"திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி; 100% தேவையற்ற ஒன்று" - சுயநலத்துக்காக அரசியல் செய்கிறதா திரைத்துறை?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜி.கே. இந்திரன்
- பதவி, பத்திரிகையாளர்
(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். பிபிசியின் கருத்துகள் அல்ல. - பிபிசி தமிழ் ஆசிரியர்)
அரசியலின் முதல் படி சமூக சேவை. அதுவும் ஒரு 'சம்பாதிக்கும் தொழில்' என்று விமர்சனம் செய்து ஹிட் அடித்த படங்கள் எத்தனையோ. அது நிஜம் என்றாலும் கூட, திரைத்துறை மிக மிக சுயநலமிக்கது என்று தொடர்ந்து மெய்ப்பித்து வருகிறது.
ஹீரோ பேசும் வசனங்களும், அதன் இயக்குனர் தரும் பேட்டிகளும், அத்தனை சுவை மிகுந்தது. நாட்டையே திருத்தக்கூடிய இந்த இருவரும் அரசியலுக்குள் வந்தால், எத்தனையோ நன்மை என்று மக்கள் சிலாகித்துக்கொண்டிருக்கும் போதே, அதையெல்லாம் சுக்கு நூறாக்கிக்கொண்டிருப்பார் அந்த ஹீரோவையும் அந்த இயக்குனரையும் வைத்து 'முதல்' போட்ட தயாரிப்பாளர்.
அடுத்த வாரத்தில், அதே ஹீரோ… அதே இயக்குநர்… அதே தயாரிப்பாளர் ஒன்றாக அமர்ந்து தனியார் டிவி சேனலுக்கு காபி ஷாப் பேட்டியில் லூட்டி அடித்துக்கொண்டிருப்பார்கள்…
''நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்'' என்று அப்பாவி ரசிகனின் மனது கேள்வி கேட்கும்.
அதைத்தான், நடிகர்கள் விஜய் மற்றும் சிம்புவை பார்த்து கேட்கத்தோன்றுகிறது.
''உங்கள் படம் ஓட, ஓடி வந்து முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறீர்கள். ஆனால், முதல் கொரோனா, அது உருமாறி புறப்பட்டிருக்கும் மறு கொரோனா… இவைகளால் சமூகம் படப்போகும் கொடுமைகள் பற்றி உங்களுக்கு கவலையே இல்லையா'' என்று சமூக வலைத்தளங்களில் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒரு சாரார்.
கண்ணுக்கு தெரியாத எதிரியிடம் உலக நாடுகள், குறிப்பாக வல்லரசுகளே வலிமை இழந்து போராடி மீண்டு வரும் வேளையில் தான், இங்கிலாந்தில் ஒரு நாளில் 58 ஆயிரம் பேர் புதிய கொரோனா தாக்குதலில் சிக்கி வருகிறார்கள் என்ற செய்தியை படிக்கும் போது, உலகம் இன்னும் கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்பது உறுதியாகிறது.
உடனே, நமது இந்தியாவில் ஒரு சதவிகித்திற்கும் குறைவு என்றும், தற்போது கொரோனா பரவல் தாக்கமும் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் வாதிடலாம். இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் வேகமாக குறைந்து வருவது, கொரோனா பாதிப்படைந்தோர் ஆயிரத்திற்கும் கீழே இருப்பதும் வரவேற்க வேண்டியது தான்.
ஆனால், சென்னையில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களான ஐ.டிசி. கிராண்ட் சோழா மற்றும் லீலா பேலஸ் ஆகிய இரண்டு ஓட்டல்களை சென்னை மாநகராட்சி சீல் வைத்து இருக்கிறது. ஜனவரி 10-ம் தேதி வரை அங்கே எந்த நிகழ்ச்சியும் நடக்கக்கூடாது என்று நோட்டீஸ் ஒட்டியதோடு, அதைப்பற்றி எல்லா நாளிதழ்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஒரு பக்கம் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் விழாக்கள் நடத்த ரத்து. அங்கே தங்கியிருந்த விருந்தினர்களுக்கும் கொரோனா தொற்று பரவி நிலையில், அவர்களை வெளியேற்ற நடவடிக்கை. ஆனால், சென்னையில் தியேட்டர்களுக்கு மறுபக்கம் பச்சைக்கொடி.
கட்டுப்பாடு மிகுந்த ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு (டெம்ப்ரேச்சர் சோதனை - மாஸ்க் கட்டாயம் என்பது) ஒரு நியாயம். கட்டுப்படுத்த முடியாத ரசிகன் வரும் தியேட்டர்களுக்கு ஒரு நியாயம். என்ன முரண் இது?
130 பேர் கொண்ட குழுவை வைத்து ஷூட்டிங் நடத்தி, தினமும் ஷூட்டிங் அரங்கில் வரும் நபர்களுக்கு கடும் சோதனை நடத்திய போதே 'அண்ணாத்தே' படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தது. ஆனால், ஒரு ஷோவில் 500 முதல் 800 பேர் படம் பார்க்க வந்தால், ஒரு பாசிட்டிவ் நபர் எத்தனை பேருக்கு கொடுத்துவிட்டுப் போகப்போகிறார் என்று நினைத்துப் பாருங்கள்.

பட மூலாதாரம், Getty Images
பள்ளி, கல்லூரி தவிர தமிழ்நாட்டில் கோவில், அரசியல் கூட்டங்கள், டாஸ்மாக் பார், தியேட்டர் என எல்லாம் திறந்துவிட்ட நிலையில், இரண்டாவது அலை பரவக்கூடாது என்ற அச்சம் தமிழக அரசுக்குத்தான் அதிகமாக இருக்க வேண்டும். சமீபத்தில், இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் 33 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று தாக்கி இருப்பதாக தகவல் வருகிறது.
இந்த நிலையில், சிங்கிள் சோர்ஸ் என்று சொல்லப்படும் தியேட்டருக்குள் இருந்து இரண்டாவது அலை பரவ வேண்டுமா. ஒரு தியேட்டரில் நான்கு காட்சிகள் என்றால், ஒரு காட்சிக்கு 500 பேர் என்று வைத்துக்கொண்டாலும், நான்கு காட்சிகளுக்கு இரண்டாயிரம் பேர் படம் பார்ப்பார்கள். தமிழ்நாட்டில் ஆயிரம் தியேட்டரில் இப்படி பார்த்தால், 20 லட்சம் பேர் படம் பார்த்துவிட்டுச் செல்லும் நபர்களில் 10 % பேர் தொற்றுக்கு சிக்கினால் என்ன நிலைமை?
அரசியல் கூட்டங்களாவது திறந்தவெளி இடங்களில் நடக்கிறது. அதுவும் ஒரு மணி நேரத்திற்குள் எல்லா அரசியல் கூட்டங்களுக்கும் முடிந்துவிடும். ஆனால், குளிரூட்டப்பட்ட அரங்கில், 2.30 மணி நேரம் அமர்வது, நிச்சயம் 'ஏ-சிம்டமேடிக்' (அறிகுறியற்ற தொற்று) நபரால், எத்தனைப் பேர் பாதிக்கப்பட போகிறார்கள் என்பது பெரும் கேள்வி?
வெறும் ரசிகன் மட்டுமல்ல பாதிக்கப்படப்போவது. அந்த ரசிகன் தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் தன் தாய், தந்தை, மனைவி, மகன், மகள் மற்றும் தாத்தா, பாட்டியுடன் வசிக்கப்போகிறான். அந்த ரசிகனால், மீண்டும் ஒரு தொற்றுப்பரவலுக்கு தியேட்டர்கள் காரணமாகப்போகிறார்களா?
சீனாவிலிருந்து பரவிய முதல் டைப் கொரோனாவின் இரண்டாவது அலை இருக்கிறதா?
-தெரியாது!
இங்கிலாந்திலிருந்து பரவும் இரண்டாவது டைப் கொரோனாவின் தாக்குதல் இந்தியாவில் இருக்குமா?
-தெரியாது!
ஒன்று மட்டும் உறுதியாக தெரியும்.
50 % இருக்கையே தியேட்டர்களில் பாதுகாப்பானது இல்லை என்ற போது 100% இருக்கைக்கு அனுமதி கொடுப்பது தற்கொலைக்கு சமமானது.
அதுமட்டுமல்ல… மீண்டும் தமிழ்நாட்டில் பெரும் தொற்று பொங்கலுக்குப் பிறகு தொடங்கினால், அது நடிகர்களால் பரவிய தொற்று என்ற அவப்பெயர் கிடைத்துவிடும்.
அதுவும் சிம்பு அரசியலுக்கு வரப்போகிறாரா இல்லையா என்று தெரியாது…
அரசியல் ஆசை விஜய்க்கு இருக்கிறது.
சினிமா மட்டுமின்றி, அன்னா ஹசாரே போராட்டம் ஜல்லிக்கட்டு வரை நேரடியாக வந்து வாழ்த்துச் சொன்னவர் நடிகர் விஜய்.
நாளை அவரது சமூகப்பார்வையும் அரசியல் நடவடிக்கையும் கேலிக்கூத்து என்ற விமர்சனத்துக்குள் வந்துவிடும்.
நடிகர் அர்விந்த்சாமி ''தியேட்டரில் 50 % இருக்கை அனுமதியே போதும் '' என்கிறார். அவரும் நடிகர்தான்.
நடிகரைத்தாண்டி அர்விந்த்சாமி ஏன் பேசினார் என்பதையும், நடிகரோடு அரசியல்வாதியாக வர இருக்கும் விஜய் ஏன் முதல்வரை சந்தித்து 100% இருக்கைக்கு அனுமதி கேட்டார் என்பதையும் சமூகம் கவனத்தில் கொள்ளும்.

பட மூலாதாரம், Getty Images
விஜய்- சிம்பு கோரிக்கை வைத்தாலும், முடிவெடுத்து அனுமதி கொடுப்பது என்னவோ அரசாங்கம் தான். நடிகர்களை குறைசொல்வதைவிட, இதில் அரசாங்கம் தான் பெரும் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும்.
அந்த அரசாங்கத்திற்கு அவ்வப்போது ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்த மத்திய அரசின் பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் ''மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிவேகமாக பரப்பும். இதுபோன்ற இடங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்'' என்று சொல்லி இருக்கிறார்.
இச்செய்தி நடிகர் விஜய்க்கோ, சிம்புவிற்கோ அவர் சொல்லவில்லை. தமிழக அரசின் காதுகளுக்கு தான் பிரதீப் கவுர் சொல்லி இருக்கிறார்.
அதை கேட்கவில்லை என்றால்…
முதல்வர் பழனிச்சாமிக்கும் இது அடி சறுக்கலாக அமையக்கூடும்!
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி: கூட்டறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனங்கள்
- லாஸ்லியாவின் ஒரேயொரு பதிவு: இந்திய அளவில் ட்ரெண்டிங்!
- "திரையரங்க தளர்வு மருத்துவர்களை இழிபடுத்தும் செயல்" - வலுக்கும் விமர்சனம்
- வயதாவதால் பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலம் - தவிர்க்க முடியுமா?
- இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டட பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
- ஜாக் மா மாயமாகிவிட்டாரா? சீன அரசுடனான மோதல்போக்கு காரணமா? - எழுப்பப்படும் கேள்விகள்
- யுரேனியம் செறிவூட்டலை திடீரென அதிகரித்த இரான் - எச்சரிக்கும் உலக நாடுகள்
- தகனம் செய்யப்படும் கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: பிரச்சனை எழுப்பும் ஜாகிர் நாயக்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












