கருப்புப்பூஞ்சை: தமிழ்நாட்டில் எதிர்ப்பு மருந்துக்கு தட்டுப்பாடு, என்ன செய்கிறது அரசு?

கொரோனா கருப்புப்பூஞ்சை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா பரவலுக்கு இணையாக கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் அதிகரிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பதற்கு அரசு மருத்துவமனைகளில் மருந்தே இல்லை' என கூறப்படுகிறது. என்ன நடக்கிறது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தில்?

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் கொரோனா தொற்றின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டாலும், அரசு மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் தவிக்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 2,08,921 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 24.95 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சில ஆயிரம் பேருக்கு `மியுகோர்மைகோசிஸ்' எனப்படும் கருப்பு பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் அதிகம்

இந்த வகையான பூஞ்சை, நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடுள்ள நபர்களை அதிகம் தாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீரிழிவு மற்றும் புற்றுநோய், ஹெச்ஐவி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கருப்பு பூஞ்சை அதிக ஆபத்தை விளைவிக்கிறது. கொரோனா தொற்றுக்கு அளிக்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகளாலும் பாதிப்பு வருவதாகச் சொல்லப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரையில் 1,500 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதனால் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா கருப்புப்பூஞ்சை

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பாக, கடந்த 25 ஆம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டில் பேசிய இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், `நாட்டில் அதிகபட்சமாக குஜராத்தில் 2,165 பேரும் மகாராஷ்டிராவில் 1,118 பேரும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அளிக்கப்படும் சிகிச்சைக்காக 9 லட்சம் ஆம்போடெரிசின்-பி குப்பிகளை இறக்குமதி செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது 50,000 குப்பிகள் வந்து விட்டன. அடுத்த 3 நாள்களில் 3 லட்சம் குப்பிகள் கிடைக்கும் . `கொரோனா நோயாளிகளுக்கு முடிந்த வரையில் ஸ்டிராய்டு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மருத்துவர் ராமதாஸின் வேண்டுகோள்

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆம்போடெரிசின் பி ஊசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ` கொரோனா தொற்றுப் பரவலுக்கு இணையாக கருப்புப் பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருப்பு பூஞ்சையால் கணிசமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை குணப்படுத்துவதற்கான மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் சில மருத்துவமனைகளைத் தவிர பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகள், மாவட்ட மருத்துவமனைகளில் ஆம்போடெரிசின் -பி ஊசி மருந்து இருப்பு இல்லை' என்கிறார் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

இது தொடர்பான அவரது அறிக்கையில், "தற்போது கள நிலவரம் மோசமாக இருப்பதை உணர்ந்து கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை காப்பாற்ற தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

ஆராய்வதற்கு தனிக்குழு

கொரோனா கருப்புப்பூஞ்சை

பட மூலாதாரம், Getty Images

இந்நோயானது, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு என 22 மாநிலங்களில் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கானோர் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இதன் பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில், ` நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆராய்வதற்கு பத்துக்கு மேற்பட்டவர்களைக் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டிராய்டு கொடுப்பதாலும் அசுத்தமான தண்ணீரில் இருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து அதை மூச்சாக இழுப்பதன் மூலமாகவும் பரவுவதாகச் சொல்கின்றனர். இதுகுறித்த ஆராய்ச்சியை வல்லுநர் குழு தொடங்கும்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ``கடந்த சில வாரங்களாக மருந்துக் கடைகளில் மிக எளிதாகக் கிடைத்து வந்த ஆம்போடெரிசின் மருந்துகள், தற்போது கிடைப்பதில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை பெருகுவதால் மருந்துக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. வரும் வாரங்களில் இதன் தேவை அதிகரிக்கலாம்" என்கின்றனர்

மருந்து வணிகர்கள். இதுதொடர்பாக, மக்கள் நல்வாழ்வுக்கான மாநில அரங்கம் அமைப்பின் மாநில செயலாளர் மருத்துவர் காசியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தமிழ்நாட்டில் ஆம்போடெரிசின்-பி மருந்துகள் காலியாகிவிட்டன. தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், இதற்கான உற்பத்தியைப் பெருக்கும் வேலைகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும். ரெம்டெசிவர் மருந்தை அரசே தனியாருக்கு கொடுப்பது போல ஆம்போடெரிசின் மருந்தையும் அரசே விநியோகிக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் நாள்களில் கள்ளச்சந்தையில் இதன் புழக்கம் அதிகரித்துவிடும்," என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சையின் பாதிப்பு வரக் கூடிய நாள்களில் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம். இதற்கான மருந்தை உடனடியாக தயாரிக்க முடியாது. இதனைத் தயாரிக்கும் நிறுவனங்களை அடையாளம் கண்டு தற்போது உற்பத்தி செய்வதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. தற்போது நிலவும் தட்டுப்பாட்டை சரிசெய்வதற்கும் வாய்ப்பில்லை. எவ்வளவு விரைவாக உற்பத்தியை அதிகரிக்க முடியுமோ அதற்கான வேலைகளில் மத்திய அரசு இறங்க வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.

டெண்டரில் இருந்து விலகியது ஏன்?

கொரோனா கருப்புப்பூஞ்சை

பட மூலாதாரம், Getty Images

`தமிழ்நாட்டில் தட்டுப்பாடு நிலவுவது ஏன்?' என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``முன்பெல்லாம் 100 அல்லது 200 டோஸ் ஆம்போடெரிசின்-பி மருந்துகளை வாங்கி வந்தோம். இப்போது ஆயிரக்கணக்கில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில மருத்துவமனைகளைத் தவிர வேறு எங்குமே இந்த மருந்து இல்லை," என்கிறார் அவர்.

``தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தில் ஆம்போடெரிசின் மருந்தை தலா 1,040 ரூபாய் என்ற அளவில் வாங்குவதற்கு ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் அப்ரூவல் செய்யப்பட்டது. கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதும், `என்னால் சப்ளை செய்ய முடியாது' எனக் கூறி அந்த நிறுவனம் ஒதுங்கிக் கொண்டது. காரணம், இந்த மருந்தைத் தயாரிப்பதற்கான மூலப் பொருளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். தனியாருக்குக் கொடுப்பதற்கே அவர்களிடம் போதுமான மருந்து இல்லாததால், தமிழக அரசுக்கு சப்ளை செய்வதையும் நிறுத்தி விட்டனர். சொல்லப்போனால், இவ்வளவு தேவை ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

தமிழகத்துக்கு வரும் 10 ஆம் தேதி 15,000 டோஸ் ஆம்போடெரிசின் மருந்துகள் வரவுள்ளன. ஒரு நோயாளிக்கு 60 குப்பிகள் வரையில் மருந்து தேவைப்படும். தொடர்ச்சியாக எட்டு வாரங்கள் வரையில் நரம்பில் செலுத்தப்பட வேண்டிய ஊசி இது. இதனால் நோயாளிக்குக் கூடுதல் செலவுகள் ஏற்படும். இதில், 15,000 டோஸ்கள் வந்தால் எவ்வளவு பேருக்குத்தான் பிரித்துக் கொடுக்க முடியும்?" என்கிறார்.

விரைவில் மருந்துகள் வருமா?

`ஆம்போடெரிசின்-பி மருந்துக்கான தட்டுப்பாடு எப்போது நீங்கும்?' என தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``ஆம்போடெரிசின் -பி மருந்தின் தேவை குறித்து மத்திய அரசுக்கு விரிவாக எழுதியுள்ளோம். எவ்வளவு நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது வரையில் நேரடியாக பதிவு செய்து அனுப்பி வருகிறோம். விரைவில் மத்திய அரசிடம் இருந்து மருந்துகள் வரும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

மேலும், ``இப்போதைக்கு அரசு மருத்துவமனைகளில் இருப்பில் உள்ள ஆம்போடெரிசின் மருந்தைப் பயன்படுத்தி வருகிறோம். எந்தெந்த மாவட்டங்களில் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து பதிவு செய்து வருகிறோம். நோயாளிகளின் எண்ணிக்கை குறித்தும் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். தமிழ்நாட்டுக்குத் தேவையான மருந்துகளை மத்திய அரசுதான் ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்கிறார் செல்வவிநாயகம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :