விவசாயிகள் போராட்டம்: பல மாத போராட்டத்தை நினைவூட்டும் காட்சிகள்

பட மூலாதாரம், Getty Images
அது 2020, நவம்பர் 26. டெல்லி மற்றும் ஹரியாணா எல்லைகள், டெல்லி காவல்துறையால் தடுப்புகள் போட்டு சீலிடப்பட்டன. சிங்கு எல்லையில் பல அடுக்கு தடுப்புகள் போடப்பட்டிருந்தன. தடுப்புகள் மீது கம்பிகள் சுற்றப்பட்டிருந்தன. சாலையின் குறுக்கே சிமென்ட் ஸ்லாப்புகள் போடப்பட்டிருந்தன. எங்கு பார்த்தாலும் இந்திய துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆங்காங்கே கலவரத் தடுப்பு வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த ஏற்பாடுகள் எல்லாம், தலைநகர் டெல்லிக்குள் நுழைந்து இந்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராடும் விவசாயிகளை தடுப்பதற்காக செய்யப்பட்டன.
இந்த நிலையில், எல்லையில் காவல்துறையின் நடவடிக்கை தொடர்பான படங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி, நாளிதழ்கள் மூலமாக பரவின. அந்த படங்கள், ஜனநாயக முறைப்படி போராட வரும் விவசாயிகளை தடுக்க இப்படி ஒரு நடவடிக்கையா என்ற விவாதத்தை தேசிய அளவில் தூண்டின. காரணம், டெல்லியில் இதற்கு முன்பு இதுபோன்ற வகையில் மிகப்பெரிய தடுப்புகள் உள்ளிட்ட அரண்களை தலைநகர மக்கள் பார்த்திருக்கவில்லை.
டெல்லி மட்டுமின்றி டெல்லியை இணைக்கும் ஹரியாணா தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மேற்கொண்டு செல்லாத வகையில், சாலையில் பெரிய அளவிலான குழிகளை அங்குள்ள காவல்துறையினர் தடுப்பை ஏற்படுத்தியிருந்தனர். இந்த தேசிய நெடுஞ்சாலை 44தான் டெல்லியில் இருந்து ஹரியாணா, பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களை இணைக்கக் கூடிய முக்கிய பாதை.
முன்னதாக, ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் டெல்லி நோக்கி புறப்பட்டனர். நவம்பர் 25ஆம் தேதி, அவர்களில் பலர் டெல்லி எல்லையில் காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த தடுப்புகளுக்கு அருகே குவிந்து விட்டனர். பலரும் டிராக்டர், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்தனர்.
டெல்லி எல்லையில் முகாமிட்ட விவசாயிகள் பலரும் நவம்பர் 27ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையிலேயே கூடாரங்கள் போட்டு முகாமிட்டனர். இந்த காலகட்டத்தில் பல இடங்களில் டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆங்காங்கே அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது வாக்குவாதங்களும், தள்ளுமுள்ளும் ஏற்பட்ட காட்சிகள் ஊடகங்களில் ஒளிபரப்பாகி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தன.
வயோதிக சீக்கியர்களை தடியால் அடித்த காவலர்கள்

பட மூலாதாரம், PTI
இந்த படத்தில் துணை ராணுவப்படை வீரர் ஒருவர், வயோதிக சீக்கியர் ஒருவரை தடியால் தாக்குவது போன்ற காட்சி இடம்பெற்று தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள், இரக்கமற்ற வகையில் காவல்துறையினர் நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவாசியகள் மீது தாக்குவதாக குற்றம்சாட்டினார்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த படத்தை ட்வீட் செய்து ராகுல் பதிவிட்ட ட்வீட்டில், "மிகவும் துயரம் தரும் படம் இது. ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்றுதான் நாம் ராணுவ வீரரையும் விவசாயியும் போற்றி வெற்றி முழக்கமிடுவோம். ஆனால், இன்று நமது பிரதமரின் அடாவடியால் ஒரு ராணுவ வீரர், விவசாயிக்கு எதிராக திரும்பியிருக்கிறார். இது அபாயகரமானது," என்று கூறியிருந்தார்.
88 வயது மூதாட்டியின் போராட்டப்படம்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் 88 வயதாகும் பதிந்தாவைச் சேர்ந்த மஹிந்தர் கவுர் என்ற மூதாட்டி, தனது கையில் விவசாய அமைப்பின் கொடியுடன் போராட்ட களத்தில் இருக்கும் படத்தை பகிர்ந்தார். ஆனால், இதே பாட்டி ஷாஹீன் பாக் இயக்கத்தில் பங்கெடுத்தவர் என்றும் நூறு ரூபாய் கொடுத்தால் எங்கும் இவர் இருப்பார் என்றும் கங்கனா ரனாவத் குறிப்பிட்டு பகிர்ந்த பதிவு, சர்ச்சையானது.
இந்த மூதாட்டிதான் செல்வாக்கு படைத்த 100 பிரபலங்கள் என்ற டைம்ஸ் இதழ் பட்டியலில் இடம்பிடித்திருந்தார்.
அந்த மூதாட்டி பற்றிய விமர்சனம் கங்கனாவுக்கு எதிராகத் திரும்பியதால், அந்த படத்தை அவர் தமது பக்கத்தில் இருந்து அவர் நீக்கினார். ஆனால், விவசாயிகள் போராட்டத்தில் அந்த பாட்டி பங்கெடுத்த தருணத்தை பலரும் கொண்டாடியதால், விவசாய போராட்டத்தில் பங்கெடுத்த பெண்களின் முகமாக அவர் அடையாளப்படுத்தப்பட்டார்.
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் அரசு உணவை ஏற்காத விவசாயிகள்

பட மூலாதாரம், UNITED PEASANT FRONT
அது 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம். விவசாயிகள் அறிவித்த போராட்டத்தை தடுக்கும் வகையில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. டெல்லி விஞ்ஞான் பவனில் அந்த சந்திப்பு நடந்தது.
ஆனால், பல சுற்றுகளாக நடந்த பேச்சுவார்த்தை டிசம்பர் 5ஆம் தேதிவரை நீடித்தது. அன்றைய தினம், அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வந்த விவசாயிகள் பலரும் நேரடியாக போராட்ட களத்தில் இருந்து வந்தனர். நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது உணவு இடைவேளையின்போது விவசாயிகள் சாப்பிடுவதற்காக பார்சல் உணவு வழங்கப்பட்டது. ஆனால், அந்த உணவை ஏற்காத விவசாயிகள், போராட்ட களத்தில் சமைத்துக் கொண்டு வந்திருந்த தங்களுடைய உணவை கூட்ட அரங்குக்கு வெளியே தரையில் அமர்ந்தவாறு சாப்பிட்டனர். இந்த படம் அரசுடன் எந்த வகையிலும் சமரசத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற விவசாயிகளின் மன உறுதிக்கு சான்று கூறுவதாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடந்தபோது, இதே விவசாயிகளுடன் அமர்ந்து இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உணவருந்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார்.
டெல்லி செங்கோட்டையில் வன்முறை

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN / AFP VIA GETTY IMAGES
டெல்லியில் ஜனவரி 26ஆம் தேதி செங்கோட்டையை முற்றுகையிடும் பேரணியை நடத்துவோம் என்று விவசாயிகள் அறிவித்தனர். ஏற்கெனவே இரண்டு மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், செங்கோட்டை முற்றுகைக்காக பல ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதற்காக பல்லாயிரக்கணக்கான டிராக்டர்கள் டெல்லி எல்லைகளில் குவிந்தன.
குடியரசு தினத்தன்று விவசாயிகள் போராட்டத்துக்கு திட்டமிட்டிருந்ததால், முன்னெப்போதுமில்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. அதே சமயம், டெல்லியில் புறநகரை இணைக்கும் அவுட்டர் ரிங் சாலை வரை மட்டுமே விவசாயிகள் நுழையலாம் என்று கூறி ஒரு சில விவசாயிகளை நகருக்கு உள்ளே காவல்துறையினர் அனுமதித்தனர்.
ஆனால், காவல்துறையினர் எதிர்பார்க்காத வகையில் திடீரென நூற்றுக்கணக்கான விவசாயிகள் காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை தள்ளிக்கொண்டு செங்கோட்டை நோக்கி வேகமாக டிராக்டர்களில் புறப்பட்டனர். ஒரு சில நிமிடங்களில் அவர்களால் செங்கோட்டையை அடைய முடிந்தது. அங்கு சீக்கிய இளைஞர்கள் குழு ஒன்று சீக்கிய சாஹிப் கொடியை செங்கோட்டை கொடி கம்பத்தில் பறக்க விட்டது. அந்த காட்சிகள் ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பாகின. போராட்டக்குழுவினர் சில மணி நேரம் செங்கோட்டை வளாகத்தை தங்கள் வசப்படுத்தியிருந்தனர்.
பின்னர் அதிரடிப்படையினர் பெருமளவில் வந்து அந்த இடத்தை மீட்டனர். அப்போது விவசாயிகள் குழுவில் கலந்த நபர்கள் தடை செய்யப்பட்ட காலிஸ்தானி பயங்கரவாத சக்திகள் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பின்னாளில் நடிகர் தீப் சித்து என்ற வட மாநில திரைப்பட நடிகரும் கைது செய்யப்பட்டார்.
கண்ணீர் சிந்திய விவசாய தலைவர்கள்

பட மூலாதாரம், ANI
அறவழியில் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி அதுநாள் வரை விவசாயிகள் நடத்திய போராட்டம், மக்களிடம் அபிமானத்தை பெற்ற வேளையில், திடீரென ஒரு சில குழுவினர் மேற்கொண்ட வன்முறை செயல்கள், தங்களுடைய போராட்டத்தின் திசையையும் நோக்கத்தையும் பலவீனப்படுத்தும் வகையில் அமைந்ததால் விவசாயிகள் கவலைப்பட்டனர்.
விவசாயிகள் சங்கங்களில் ஒன்றின் தலைவரான ராகேஷ் திகெய்த், கண்ணீர் மல்க தமது கவலையை வெளிப்படுத்தினார். அந்த வன்முறை குழுவினரின் செயலால் போராட்ட களத்தில் இருந்து விவசாயிகளை கட்டாயமாக வெளியேற்றும் சூழல் உருவானது.
திகெய்த் இருந்த டெல்லி, உத்தர பிரதேசத்தை இணைக்கும் காஸிபூர் பகுதியில் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். அங்கு நூற்றுக்கணக்கான கூடாரங்களைப் போட்டு விவசாயிகள் மாதக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தகைய பதற்றமான சூழலில் ராகேஷ் திகெய்த் கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு நடந்த நிகழ்வு தொடர்பாக அளித்த பேட்டி உணர்ச்சிமயமானதாக இருந்தது. அந்தத் தருணமே மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை எழுச்சி பெறச் செய்தது.

பட மூலாதாரம், Getty Images
பிறகு நீதிமன்றம் சென்ற விவசாயிகளின் போராட்ட விவகாரம், விவசாயிகளுடன் அமைதி வழியில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயற்சிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தவும் காரணமாகியது. அப்போது முதல் டெல்லி எல்லையில் உள்ள விவசாயிகளை காவல்துறையினர் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதில்லை. இப்போது அவர்களின் போராட்டம் ஆறு மாதங்களை நிறைவு செய்திருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து அழைப்பு வராத சூழலில் மத்தியில் பிரதமர் நரேந்திர மோதி 2019இல் ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை ஏழு ஆண்டுகள் ஆவதால், இன்றைய நாளை கருப்பு தினமாக விவசாயிகள் அனுசரித்தார்கள்.
கொரோனா பரவல் தீவிரமாகி வரும் இந்த காலகட்டத்திலும் விவசாயிகள் பலரும் அவர்களால் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை போல இல்லை. ஆனாலும், எஞ்சியிருக்கும் விவசாயிகள், மற்ற விவசாயிகளின் பிரதிநிதிகளாக அரசிடம் இருந்து தங்களுக்கு அழைப்பு வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
பிற செய்திகள்:
- கருப்புப்பூஞ்சை: தமிழ்நாட்டில் எதிர்ப்பு மருந்துக்கு தட்டுப்பாடு, என்ன செய்கிறது அரசு?
- ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கூட்டாக எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டது ஏன்? கட்சிக்குள் மோதலா?
- கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன?
- இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்?
- மியூகோர்மைகோசிஸ்: இந்தியாவில் கொரோனா தொடங்கியது முதல் 8,800 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று
- கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து தப்ப நடுவானில் திருமணம் செய்த மதுரை தம்பதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












