தமிழ் மொழி வளர்ச்சிக்காக கலைக்கழகம் அமைத்த டெல்லி அரசு

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தமிழ் மொழி வளர்ச்சிக்காக கலைக்கழகம் அமைத்த டெல்லி அரசு
தமிழ் மொழி, கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ் அகாதெமியை டெல்லி அரசு அமைத்து ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் தலைவராக டெல்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, துணைத் தலைவராக தில்லி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலா் என். ராஜா ஆகியோரை நியமித்து டெல்லி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவின் தலைமையின் கீழ் இயங்கும் டெல்லி கலை, கலாசாரம், மொழித் துறையில் தமிழ் மொழி, அதன் கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ் அகாதெமி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு டெல்லி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும், தில்லி தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய உறுப்பினருமான என்.ராஜாவை அகாதெமியின் துணைத் தலைவராக டெல்லி அரசு நியமித்துள்ளது. டெல்லி என்பது கலாசார ரீதியாக வளமான நகரமாகும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்துள்ள மக்கள் இங்கு வசித்து, பணியாற்றி வருகின்றனா். இந்தப் பன்முகத்தன்மையே டெல்லியைத் துடிப்பான பரந்த நோக்கமுள்ள கலாசார நகரமாக உருவாக்குகிறது. டெல்லியில் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள மக்கள் ஏராளமானோா் வசிக்கின்றனா். தமிழகத்தின் கலை, கலாசாரத்தை டெல்லியில் வாழும் அனைவரும் அறிந்து கொள்வதற்காக தமிழ் அகாதெமியை உருவாக்கி உள்ளோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் உலக அளவில் பிரதமர் மோதி முதலிடம்

பட மூலாதாரம், DD
செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் உலக அளவில் பிரதமர் நரேந்திர மோதி முதலிடத்தில் உள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "கொரோனா நோய்த்தொற்று உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை பிரதமர் மோதி தலைமையிலான அரசு மிகச்சிறப்பாக கையாண்டு மக்களின் வலுவான நம்பிக்கையை பெற்றுள்ளது. அமெரிக்காவின் மார்னிங்க் கன்சல்ட் ஆய்வு நிறுவனத்தின் மதிப்பீடு பிரதமரின் திறமையான தலைமை மற்றும் கடின உழைப்புக்கு ஒரு சான்றாகும், இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பெருமை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக அமெரிக்காவின் மார்னிங்க் கன்சல்ட் என்ற சர்வே நிறுவனம் அமெரிக்கா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் செல்வாக்கு குறித்து நடத்திய ஆய்வில், உலகின் செல்வாக்கு மிகுந்த மற்றும் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோதிக்கு 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களது ஒப்புதலை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் 20 சதவீதம் பேர் அதனை ஏற்கவில்லை" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டனில் பரவும் கொரோனா வைரஸின் மரபணுவை பிரித்தெடுத்த இந்தியா

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸின் மரபணுவை இந்தியா பிரித்தெடுத்துள்ளதாக இந்து தமிழ்த்திசை செய்தி வெளியிட்டுள்ளது.
"பிரிட்டனில் கொரோனா வைரஸின் மரபணு மாறி, புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கடந்த அக்டோபரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் 70 சதவீதம் அதிவேகமாக பரவி வருகிறது.
பிரிட்டனில் இருந்து ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர், லெபனான், நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் புதிய வகை வைரஸ் பரவியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 29 பேர் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கொரோனா வைரஸின் மரபணு குறித்த ஆராய்ச்சி, உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உலகில் முதல் முறையாக புதிய வகை கொரோனா வைரஸின் மரபணுவை தனியாகப் பிரித்தெடுத்துள்ளது.
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்த கொரோனா நோயாளிகளின் மாதிரிகளில் இருந்து புதிய வகை வைரஸின் மரபணு பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












