திருப்பூரில் தெருவில் விட்டுச் செல்லப்பட்ட சிறுமி உயிரிழப்பு - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் பகுதியில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி திங்கட்கிழமை மாலை உயிரிழந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி, தண்டுக்காரன்பாளையம் பகுதியில் மயக்க நிலையில் இருந்த சிறுமியை ஒரு பெண், குப்பை தரம்பிரிக்கும் வளாகம் அருகே உள்ள சாலையில் கிடத்திச் சென்றுள்ளார். மயக்க நிலையில் இருந்த சிறுமியை அப்பகுதி மக்கள் அவிநாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சேயூர் காவல்நிலைய போலீசார் சிறுமியை இறக்கிவிட்டுச் சென்ற நபரை தேடி வந்தனர்.
அன்று இரவு, அதே பகுதியில் பேருந்துக்காக தனியாக ஒரு பெண் சாலையில் நின்று கொண்டிருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அவரை விசாரித்ததில், தனது மகளை மயக்கநிலையில் சாலையில் கிடத்திச் சென்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும், அந்த பெண் மருத்துவர் எனவும், விவாகரத்து பெற்று பெங்களூருவில் தனியாக வசித்து வந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு, தனது மகளோடு தற்கொலை செய்ய முயற்சித்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இருவரும், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தற்கொலை செய்ய முயற்சித்ததற்கான காரணம் குறித்து போலீசாரின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர் திருப்பூர் வருவதற்கு முன்பு பெங்களூருவில் உள்ள கடையில் பிஸ்கட், குடிநீர் மற்றும் எலி மருந்து வாங்கியதற்கான ரசீது கைப்பற்றப்பட்டுள்ளது. இதனால், இருவரும் எலி மருந்து சாப்பிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் உடல் மோசமடைந்ததால் கோவை அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சிறுமிக்கு திங்கட்கிழமை மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து வந்தது. இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் சிறுமி உயிரிழந்தார்.
சிறுமியின் உடல் செவ்வாய்க்கிழமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் கூராய்வு நடத்தப்படவுள்ளது. அதன் அறிக்கை வந்த பிறகே சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில், 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு தடை நீடித்ததால், பல திரையரங்குகள் செயல்படவில்லை.
தற்போது தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கொரோனா கால வழிமுறைகளை பின்பற்றி, திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
படங்களை திரையிடுவதற்கு முன்னதாக, எல்லா திரையரங்குகளிலும் கொரோனா விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்படவேண்டும் என்றும் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதித்து செயல்படலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டபோதும், திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பல கட்டமாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பேசி வந்தனர்.
முன்னதாக, எதிர்வரும் பொங்கல் திருநாளின் போது வெளியாகவுள்ள படங்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி தரவேண்டும் என நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

சட்டங்களை நிறைவேற்றும் முன்பு மக்கள் மன்றத்தில் விவாதிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனு

பட மூலாதாரம், Getty Images
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: சட்டங்களை மக்கள் மன்றத்தில் கொண்டு வருவதற்கு 60 நாட்களுக்கு முன் சட்ட வரையறையை வெளியிட வேண்டும்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில், ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கு, 60 நாட்களுக்கு முன்பே அச்சட்ட வரைவுகளை, அரசு வலைதளத்தில் வெளியிட, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வழிகாட்ட வேண்டுமென, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் இந்த பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார்.
கடந்த 2014 ஜனவரி 10 அன்று, சட்டமன்றம் & நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன் கலந்தாலோசனை செய்யும் கொள்கைக் குழுவின் (Pre-Legislative Consultation Policy) கேபினெட் செயலர் தலைமையில் நடந்த செயலர்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்குக் கட்டுப்பட, மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்ட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருக்கிறது.
ஒரு சட்டத்தை இயற்றும் போது, அது குறித்து மக்கள் பெரிய அளவில் விவாதித்து, மக்களின் கருத்துக்கள் கேட்கப்படுவதை உறுதி செய்ய, உச்சநீதிமன்றம் இந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
மக்கள் விவாதிப்பதையும், மக்களின் கருத்துக்கள் கேட்கப்படுவதையும் உறுதி செய்ய, மத்திய அரசு கொண்டு வரும் சட்ட வரைவுகள் மற்றும் இறுதிச் சட்ட வடிவங்களை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பிராந்திய மொழிகளிலும், இணையம் மற்றும் அரசு வலைதளங்களில் வெளியிடப்பட வேண்டும் என கூறியிருக்கிறார்.
சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வளர்ந்த இன்றைய காலகட்டத்திலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் திடீரென, எந்த விதமான மக்கள் மன்ற விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளுமின்றி சட்டங்களை நிறைவேற்றுவது அரசுக்கு சரியாக இருக்காது.
விவசாயிகளின் போராட்டம், வேளாண் மசோதாக்களில், சட்டம் தொடர்பான கடுமையான சொற்களுக்குள், அந்தச் சட்டம் சொல்ல வந்த செய்தி எப்படி காணாமல் போயிருக்கிறது மற்றும் போதுமான விவாதங்கள் மக்கள் மத்தியில் நடைபெறவில்லை என்பதைக் காட்டுகிறது என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கடந்த நவம்பர் 30-ம் தேதி முதல் விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் குவிந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் இந்த மூன்று விவசாயச் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கக் கூடியதாகவும், நடுத்தரகர்களுக்கு எதிரானதாகவும் இருப்பதாக, மனுதாரர் கருதுவதாக, தன் அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்த வேளாண் மசோதாக்களைப் நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்கு முன், அதன் சட்ட வரைவுகளை பெரிய அளவிலான விவாதங்களுக்கு வெளியிடவில்லை என்றும், மக்களின் கருத்து கேட்கப்படவில்லை என்றும், சில சுயநல அரசியல்வாதிகள் வெற்றிகரமாக விவசாயிகளை திசைதிருப்பியிருக்கிறார்கள்.
இந்த தவறான தகவல் தான் தற்போது நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு காரணமாக அமைந்திருக்கிறது. அரசியல் கழுகுகள் இந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, விவசாயிகளை முன்னிறுத்தி, தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
தற்போது சட்டமியற்ற இருக்கும் வழிமுறைகள் ஜனநாயகமற்றதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அரசியலமைப்புக்கு விரோதமானதாகவும் இருக்கிறது என தன் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் பாஜக தலைவர் மற்றும் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












