'மகாத்மா காந்தி சொல்லித்தான் சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதங்கள் எழுதினார்' - ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம், PIB India

படக்குறிப்பு, சாவர்க்கர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டார் என்று ராஜ்நாத் சிங் தமது உரையில் குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்கவே விநாயக் தாமோதர் சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதங்களை எழுதினார் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் இந்திய பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆனால், அது குறித்த ஆதாரங்களை அவர் வெளியிடவோ சுட்டிக்காட்டவோ இல்லை.

1915இல் தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தி இந்தியா திரும்பும் முன்னரே, 1911, 193, 1914 ஆகிய ஆண்டுகளில் சாவர்க்கரின் மன்னிப்புக் கடிதங்கள் எழுதப்பட்டிருந்தன.

இந்திய வலதுசாரிகளால் 'வீர் சாவர்க்கர்' என்று அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் குறித்த நூல் ஒன்றின் வெளியீட்டு விழா செவ்வாயன்று டெல்லியில் நடந்தது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது பேசிய ராஜ்நாத் சிங் சாவர்க்கர் ஓர் உறுதியான தேசியவாதி என்றும் இருபதாம் நூற்றாண்டின் இந்தியாவின் முதல் ராணுவ உத்தியாளர் என்றும் தெரிவித்தார்.

மார்க்சிய மற்றும் லெனினிய சித்தாந்தங்களைப் பின்பற்றுவோர் சாவர்க்கரை ஃபாசிஸ்ட் என்று தவறாகக் குற்றம் சாட்டுவதாகவும் ராஜ்நாத்சிங் விமர்சித்தார்.

"இந்திய வரலாற்றில் சாவர்க்கர் ஒரு முக்கியமான சின்னம் அவர் அப்படிப்பட்டவராகவே தொடர்வார். அவரைப் பற்றி கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் அவரை தாழ்ந்து நோக்குவது முறையானதோ ஏற்றுக்கொள்ளத்தக்கதோ அல்ல. அவர் சுதந்திரத்திற்காக போராடியவர்," என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

சாவர்க்கர் விடுதலை போராட்டத்திற்காக போராடியது குறித்து குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அவருக்கு பிரிட்டிஷ் ஆட்சி இரண்டு முறை ஆயுள் சிறை தண்டனை விதித்து என்றார்.

'காந்திதான் மன்னிப்புக் கடிதம் எழுதச் சொன்னார்'

மகாத்மா காந்தி

"சாவர்க்கர் குறித்து தொடர்ச்சியாக பொய்கள் பரப்பப்பட்டு வருகின்றன அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக பலமுறை மன்னிப்புக் கடிதங்கள் எழுதியவர் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் மகாத்மா காந்திதான் அவரை மன்னிப்புக் கடிதங்கள் எழுத சொன்னார்," என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள் தொடர்பாக மிகவும் விரிவான கோட்பாடுகளை இந்தியாவுக்கு தந்தவர் சாவர்க்கர் என்றும் ராஜ்நாத் சிங் பேசினார்.

சாவர்க்கரின் இந்துத்துவ கொள்கை குறித்து பேசியவர், 'இந்து' எனும் சொல் எந்த மதத்துடனும் தொடர்புடையதாக இல்லை; புவியியல் மற்றும் அரசியல் அடையாளத்துடன் தொடர்புடையது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். சாவர்க்கரின் இந்துத்துவ கொள்கை கலாசார தேசிய வாதத்துடன் தொடர்புடையதாக இருந்தது என்றும் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டார்.

இந்துத்துவ கொள்கை மற்றும் இந்திய சமூகத்தில் ஒற்றுமை ஆகியவை குறித்து பலர் பேசினார்கள். ஆனால் சாவர்க்கர்தான் அதை உரக்கப் பேசினார். அவ்வாறே அவை குறித்து பிறரும் உரக்கப் பேசியிருந்தால் தேசப்பிரிவினை நடந்திருக்காது என்று பல ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றுகிறதுஎன்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

வீர் சாவர்க்கர் எழுதிய மன்னிப்பு கடிதங்கள் எத்தனை?

'மகாத்மா காந்தி சொல்லித்தான் சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார்' - ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM

படக்குறிப்பு, அந்தமான் செல்லுலார் சிறையில் அவர் கழித்த 9 ஆண்டுகள், 10 மாதங்கள் அடைக்கப்பட்டிருந்தார் சாவர்க்கர்.

விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் எப்போதாவது மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்பது போன்ற பதிவுகள் ஏதும் அரசிடம் இல்லை என்று இந்திய கலாசார அமைச்சகத்தின் சார்பில் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.

ஆனால் வரலாற்றுத் தகவல்களின்படி சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார். அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதந்தோறும் அறுபது ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார் சாவர்க்கர்.

தம் மீது கருணை காட்டுமாறும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராட மாட்டேன் என்றும் அவரது மன்னிப்புக் கடிதங்களில் குறிப்பிட்டிருந்தார்.

1911இல் அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் ஒன்பது ஆண்டுகளில் ஐந்து மன்னிப்பு கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதினார்.

செல்லுலார் சிறையில் இருந்த சாவர்க்கரால் 1911, 1913, 1914, 1918 மற்றும் 1920 ஆகிய ஆண்டுகளில் அவை எழுதப்பட்டன. ஆறாவதாக ஒரு மன்னிப்பு கடிதம் 1924ல் பிரிட்டிஷ் அரசுக்கு எழுதப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் இருந்த மகாத்மா காந்தி 1915ல்தான் இந்தியா திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1949 இல் காந்தி படுகொலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு பேரில் சாவர்க்கரும் ஒருவர்.

ஆனால் உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் இறுதியில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்திய விடுதலைக்கு பின், காந்தி கொலை வழக்கில் விசாரணைக்கு உள்ளானபோது அப்போதைய பம்பாய் (மும்பை) மாநகர காவல் ஆணையருக்கு 1948ஆம் ஆண்டிலும், பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 1950ஆம் ஆண்டிலும் அரசியல் நடவடிக்கைகளில் இனி ஈடுபட மாட்டேன் என்று கடிதம் எழுதினார் விநாயக் தாமோதர் சாவர்க்கர்.

'சாவர்க்கரை தேசத் தந்தையாக அறிவிக்கக்கூடும்'

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ராஜ்நாத் சிங்கின் பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ளன. ஏ.என்.ஐ செய்தி முகாமையிடம் பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, பாஜகவினர் திரிக்கப்பட்ட வரலாற்றை வழங்குவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

"இது தொடர்ந்தால் மகாத்மா காந்தியை நீக்கிவிட்டு நீதிபதி ஜீவன்லால் கபூரின் விசாரணையின்போது காந்தி கொலையில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் சாவர்க்கரை தேசத் தந்தையாக அவர்கள் அறிவிக்கக் கூடும்," என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :