"உயிர்த்தெழுவார்" என்று நம்பி சடலத்தை 22 நாட்கள் வைத்திருந்தவர்கள் கைது

திண்டுக்கல்லில் பெண் காவலர் இறந்து 22 நாட்களாக உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் வீட்டிலேயே வைத்திருந்த உடன் பிறந்த அக்கா மற்றும் பாதிரியார் ஒருவர் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஸ்சரி, காலனியில் வசித்து வருபவர் அன்னை இந்திரா. இவர் திண்டுக்கல் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பெண் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் பால்ராஜ். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பல ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அன்னை இந்திராவிற்கு பல ஆண்டுகளாக உடல்நல பாதிப்பு இருந்து வருகிறது. இதனால் இவர் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவருடன் இவரது அக்கா வாசுகி (வயது 47) மற்றும் குடும்ப நண்பரும் பாதிரியாருமான சுதர்சனம் (வயது 45) ஆகியோர் உடன் வசித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் அன்னை இந்திரா மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். கடந்த டிசம்பர் 25ஆம் தேதி முதல் மீண்டும் பணிக்கு வர வேண்டிய இவர், டிசம்பர் 31ஆம் தேதி ஆகியும் பணிக்கு செல்லவில்லை. இதனையடுத்து நேற்று முன்தினம் இரண்டு பெண் காவலர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது வீட்டின் உள் அறையின் கதவு பூட்டப்பட்டு இருந்தது.
மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பெண் காவலர்கள் உடனடியாக அருகிலுள்ள தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்த போது, இந்திராவின் உடல் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதை திறந்து பார்த்தபோது, உடல் அழுகி துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து, அன்னை இந்திராவின் அக்கா வாசுகி மற்றும் அவரது குடும்ப நண்பர் சுதர்சன் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை செய்த போது, அன்னை இந்திரா கடந்த டிசம்பர் 7ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாகவும் அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்று நம்பி தாங்கள் தினமும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைக்காக வாசுகி மற்றும் சுதர்சன் ஆகியோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அன்னை இந்திராவின் உடல் அழுகி விட்டதால் அவரது வீட்டில் வைத்தே பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.
இந்நிலையில் இரண்டு பேரையும் நேற்று முன்தினம் (ஜனவரி 1) காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், 176வது பிரிவு பொது ஊழியருக்கு தெரிவிக்க வேண்டிய கருத்தை தெரிவிக்காமல் மறைத்தது, பிரிவு 304( A ) (கொலை ஆகாத மரணம்) சிகிச்சை அளித்தால் உயிர் பிழைத்து விடுவார் என்று தெரிந்தும் சிகிச்சை அளிக்காமல் வைத்திருந்தது, பிரிவு 406 நம்பிக்கை துரோகம் செய்தல், பிரிவு 420 ஏமாற்றி பொருளைப் பறிப்பது ஆகிய நான்கு பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.
பிற செய்திகள்:
- மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் தகராறு செய்த பெண்: திமுக - அதிமுக போட்டி போராட்டங்கள்
- ஆன்லைன் லோன் ஆப் மோசடி: 2 சீனர்கள் உள்பட 4 பேர் சென்னையில் கைது
- இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மருத்துவமனையில் சேர்ப்பு
- கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த பரிந்துரை
- "பாஜக அதிமுகவிற்கு நண்பேன்டா" - மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












