டெல்லி விவசாயிகள் போராட்டம் : மத்திய அரசு யோசனையை நிராகரித்து கடிதம் எழுதிய விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் போராடிவரும் விவசாயிகள், அந்த மூன்று சட்டங்களை ரத்து செய்வதற்குப் பதிலாக திருத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்த யோசனையை நிராகரித்து கடிதம் எழுதியுள்ளன.
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணைச் செயலாளர் விவேக் அகர்வாலுக்கு புதன்கிழமை எழுதிய கடிதத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, சட்டங்களைத் திருத்துவது என்ற யோசனை போதுமானதல்ல என்ற தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 9ம் தேதியே இந்த யோசனையை தாங்கள் நிராகரித்துவிட்டதாக இந்த முன்னணி தெரிவித்துள்ளது.
ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் தீர்வு எட்டமுடியாததால், மூன்று விவசாய சட்டங்களை திருத்துவதற்கான திட்டத்தை விவசாயிகள் அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளதாக மத்திய அரசு கூறியிருந்தது, ஆனால் அந்த முன்மொழிவுக்கு இதுவரை விவசாயிகள் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. இப்போது எழுதியுள்ளார்கள்.
முன்னணி உறுப்பினர் தர்ஷன் பால் மத்திய அரசுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், அனைத்து விவசாய அமைப்புகளும் அரசாங்கம் அனுப்பிய திட்டம் குறித்து விவாதித்து ஒரே நாளில் ஒருமனதாக நிராகரித்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில், விவசாயிகள் இயக்கத்தை சிதைக்க வேண்டாம் என்றும் மற்ற விவசாய அமைப்புகளுடன் பேசவேண்டாம் என்றும் விவசாயிகள் அமைப்புகள் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
செவ்வாயன்று, பாரதிய கிசான் சங்கத்தின் உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து விவசாய சட்டங்கள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
இதன் பின்னர் உ.பி.யில் மாவட்ட அளவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர அந்த அமைப்பு முடிவு செய்தது.
உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையே, டெல்லி எல்லைகளில் நெடுஞ்சாலைகளை மறித்துப் போராடிவரும் விவசாயிகளை அங்கிருந்து அகற்ற உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே விசாரித்தார்.
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஷாஹின்பாக்கில் நடந்த போராட்டத்தை மேற்கோள்காட்டி, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதாடினார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதாவிடம், இந்தியாவில் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் இந்த விவகாரத்தில் மற்ற முக்கிய பங்குதாரர்கள் அடங்கிய ஒரு கமிட்டியை உருவாக்கி, இந்த விவகாரத்திற்கு முறையாகத் தீர்வு காண உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.
அரசு விவசாயிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாரதீய கிசான் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் அங்கே பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இருப்பினும், போராட்டத்துக்குத் தொடர்பில்லாத சிலரும் அதில் இணைந்துள்ளனர் என்று, அடையாளம் குறிப்பிடாமல் வாதிட்டார் சோலிசிட்டர் ஜெனரல்.
விவசாயிகளுக்கு எதிராக அரசு எதையும் செய்யாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசு இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றுள்ள போதிலும், அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றால், அது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கில் விவசாயிகள் சார்பில் சேர்க்க, விவசாயிகளின் பெயர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளின் பெயர்களை அளிக்குமாறு சொலிசிட்டர் ஜெனரலிடம் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நாளை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
பிற செய்திகள்
- வாடகை பாக்கி: லதா ரஜினிகாந்த் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு
- 180 கோடி நட்சத்திரங்களை எண்ணி முடித்த விண்வெளி தொலை நோக்கி: வியப்பூட்டும் தகவல்கள்
- மதுரை கிராமத்தின் ஓயாத போராட்டம்: எரிவாயு குழாய் திட்டத்துக்கு எதிர்ப்பு
- கொரோனா வைரஸ்: பிளாஸ்மா தெரபியுடன் சில இந்திய மருத்துவர்கள் முரண்படுவது ஏன்?
- கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: அடக்கம் செய்ய வேறு நாட்டிடம் உதவி கோரும் இலங்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












