டெல்லி - சிங்கு எல்லையில் தலித் விவசாயி படுகொலை - அதிர்ச்சியில் போராட்டக் குழுவினர்

பட மூலாதாரம், Hindustan Times
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
டெல்லி மற்றும் ஹரியாணாவின் சிங்கு எல்லையில் இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதிக்கு அருகே விவசாயி ஒருவர் கொல்லப்பட்டு அவரது சடலம் போலீஸ் தடுப்பில் தலைகீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம், விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவசாயியின் மணிக்கட்டும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அவரது உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இது குறித்து சோனிபட் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹன்ஸ்ராஜ் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறுகையில், "வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது மணிக்கட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சோனிபட் குண்டலியில் இந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. இதற்கு யார் பொறுப்பு? என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை." என்று தெரிவித்தார்.
இப்போதைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
உள்ளூர் பத்திரிகையாளர் தில்பாக் டேனிஷின் கூற்றுப்படி, இறந்த லக்பீர் சிங் தனது சகோதரியுடன் வசித்து வந்தார்.சிங்கு எல்லையில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஐக்கிய கிசான் மோர்ச்சா கண்டனம்
இந்த சம்பவத்திற்கு ஐக்கிய கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், "யுனைடெட் கிசான் மோர்ச்சா, இந்த கொடூர கொலையை கண்டிக்கிறது. யுனைடெட் கிசான் மோர்ச்சாவுக்கு இந்த சம்பவத்தின் இரு தரப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்," என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அமைப்புதான் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 40 விவசாய சங்கங்களையும் தமது குடையின்கீழ் வைத்துள்ளது.

பட மூலாதாரம், Ravinder Singh Robin
"ஆனால் இந்த அடிப்படையில் எந்த ஒரு நபரும் அல்லது குழுவும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. கொலை மற்றும் கொலைச் சதி குற்றச்சாட்டை விசாரிப்பதன் மூலம் குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.""ஐக்கிய கிசான் மோர்ச்சா எந்த சட்டபூர்வ நடவடிக்கையிலும் காவல்துறை மற்றும் நிர்வாகத்துடன் ஒத்துழைக்கும். இந்த இயக்கம் ஜனநாயக மற்றும் அமைதியான முறையில் இயங்குகிறது. எந்த வன்முறையையும் எதிர்க்கிறது."

பட மூலாதாரம், Ravinder Singh Robin
லக்பீர் சிங்கின் மாமா பால்கர் சிங் பிபிசியின் ரவீந்திர சிங் ராபினிடம் பேசும்போது, லக்பீருக்கு ஒரு சிறிய குடும்பம் மற்றும் 8,10,12 வயதில் பிள்ளைகள் இருப்பதாக கூறினார்.
மேலும் அவர், "நிச்சயமாக லக்பீருக்கு யாராவது போதைப்பொருள் கொடுத்திருக்க வேண்டும், யாரோ அவரை அங்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் ஏமாற்றப்பட்டிருக்க வேண்டும், குற்றவாளிகளை பிடிக்க வேண்டும்," என்றார்.
இதற்கிடையே, சீக்கியர்களின் புனித நூலை லக்பீர் சிங் அவமதித்ததாகவும், அதனால், ஆத்திரமடைந்த நிஹாங்ஸ் அமைப்பினர், அவரை அடித்துக் கொலை செய்திருக்க வேண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஒரு காணொளியும் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் எந்தவொரு காணொளி அல்லது வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வைரலாகி வரும் காணொளியில், வாள் ஏந்திய சிலர் நிற்பதும், அவர்களின் அருகே லக்பீர் சிங் கை வெட்டப்பட்ட நிலையில் தரையில் விழுந்து கிடப்பதாகவும் காட்சி உள்ளது. மற்றொரு காணொளியில் லக்பீர் சிங்கின் உடல் தலைகீழாக தொங்க விடப்படும் காட்சி உள்ளது.
இதன் உண்மைத்தன்மையை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
காவல்துறையினர் இந்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
- உலகளவில் கணவர்களை காட்டிலும் மனைவிகள் குறைவாக பணம் ஈட்டுவது ஏன்? - வெளியான ஆய்வு
- கடைசி ஓவரில் கைமாறிய வெற்றி: கோப்பையை தவறவிட்ட டெல்லி அணி; சென்னையுடன் மோதும் கொல்கத்தா அணி
- எச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்க இந்திய ரயில்வே செய்யும் செலவு எத்தனை கோடி?
- மேனகா காந்தி தொடர்ந்த சாதாரண வழக்கு, இந்தியாவில் ஒரு முக்கிய வழக்கானது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












