இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டட பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

பட மூலாதாரம், OM BIRLA OFFICIAL TWITER PAGE
இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை கட்டுவதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
நாடாளுமன்ற புதிய கட்டட திட்ட வடிவமைப்பின், அமலாக்கத்தில் விதி மீறல்கள் இருப்பதாக குற்றஞ்சாட்டி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த நிலையில், இந்த தீர்ப்பை மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று (ஜனவரி 5) வழங்கியுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்ற புதிய கட்டடம் மற்றும் அதையொட்டிய பிற கட்டுமானங்களை கட்டுவதற்கான 'சென்ட்ரல் விஸ்டா ப்ராஜெக்ட்'-ஐ தொடங்க இந்திய அரசு காட்டிவரும் தீவிரத்தின் மீது அதிருப்தி தெரிவித்திருந்தது.
மேலும், இந்த திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டலாம், ஆனால் கட்டுமானத்தைத் தொடங்கக் கூடாது என்றும் மரங்களை வெட்டக்கூடாது என்றும் நீதிபதி ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வு கடந்த டிசம்பர் 7ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
எனினும், திட்டமிட்டபடி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டடத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், தற்போது வழக்கின் இறுதித்தீரப்பு வெளியாகி உள்ளது.
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்ன?
மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இருவர் நாடாளுமன்ற புதிய கட்டடத்துக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வருங்கால கட்டமான திட்டங்களில், குறிப்பாக மாசுபாடு பிரச்சனை மிக்க நகரங்களில் தூசி பரவலை தடுக்க தேவையான கருவிகளை நிறுவுமாறு சுற்றுச்சூழல் அமைச்சகத்தை வலியுறுத்துவதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்போது பாரம்பரிய பாதுகாப்பு குழுவின் ஒப்புதல் தேவை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மத்திய விஸ்டா திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டிருந்த வழக்குகளில், நில பயன்பாட்டு விதிகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விதிகள் உள்ளிட்ட சில மீறல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம்பெற்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா மட்டும் இந்த திட்டத்தின் சில அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், "நில பயன்பாட்டு அனுமதி குறித்த விவகாரத்தில், எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. பாரம்பரிய பாதுகாப்பு குழுவின் முன் ஒப்புதல் பெறப்படவில்லை" என்று கூறினார்.
நாடாளுமன்ற புதிய கட்டடம் குறித்த முக்கிய தகவல்கள்
பிரதமர் மோதியின் முழக்கமான ஆத்மநிர்பார் பாரத் எனும் சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின்கீழ் இந்த புதிய கட்டுமானம் உருப்பெறவுள்ளது. நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் 2022ஆம் ஆண்டில் கொண்டாடப்படும்போது அப்போதைய கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடக்கும் என்று மோதி அரசு நம்பிக்கையுடன் உள்ளது.
நவீன கலைநயம், எரிசக்தி சேமிப்பு, சமரசத்துக்கு இடமில்லாத பாதுகாப்பு வசதிகள் என முக்கோண வடிவில் இந்த கட்டுமானம், தற்போதைய நாடாளுமன்றத்துக்கு பக்கத்தில் உள்ள இடத்தில் எழுப்பப்படவிருக்கிறது. அளவில் இது தற்போதைய மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளை விட மூன்று மடங்கு பெரிதாக இருக்கும்.
தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தின் வயது 93 ஆண்டுகள். அந்த வகையில், புதிய கட்டடம் 130 கோடி இந்தியர்களின் பெருமைமிகு அடையாளமாக திகழும் என்று இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா தெரிவித்திருந்தார்.
புதிய கட்டடத்தில் மக்களவை அரங்கில் 888 இருக்கைகளும் மாநிலங்களவை அரங்கில் 384 இருக்கைகளும் இருக்கும். தற்போதைய நிலையில் மக்களவையின் இருக்கைகள் எண்ணிக்கை 543, மாநிலங்களவை இருக்கை இடங்கள் 245 ஆகும். இதேபோல, இரு அவை கூட்டத்தொடரின்போது மக்களவையில் 1,224 பேர்வரை அமர்ந்து அவை நிகழ்வில் பங்கெடுக்க முடியும். இந்த புதிய கட்டடத்தில் மைய மண்டபமும் இருக்கும்.
சுமார் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் அளவில் அமையவிருக்கும் புதிய கட்டடத்தின் கட்டுமானச்செலவு, ரூ. 971 கோடி ரூபாய் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சட்டத்தடையுடன் நடந்த அடிக்கல் நாட்டு விழா

இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் மற்றும் அதையொட்டிய பிற கட்டுமானங்களை கட்டுவதற்கான 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்துக்கு அடிக்கல்லை நாட்டலாம், ஆனால் கட்டுமானத்தை மறுஉத்தரவு வரும்வரை தொடங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வு கடந்த டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் உத்தரவிட்டிருந்தது.
இந்திய நாடாளுமன்ற புதிய கட்டட கட்டுமானத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் முக்கியமானது, வழக்கறிஞர் ராஜீவ் சூரி தாக்கல் செய்த மனு. அதில் அவர் கட்டுமானத்துக்கான நிலம் பயன்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் விதிமீறல் இருப்பதாக முறையிட்டிருந்தார்.
குறிப்பிட்ட அந்த பகுதி, புதிய கட்டுமானம் எழுப்புவதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என வேறு சில மனுதாரர்கள் தங்களுடைய மனுவில் சுட்டிக்காட்டி இருந்தனர். அதில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்காக தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்ட நடைமுறைகள், சுற்றுச்சூழல் அனுமதி போன்றவை முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறப்பட்டுளளது.
மற்றொரு மனுதாரரும் வழக்கறிஞருமான ஷியாம் திவான், "மக்கள் வரிப்பணத்தில் மிகப்பெரிய சொத்துகளை அழித்து விட்டு புதிய கட்டுமானம் எழுப்ப எத்தகைய ஆக்கப்பூர்வ ஆய்வுகள் நடத்தி முடிவு எடுக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் மத்திய அரசிடம் இல்லை," என்று கூறியிருந்தார்.
இந்திய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானம் தொடர்பாக முடிவெடுக்கப்பட வேண்டிய ஒவ்வொரு கட்டடத்திலும் முறையாக ஆலோசனைகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும், அந்த கட்டுமானத்தை எழுப்ப ஒப்பந்தப்பள்ளிகள் வரவேற்றபோது அதில் பங்கெடுக்க நியாயமாக போட்டி நடத்தப்பட்டிருக்க வேண்டும், நிபுணத்துவம் வாய்ந்த குழுவால் அந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும் எனறு வழக்கறிஞர் ஷியாம் திவான் தனது மனுவில் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னிலை வகிக்கும் இஸ்ரேல் - என்ன செய்கிறது இந்தியா?
- திருப்பூரில் தெருவில் விட்டுச் செல்லப்பட்ட சிறுமி உயிரிழப்பு - என்ன நடந்தது?
- விவசாயிகள் போராட்டம்: தீர்வின்றி தொடரும் பேச்சுவார்த்தை - அடுத்தது என்ன?
- பன்முகத்தன்மையில் ஒற்றுமை, வாழ்க தமிழ் - தமிழில் ட்வீட் செய்த டெல்லி முதல்வர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












