நியூஸிலாந்து Vs ஆப்கானிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவின் அரையிறுதிக் கனவு தகர்ந்தது

பட மூலாதாரம், Getty Images
இன்னொரு போட்டி எஞ்சியிருக்கும்போதே, டி20 உலகக் கோப்பை இந்தியாவுக்கு கிடைக்காது என்ற செய்தி வந்துவிட்டது.
ஆப்கானிஸ்தானுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்ற பெருங்கனவை இந்திய ரசிகர்கள் கண்டிருப்பார்கள். ஆனால் அது கொடுங்கனவாகவே முடிந்து போய்விட்டது.
விராட் கோலியின் டி20 அணித் தலைமை மிகப் பெரிய தோல்வியுடன் நிறைவடைந்திருக்கிறது.
நியூசிலாந்து அணியுடனான போட்டியின் தொடக்கத்திலேயே பலவீனமான அணி என்பதைக் காட்டிவிட்டது ஆப்கானிஸ்தான் அணி.
ஏற்கெனவே இந்திய அணியை வெற்றி கொண்ட நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியை வெல்வதற்கு பெரிய அளவில் சிரமப்படவில்லை. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 124 ரன்களை மட்டுமே எடுத்ததால், அது நியுசிலாந்துக்கு மிக எளிய இலக்காக அமைந்துவிட்டது.
அணித் தலைவர் கேன் வில்லியம்சனும், கான்வேயும் ஆட்டமிழக்காமல் முறையே 40 மற்றும் 36 ரன்களை எடுத்தனர்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணியுடன் சேர்ந்து நியூஸிலாந்து அணியும் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.
இந்தியாவுக்கு நமீபியாவுடன் மட்டும் ஒரேயொரு போட்டி எஞ்சியிருக்கிறது. ஆனால் இந்தப் போட்டி எந்த வகையிலும் அடுத்த சுற்று ஆட்டங்களைப் பாதிக்கப் போவதில்லை.

பட மூலாதாரம், Getty Images
உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று வலுவாகக் கணிக்கப்பட்டது. கோலியின் தலைமையிலான கடைசி டி20 உலகக் கோப்பை ஆட்டம் என்பதும் முக்கியத்துவத்தை அதிகரித்தது. இதில் இங்கிலாந்து அணி அந்த நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுடன் தோல்வி அடைந்த பிறகு, தனது போட்டிகளுக்குப் பதிலாக ஆப்கானிஸ்தானுக்கும் - நியூஸிலாந்துக்கும் இடையேயான போட்டியை நம்பும் நிலைமை இந்திய அணிக்கு ஏற்பட்டது. இப்போது அந்த நம்பிக்கையும் பொய்த்துப் போயிருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்த இரண்டாவது பிரிவு மிகவும் எளிதான பிரிவாகவே கருதப்பட்டது. ஏனெனில் ஆறு அணிகளில் ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய மூன்று அணிகளை வீழ்த்துவது மிகவும் எளிது. இன்னும் ஒரேயொரு போட்டியில் மட்டும் வென்றுவிட்டால் அரையிறுதிக்குச் சென்றுவிடலாம். ஆனால் இந்தியாவால் எளிதான அணிகளை மட்டுமே வீழ்த்த முடிந்தது என்பதுதான் இந்திய ரசிகர்களை அதிரவைத்த உண்மை.
ஜாம்பவான்கள் என்று கருதப்பட்ட, உலகின் நட்சத்திர ஆட்டக்காரர்களான இந்திய வீரர்கள் முக்கியமான இரு போட்டிகளிலும் மிக மோசமாக ஆடினார்கள். பந்துவீச்சும் பேட்டிங்கும் எதிர்பாராத அளவுக்கு பலவீனமாக இருந்தது. இந்திய அணி ஒரே அணியாக ஆடியதா இல்லை தனித்தனி வீரர்களாகப் பிரிந்து ஆடியதா என்றெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு மோசமாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
அதே நேரத்தில் பலவீனமான அணியாகக் கருதப்பட்ட பாகிஸ்தானும், வீழ்த்த வாய்ப்பிருந்த நியூஸிலாந்து அணியும் இந்திய அணியை விட சிறப்பாகவே ஆடின. அவை இரண்டுமே இப்போது அரையிறுதிக்குச் செல்கின்றன. இன்னொரு பிரிவில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றிருக்கின்றன.
ஆப்கானிஸ்தானுடன் நியூஸிலாந்து தோற்றால் என்ன செய்வீர்கள் என்று ஜடேஜாவிடம் கேட்டபோது, அவர் உடனடியாகச் சொன்னார். "மூட்டை முடிச்சுகளைக் கட்ட வேண்டியதுதான்" என்றார். அந்த மூட்டை முடிச்சுகளுடன் என்ன பாடத்தை இந்திய அணி எடுத்து வரப்போகிறது என்பதுதான் இப்போதைய கேள்வி.
பிற செய்திகள்:
- ஜெய் பீம் திரைப்படத்துக்குப் பின்னால் நடந்த உண்மைக் கதை என்ன? நிஜ நாயகர்கள் யார்?
- குடிசையிலிருந்து ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளைஞர்
- தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசுபாடு ஐந்து மடங்கு அதிகரிப்பு
- ஐந்து மாநிலங்களின் தேர்தல் காரணமாகதான் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டதா?
- “அரிசிக்கு தட்டுப்பாடு; மரவள்ளி கிழங்கை உண்ணுங்கள்” – இலங்கை அமைச்சரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












