மகேந்திர சிங் தோனி தோனி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கு சம்பளம் வாங்காமல் பணிபுரிவார்: சவ்ரவ் கங்குலி

தோனி கோலி

பட மூலாதாரம், Getty Images

இன்னும் சில நாள்களில் தொடங்க இருக்கும் டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் ஆலோசகராகப் பணிபுரிவதற்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி எந்தவிதமான சம்பளமும் பெறவில்லை என்ற செய்தியைக் கேட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் நாடுகளில் நடக்கும் இந்தப் போட்டிகளுக்கு கட்டணம் எதையும் பெறாமல் பணியாற்றுவதற்கு தோனி முன்வந்ததாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சவ்ரவ் கங்குலி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார். இந்தத் தகவலை வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷாவும் உறுதி செய்திருந்தார்.

தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தலைவராக ஆடிக் கொண்டிருக்கும் தோனி, போட்டிகள் நிறைவடைந்ததும் இந்திய அணிக்கான பணியைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கு மட்டுமே அவரது பணி இருக்கும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

தோனி கேப்டனாக இருந்தபோது பல முக்கியமான கோப்பைகளை இந்திய அணி வென்றிருக்கிறது. 2007-ஆம் ஆண்டு நடந்த டி-20 உலகக் கோப்பை போட்டிதான் தோனியின் தலைமைப் பணியின் தொடக்கப் புள்ளி. அந்தக் கோப்பையை இந்தியா வென்றதன் மூலமாக அணியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்ததுடன் தலைமைப் பதவிக்கும் உயர்த்தப்பட்டார்.

2011-ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின்போதும் அணியின் தலைவராக இருந்தார். 2013-ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதும் அவர் தலைமையிலான அணிதான்.

2013- ஆண்டுக்கு சாம்பியன்ஸ் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய அணி எந்தவொரு ஐசிசி தொடரிலும் கோப்பையை வெல்லவில்லை.

பெரிய தொடர்களின் முக்கியப் போட்டிகளின்போது இந்திய அணி தடுமாறுவது வாடிக்கையாகி விட்டதாகவே விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

தோனி

பட மூலாதாரம், IPL/BCCI

2017-ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. 2019- உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி வரை முன்னேறி நியூசிலாந்து அணியிடம் தோற்றுப்போனது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளைத் சரியாகக் சமாளிக்கும் திறன் கொண்டவராகவே மகேந்திர சிங் தோனி பார்க்கப்படுகிறார்.

அணியின் ஆலோசகராக தோனி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இருபது ஓவர் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து உலகக் கோப்பை போட்டிகளுடன் ஓய்வு பெறப் போவதாக தற்போதைய அணித் தலைவர் விராட் கோலி அறிவித்திருந்தார்.

ஆயினும் விராட் கோலிக்கு மாற்றாகவோ அவருக்குப் போட்டியாகவோ மகேந்திர சிங் தோனி மீண்டும் கொண்டு வரப்படவில்லை என்பதை இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது ஜெய் ஷா தெளிவுபடுத்தியிருந்தார்.. கோலியுடனும், அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடனும் ஆலோசனை நடத்தி, அவர்களின் விருப்பத்துடனேயே தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டதாகவும். அவர் தெரிவித்தார்.

சம்பளம் ஏதும் வாங்காமல் இந்திய அணிக்காக மகேந்திர சிங் தோனி பணியாற்றப் போவது தொடர்பாக கங்குலியும் ஜெய் ஷாவும் கூறியதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகிறார்கள்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

சர்வதேசப் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டாலும் ஐபிஎல் தொடர்களில் அவர் தொடர்ந்து ஆடி வருகிறார். அதிலும் அவர் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிதும் மதிக்கப்படும், வெற்றி வாய்ப்புள்ள அணியாகவே திகழ்ந்து வருகிறது. இப்படி கிரிக்கெட் விளையாட்டுடன் தோனி தன்னை நெருக்கமாகத் தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறார்.

டெல்லி அணியுடனான ஐபிஎல் போட்டியில் ஆறே பந்துகளில் வெற்றிக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்பட்ட 18 ரன்களைக் குவித்ததால் தோனியை அவரது ரசிகர்கள் ஏற்கெனவே கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

20 ஓவர் உலகக் கோப்பை போட்டி

இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 17-ஆம் தேதியில் இருந்து நவம்பர் 14-ஆம் தேதி வரை ஓமனிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் நடக்கிறது.

முதலில் அக்டோபர் 22-ஆம் தேதி வரை தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடக்கின்றன. 24-ஆம் தேதியில் இருந்து சூப்பர் 12 என்ற இரண்டாவது சுற்று நடைபெறுகிறது. இந்தியா உள்பட ஐசிசி தர வரிசையில் முதல் 8 இடங்களைப் பெற்ற நாடுகள் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டன.

டெஸ்ட் அந்தஸ்து பெற்று தர வரிசையில் முதல் 8 இடங்களுக்குள் வராத இலங்கையும் வங்கதேசமும் தகுதிச் சுற்றில் ஆட வேண்டும். இந்தச் சுற்றில் இந்த இரு அணிகள் தவிர மேலும் 6 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இரு பிரிவாக நடக்கும் இந்தச் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும்.

சூப்பர் 12 சுற்றும் இரு பிரிவாக நடக்கிறது. அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குச் செல்லும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :