விவசாயிகளின் போராட்ட திட்டம் என்ன? எப்படி முடியும் இந்த போராட்டம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அர்விந்த் சாப்ரா (சண்டிகர்)
- பதவி, குஷால் லாலி (டெல்லி)
இந்திய அரசுடனான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கிறது. இருந்தபோதும், தங்களின் கோரிக்கைகளில் உறுதியுடன் இருக்கும் விவசாயிகள், மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று எச்சரித்துள்ளனர்.
ஜனவரி 4ஆம் தேதி நடந்த கூட்டம் விவசாயிகள் பிரச்னையைத் தீர்க்கவில்லை. வேளாண் சட்டங்களில் ஒவ்வொரு பிரிவாக திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாக அரசாங்கம் வலியுறுத்துகிறது. ஆனால் விவசாயிகளோ, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியுடன் இருக்கிறார்கள்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பல மாதங்களாக இந்த மூன்று சட்டங்களுக்கும் எதிராக தங்கள் குரலை விவசாயிகள் பதிவு செய்தனர்.
அதன் பிறகு இந்த இரு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், மற்ற மாநில விவசாயிகளுடன் சேர்ந்து, டெல்லியின் எல்லைகளில் முகாமிட்டனர். தொடக்கத்தில் டெல்லி எல்லைக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்ட அவர்கள், பிறகு டெல்லி புறநகர் எல்லையில் உள்ள சிங்கு பகுதியில் போராட்டத்தை நடத்துகின்றனர்.
ஜனவரி 8ஆம் தேதியுடன் இவர்களின் போராட்டம் 44ஆம் நாளை எட்டியிருக்கிறது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கடுமையான குளிரையும் தாண்டி டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் தேசிய நெடுஞ்சாலைகளை விவசாயிகள் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில், பங்கேடுத்தவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக விவசாய சங்கங்கள், காவல் துறையினர் மற்றும் மாநில தலைவர்கள் கூறுகிறார்கள்.
விவசாயிகள் ஏன் போராட்டத்தை தீவிரப்படுத்துகிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
வியாழக்கிழமை (ஜனவரி 7) விவசாயிகள் "டிராக்டர் பேரணி" நடத்தினர். குண்ட்லி - மானேசர் - பல்வால் மற்றும் குண்ட்லி - காசியாபாத் - பல்வால் புறவழிச்சாலைகள் மற்றும் டெல்லியின் புறநகரில் விவசாயிகளின் "டிராக்டர் பேரணி" நடந்தது.
"விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் 26 ஆம்தேதி டெல்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் டிராக்டர்களை ஓட்டி ஏராளமான பெண்கள் வரலாற்றை உருவாக்குவார்கள்'' என ஹரியாணாவில் ஜிந்த் அருகே ஒரு நெடுஞ்சாலையில் தனது டிராக்டரை ஓட்டி வந்த மகிளா ஏக்தா மோர்ச்சாவைச் சேர்ந்த சியிகிம் உச்சன் கூறுகிறார்.
வியாழக்கிழமை நடைபெற்ற டிராக்டர் அணிவகுப்பு, வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்திற்கு முன் அரசாங்கத்திற்கு அதிக அழுத்தம் கொடுப்பதாக அமையும் என விவசாயிகள் நம்புகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் டெல்லியின் மையத்திலேயே 'டிராக்டர் அணிவகுப்பை நடத்துவது' உள்ளிட்ட பல திட்டங்களை வைத்திருக்கிறார்கள் விவசாயிகள்.
இந்த நிகழ்வுகள் வெறுமனே அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமல்லாமல், உறையும் குளிரில் அமர்ந்து போராடும் ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஏதோ ஒரு வேலையில் ஈடுபடுத்துவதாக அமையும் என தோன்றுகிறது.
இப்படி வரிசைகட்டி நடக்கும் விவசாயிகள் போராட்டம், விவசாயிகள் நீண்ட காலத்துக்கு போராட தயாராக உள்ளனர் என்கிற செய்தியை அரசாங்கத்திற்கு உணர்த்துகிறது.
சுதந்திரத்திற்கு முந்தைய விவசாய தலைவர் செளத்ரி சோட்டுராமின் நினைவு நாளான ஜனவரி 9ஆம் தேதி, டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தர்சன் பால் பிபிசியிடம் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சத்தியசோதக் சமாஜின் ஆயிரக்கணக்கான விவசாயிகள், விரைவில் ஜெய்ப்பூர் டெல்லி நெடுஞ்சாலையை வந்தடையவிருக்கிறார்கள். இப்படி நாடு முழுவதிலுமிருந்து விவசாயிகள் தொடர்ந்து டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறார் தர்சன் பால்.
விவசாயிகளுக்கு என்ன வழிகள் உள்ளன?

பட மூலாதாரம், Getty Images
"ஒரு விவசாய சங்கத் தலைவர் இப்போது நாம் வலியுறுத்தி வரும் கோரிக்கைகளை தளர்த்த முயன்றாலும், நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். தற்போது இந்த போராட்டம் யூனியன் தலைவர்களைத் தாண்டிச் சென்றுவிட்டது. இந்தச் சட்டங்களை ரத்து செய்வதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள்" என சமீபத்தில் சிங்கு எல்லை முகாமில் அண்மையில் பேசினார் 70 வயதுக்கு மேற்பட்ட விவசாய சங்கத் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால்.
"பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை, விவசயிகள் சங்கத் தலைவர்கள் எத்தனை நாட்களுக்கு சாலைகளில் தக்க வைத்துக் கொள்ள முடியும்? இது நாடு தழுவிய போராட்டம் எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதைப் பொறுத்தது. இதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
வேறு ஏதேனும் வழி இருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images
விவசாய சட்டங்களை இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்து தற்காலிகமாக பிரச்சனையை சரி செய்யலாம் என, கிராமம் & தொழில்துறை மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் (சி.ஆர்.ஆர்.ஐ.டி) பேராசிரியர் ஆர்.எஸ்.குமான் மற்றும் மூத்த பத்திரிகையாளர் ஜக்தார் சிங் கருதுகின்றனர்.
இந்தியாவில் விவசாயப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் ஒருமித்த கருத்தை வளர்த்தெடுப்பதற்கு இந்த நேரத்தை பயன்படுத்த வேண்டும் என பேராசிரியர் குமன் கூறுகிறார்.
விவசாயிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநில அரசுகள் உட்பட அனைவரும் இடம்பெற்றிருக்கும் வகையில் ஒரு புதிய குழுவை உருவாக்க வேண்டும். அதன் பிறகு இந்தக் குழுவின் கண்டுபிடிப்புகளை விளக்கி புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என குமன் மற்றும் ஜக்தார் சிங் இருவரும் கருதுகின்றனர்.
புதிய விவசாயச் சட்டங்களை அமல்படுத்தும் வேலையை மாநிலங்களிடம் விட்டு விடலாமென டெல்லியின் அதிகார வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மற்றொரு பரிந்துரை என்னவென்றால், மத்திய அரசு, மாநில அரசாங்கங்களுக்கு மானியம் வழங்கலாம். மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கொடுத்து விவசாயப் பொருட்களைக் கொள்முதல் செய்துகொள்வார்கள்.
இவை எல்லாமே பரிந்துரைகள் மட்டும் தான். உண்மையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளத் தயாராக உள்ளது, ஆனால் சட்டங்களை ரத்து செய்யத் தயாராக இல்லை.
இந்த விவசாயிகள் போராட்டத்தில் மற்றொரு அம்சம், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த போராட்டம் தொடர்புடைய மனு தான். அது வரும் ஜனவரி 11-ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. முந்தைய விசாரணையில் போராடுவது விவசாயிகளின் உரிமை என உச்ச நீதிமன்றம் கூறியது நினைவுகூரத்தக்கது. சில காலம் சட்டங்களை ஒத்தி வைக்க முடியுமா என நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டது, அதற்கும் மத்திய அரசு ஒத்துவரவில்லை.
விவசாயிகள் மற்றும் அரசு தரப்பு என இருபக்கமும் விட்டுக் கொடுக்காததால், நீதிமன்றத்தின் தலையீடு மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படலாம் என இரு தரப்பினரும் நம்புகிறார்கள்
பிற செய்திகள்:
- ஜனவரி 20இல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு
- அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவு கும்பல் கலவரம், 4 பேர் பலி: வரலாறு காணாத காட்சிகள்
- "திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி; 100% தேவையற்ற ஒன்று" - சுயநலத்துக்காக அரசியல் செய்கிறதா திரைத்துறை?
- தலை முடி உதிர்வுக்கு தீர்வு என்ன?
- "திரையரங்கில் 100% பார்வையாளர்கள் தற்கொலைக்கு சமம்" - மருத்துவரின் ஆதங்க பதிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












