பாஜக போட்ட ரஜினிகாந்த் கணக்கும் தற்போது அதன் முன் உள்ள சவாலும்

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பத்ரி சேஷாத்ரி
    • பதவி, அரசியல் விமர்சகர்

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.)

ரஜினி, யானை போன்றவர். அவர் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொன்னாலும் சரி, கட்சி ஆரம்பிக்கமாட்டேன் என்று சொன்னாலும் சரி, ஊடகங்களும் பிற அரசியல் கட்சியினரும் அவரைப் பற்றி விவாதிப்பதில் குறைவே இல்லை.

ரஜினி உண்மையிலேயே ஒரு கட்சியை ஆரம்பித்து மாநிலம் முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்திருந்தாலுமே தமிழக அரசியலில் அவர் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்திருக்கமாட்டார் என்பது என் கருத்து.

இந்திய அரசியலில் தாங்கி நிற்பதற்குத் தேவையான எதுவுமே ரஜினியிடம் இல்லை. கமலிடமும் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் ஊடகங்களால் கொண்டாடப்பட்ட ரஜினியிடம் ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மை.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் ஆகியோருடனான ஒப்புமைகள் இங்கே உதவா. எம்.ஜி.ஆர் ஏற்கெனவே வளர்ந்துகொண்டிருந்த, வலுவான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்த ஒரு கட்சியில் சேர்ந்து, அதன் வெற்றிக்குப் பாடுபட்டு, அதன் சட்டமன்ற உறுப்பினராகி, அதன் பின்னரே பிரிந்து தனிக்கட்சியை உருவாக்கினார். திமுகவின் கணிசமான அடித்தளம் எம்.ஜி.ஆருடைய கட்சிக்கு நகர்ந்தது.

என்.டி.ஆர் தெலுங்கு தேசத்தை ஆரம்பித்தபோது எதிர்க்கட்சிக்கான ஒரு பெரும் வெற்றிடம் ஆந்திரத்தில் இருந்தது. ராஜிவ் காந்தியால் தெலுங்கு கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி அதனை மாற்றப்போவதாகக் களத்தில் இறங்கிய என்.டி.ஆருக்குப் பெரும் மக்கள் ஆதரவு கிடைத்தது.

இவ்விரண்டு நிலைகளும் தமிழகத்தில் இல்லை. ரஜினியின் வயது முதிர்வு, உடல்நிலை இரண்டும் அவருக்கு ஆதரவாக அமையவில்லை. மேலும் அவர் தன் முடிவைத் தெளிவாகத் தன் ரசிகர்கள் முன்பு கூட வைக்கவில்லை.

கொள்கையில் குழப்பம் என்பது தமிழக அரசியலில் சகஜம். ஆனால் செயல்திட்டத்திலேயே குழப்பம் என்றால்? திரைப்படம் ஒன்றில் பால் கறந்துகொண்டே பணக்காரன் ஆவதுபோல, ஆடிப் பாடிக்கொண்டே கோட்டையைப் பிடித்துவிடலாம் என்ற கனவை யாரோ ரஜினியிடம் விற்றிருக்கவேண்டும். அந்தக் கனவை அவர் துரதிருஷ்டவசமாகத் தானும் நம்பி, தன் ரசிகர்களிடமும் விற்றார். இப்போது அனைவரும் ஏமாந்துபோயுள்ளனர்.

இதில் பாஜக எங்கிருந்துவருகிறது?

ஒரு கட்சி, தன் கொள்கையை நம்பி, தன் சொந்த பலத்தை நம்பி, தன் தலைவர்களை நம்பி, தன் கள வீரர்களை நம்பித்தான் அரசியல் செய்யவேண்டும். பாராசூட்டிலிருந்து சிலபல பிரபலங்களை அழைத்துவந்து இறக்கி, அவர்கள் முகத்தைக் காண்பித்து வெற்றிபெறுவது என்பது எளிதல்ல.

அம்மாதிரி இந்தியாவில் எங்கும் நடந்ததாகத் தெரியவில்லை. சினிமாக்காரர்களை அழைத்து வந்தால் கூட்டம் வரும் என்பது பெரும்பாலும் உண்மைதான். ஆனால் ரஜினி வந்தால் கூட்டம் மட்டுமல்ல, வோட்டும் வரும் என்று பாஜக நம்பியதாகத் தெரிகிறது. அதனால் பல முறை அவரை அழைத்தார்கள். தொடர்ந்து அழைத்தார்கள்.

பாஜகவில் சேர்ந்தால் அந்தக் கட்சியின் காவி வண்ணம் தன்மீது பட்டுவிடும் என்று அவர் கடைசிவரை தயங்கினார். அதே நேரம், அவர் பேசிய சில வார்த்தைகளைக் கொண்டு அவரை 'பாஜகவின் பி டீம்' என்றே பலர் பேசினார்கள்.

சரி, தன் கட்சியில் சேராவிட்டாலும் பரவாயில்லை, அவர் ஒரு கட்சியைத் தொடங்கினால், அந்தக் கட்சியுடன் தான் கூட்டணி அமைக்கலாம் என்று பாஜக விரும்பியதாகத் தெரிகிறது. இப்போது அதுவும் கிடையாது. எனவே வெளியில் இருந்தபடி பாஜகவுக்கு ஆதரவு தரவேண்டும் என்று அவரைக் கேட்கப்போகிறார்கள். அதையேதான் கமலும் ரஜினியிடம் கேட்கப்போகிறார். அதிமுகவும் கேட்கலாம்.

எல். முருகன்
படக்குறிப்பு, எல். முருகன்

பாஜகவுக்கு இது ஒரு பாடம். தமிழகத்தில் பாஜக சிறிய கட்சியாகத்தான் இருக்கிறது. அதில் ஒன்றும் தவறில்லை. நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி என்று பலரும் பாஜகவைக் கேலி செய்கிறார்கள். இது உண்மையில்லை. பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இன்றைக்கு, தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உள்ளது என்று நான் கணிக்கிறேன். ஆனால் அது தனித்து நின்று ஓரிரு தொகுதிகளை வெல்லக்கூடிய அளவிலாக தற்போது இல்லை.

இன்றைக்கு பாஜகவின் தேவை, தன் கட்சியை மேலும் மேலும் வலுப்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான அடிப்படை உறுப்பினர்களைச் சேர்ப்பதே. ரஜினி போன்றவர்கள் அதற்கு உதவப்போவதில்லை. ரஜினி வரப்போகும் தேர்தலில் யாருக்காகவும் குரல் கொடுக்கமாட்டார் என்று நான் நினைக்கிறேன்.

1996-ல் வலுத்து ஒலிக்க ரஜினிக்கு இருந்த காரணங்கள் எவையுமே இன்று இல்லை. இதை பாஜக புரிந்துகொள்ளவில்லை என்பது அவர்கள் தமிழக அரசியலைச் சரியாக இன்னமும் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

பாஜக, கொள்கையளவில், திமுகவுக்கு எதிரானதாகத் தன்னைக் காண்பித்துக்கொள்கிறது. அதேபோலத்தான் திமுகவும், பாஜகவுக்கு எதிரான அரசியலைச் செய்கிறது. இப்படிப்பட்ட நிலையில் பாஜகவின் ஒரே நோக்கம் அதிமுகவுடன் சேர்ந்து, அந்தக் கூட்டணியை வலுப்படுத்தி, திமுகவைத் தோற்கடிப்பதுதான்.

ஆனால், பாஜக அதனை மனத்தில் கொண்டு நடப்பதாகத் தெரியவில்லை. யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் தொடங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக ஏதோ ஒருவிதத்தில் நெருக்கடி கொடுப்பதுபோல நடந்துகொள்கிறது. இந்த நேரத்தில் அப்படிப்பட்ட நெருக்கடி அதிமுகவையும், அதனால் பாஜகவையும் பாதிப்பதாகத்தான் இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :