் தவிர அவரது பிற படைப்புகள் அழிக்கப்பட்டு விட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாக மீட்கப்பட்ட சாஃபோவின் படைப்புகளை வைத்தே, அவர் வெளிப்படுத்திய காதல் உணர்வு எப்படி இருந்தது என்பதை அறிஞர்கள் பல கால கட்டங்களில் விவரிக்கிறார்கள்.

சாஃபோ தமது எல்லா கவிதைகளிலும் தனது காதலியைப் பாராட்டவில்லை. காரணம், அவரது ஒரு படைப்பில், "உங்களை விட எரிச்சலூட்டும் எந்த பெண்ணையும் நான் காணவில்லை, இரானா ..." (இலை, 18) என்று ஒரு வரியில் குறிப்பிடுகிறார்.

இருப்பினும், பிற கவிதை வரிகளில் பெரும்பாலானவை அன்பின் நெருக்கத்தை ஒப்புக் கொள்ளும் வாக்குமூலங்களாக உள்ளன. அவரது ஓட் டூ அப்ரோடைட்டில் ஒரு இளம் பெண்ணின் பாசத்தை வெல்ல உதவுவதற்காக அன்பின் தெய்வத்திடம் அவர் வேண்டுவது போன்ற வரிகளை குறிப்பிடுகிறார் சாஃபோ.

சமீபத்திய கண்டுபிடிப்புகள்

சாஃபோ லெஸ்பியன்

பட மூலாதாரம், Dirk Obbink

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள நிபுணர் தன்னிடம் கொடுக்கப்பட்ட பண்டைய பாப்பிரஸின் (பண்டைய புல்தாள் வரைவு) ஒரு பகுதி, காலத்தால் அறியப்படாத கிரேக்க கவிஞர் சாஃபோவின் படைப்புகள் என தெரிய வந்துள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்பு கூறினார். அது சாஃபோ எழுதிய ஒன்பது தொகுதிகளில் ஒன்று என்றும் அது, "சாஃபோவின் முதல் புத்தகத்திலிருந்து தெளிவாக வந்தவை" என்றும் குறிப்பிடுகிறார், அமெரிக்க பாப்பிராலஜிஸ்ட் டாக்டர் டிர்க் ஒபின்க்.பழங்கால கிரேக்கத்தில் வாழ்ந்த சோலோன், மிகவும் புத்திசாலியாகவும் சக மனிதர்களால் மதிக்கப்பட்டவராகவும் இருந்தவர். அவரை, கிரேக்கத்தின் ஏழு மகான்களில் ஒருவராக மக்கள் போற்றினர். "எல்லாவற்றிலும் மிதமான தன்மை" என்ற விதியை கற்பிப்பதில் பெயர் பெற்றவர். அவரே சாஃபோவின் பாடலை கற்ற பிறகு, இதை விட வேறு உணர்ச்சி இருக்க முடியாது என்று உணர்ச்சிபூர்வமாக கருத்தை பதிவிட்டுள்ளார்.

சாஃபோ என்ற பெண் எப்படி வாழ்ந்தார், எப்படி இறந்தார் என்பதற்கு சரியான சான்று கிடைக்கப்பெறவில்லை. கிரேக்க நகைச்சுவை நாடக ஆசிரியர் மெனாண்டர் (கி.மு 341-329) லூகாடியன் பாறைகளில் இருந்து சாஃபோ குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறுகிறார். ஃபேவ்ன் என்ற படகோட்டி மீதான காதல் தோல்வியால் அவர் அப்படி செய்திருக்கலாம் என்பது மெனாண்டரின் வாதம். ஆனால், அவரது கூற்றை பிற்காலத்தில் வாழ்ந்த வரலாற்றாய்வாளர்கள் நிராகரித்தனர். உண்மையில் அடோனிஸ் என்ற காதலனின் மறைவுக்குப் பிறகு துக்கம் தாளாமல், அப்ரோடைட்தான் கடலில் குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்றும், லெஸ்பியன் ஆக அறியப்பட்ட சாஃபோ, ஒரு ஆணுக்காக தற்கொலை செய்து கொண்டார் என நகைச்சுவையாகவே ஒரு கதையை மெனாண்டர் கட்டவிழுத்து விட்டார் என்றும் வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற பல கதைகள் கூறப்படுகின்றன.

ஆனால், தமது வயோதிகத்தில் இயற்கையாகவே சாஃபோ மரணம் அடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கிரேக்க அறிஞர் லியோனின் கூற்றுப்படி, சாஃபோவின் கவிதைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. அந்த காலத்தில் லெஸ்போஸ் நகரவாசிகளால் அவர் மிகவும் விரும்பப்பட்டார். அவரது பாடல்கள் அவரது மரணத்திற்குப் பிறகும் தொடர்ந்து பாடப்பட்டன. தனது கவிதைகளை தனது "அழியாத மகள்கள்" என்று அவர் எழுதி வைத்திருந்தார். எனவேதான் 2,000 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த கவிதையை வாசிக்கவும் நேசிக்கவும் இப்போது வாழும் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :