மு.க. அழகிரி மதுரை ஆலோசனை கூட்டம்: ஸ்டாலின் மீது தாக்கு, கருணாநிதிக்கு தெரியாமல் திமுக-வில் இருந்து நீக்கியதாக புகார்

மதுரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமது ஆதரவாளர்களுடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற மு.க.அழகிரி, இந்தக் கூட்டம் துரோகிகள், சதிகாரர்கள் வீழ்ச்சிக்கான முதல் படி என்று கூறினார்.
அத்துடன், கட்சித் தலைவராக இருந்த கருணாநிதிக்கும், பொதுச் செயலாளர் அன்பழகனுக்கும் தெரியாமல் சில துரோகிகள் தம்மை கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டினார்.
2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அவரை கட்சியை விட்டு நீக்குவதாக அந்தக் கட்சியில் அப்போது பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகன் அறிக்கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வரும், திமுகவின் அப்போதைய தலைவருமான மு.கருணாநிதியின் மகனான மு.க.அழகிரி அந்தக் கட்சியில் தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பதவியில் இருந்தார்.
சமீபத்தில் அவரது ஆதரவாளர்கள் சிலர் பாஜகவில் இணைந்தனர். திமுக-வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, முன்னணி அரசியல் நடவடிக்கைகள் எதிலும் இல்லாமல் இருந்த அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக என்ன மாதிரியான அரசியல் நகர்வை செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தமது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை மதுரையில் அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் கூட்டத்தில் பேசிய அவர், "1980ஆம் ஆண்டு கருணாநிதி கூறியதால் மதுரை வந்தேன். திமுகவில் நானும் தொண்டன் போல பணியாற்றினேன் பதவிக்கு ஆசைப்பட்டதே இல்லை. மதுரையை திமுகவின் கோட்டையாக்க உழைத்தேன்.

1993ஆம் ஆண்டு திமுகவை விட்டு வைகோ வெளியில் சென்றபோது திமுகவில் இருந்து ஒரு தொண்டன் கூட வெளியில் செல்லாமல் இருந்தார்கள். விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் போது என் மீது தவறான புகார்களை கூறியதால் கடந்த 2000ஆம் ஆண்டு தலைமை என்னை நீக்கியது.
திருமங்கலம் ஃபார்முலா
2001ல் மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் துணை மேயராக திமுக-வை சேர்ந்த சின்னச்சாமியை வெற்றி பெறவைத்தேன்.
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் கட்சியை வெற்றி பெறவைத்தேன். திருமங்கலம் இடைத்தேர்தல் தொகுதி பார்முலா என்றால் இந்தியாவிற்கு தெரியும் அப்படி ஒரு வெற்றியை பெற்றுகொடுத்தேன்.
திமுக பார்முலா என்பது பணம் என்றார்கள். ஆனால் பணம் வழங்கவில்லை. கடுமையாக எனது ஆதரவாளர்கள் கலைஞர் போல உழைத்ததுதான் திருமங்கலம் பார்முலா" என்று அவர் பேசினார்.
அத்துடன் தமக்கு தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதால் தமது தம்பி மு.க.ஸ்டாலின் பொறாமை அடைந்து கட்சியின் பொருளாளர் பதவியைக் கேட்டுப் பெற்றதாக அழகிரி குற்றம்சாட்டினார். கட்சி மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கவேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அவரது வீட்டில் இருந்து மண்டபம் வரும் வழி நெடுக அவரது ஆதரவாளர்கள் இருந்தனர்.
அடுத்து என்ன?
தாம் 7 ஆண்டுகள் பொறுமையாக இருந்துவிட்டதாக கூறிய அழகிரி, விரைவில் தமது முடிவை அறிவிக்கப்போவதாக கூறினார்.
திமுக தலைவரும், தமது தம்பியுமான மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது என்று கூறிய அவர், தாம் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம் என்று கூறியதுடன், எதையும் சந்திக்கத் தயாராக இருக்கும்படி தமது ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், கூட்டத்தில் ஆதரவாளர்களிடம் எந்த ஆலோசனையும் கேட்கப்படவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












