குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து கேள்வி

பரியேறும் பெருமாள்

பட மூலாதாரம், Twitter

தமிழகத்தில் நேற்று (ஜனவரி 3) நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 முதல்நிலை தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 66 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

அதில், கடந்த 2018ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் குறித்த கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது.

அந்தக் கேள்வியானது, "தலைசிறந்த படைப்பான 'பரியேறும் பெருமாள்' என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்" என அமைந்திருந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அந்த திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், "பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது; இது மானுட சமூகத்தின் பிரதி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா.ரஞ்சித் தயாரிப்பில் 2018ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பரியேறும் பெருமாள் திரைப்படம் பல விருதுகளை வாங்கியுள்ளது.

இது மட்டுமின்றி, வினாத்தாளில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், திராவிடம், கீழடி, வேள்பாரி, தமிழர் நாகரிகம் தொடர்பான கேள்விகளும் இடம்பெற்று இருந்தன.

இந்த சூழ்நிலையில், நீண்டகாலத்திற்கு பிறகு தமிழர்களின் வரலாறு, தலைவர்கள் குறித்து அதிகளவிலான கேள்விகள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு ஒன்றில் இடம்பெற்றிருப்பதாக கூறி பலரும் சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பரியேறும் பெருமாள் B.A.B.L. - சினிமா விமர்சனம்

பரியேறும் பெருமாள்

பட மூலாதாரம், Twitter

மிழ் நாட்டின் எத்தனையோ இடங்களில் கண்டும் கேட்டு இருக்கக்கூடிய கதைதான். ஆனால், அதைச் சொல்லியிருக்கக்கூடிய விதத்தில், தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக எழுந்து நிற்கிறது பரியேறும் பெருமாள்.

சட்டக் கல்லூரியில் புதுமுக மாணவனாகச் சேர்கிறான் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பரியேறும் பெருமாள் (கதிர்).

ஆங்கிலம் தெரியாத அவனுக்கு சக மாணவியான ஜோதி மகாலட்சுமி (ஆனந்தி) உதவுகிறாள்.

ஜோதி இடைநிலைச் சாதி என்பதால், இந்த நட்பு பரியனுக்கு பெரும் பிரச்சனைகளையும் அவமானங்களையும் ஆபத்துகளையும் கொண்டுவருகிறது.

விமர்சனத்தை தொடர்ந்து படிக்க: பரியேறும் பெருமாள் B.A.B.L. - சினிமா விமர்சனம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :