இரைச்சல், சாக்கடைகள், குப்பை கிடங்குகளுக்கிடையில் குடிசையில் வாழும் இளைஞர் - படிப்பதோ ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில்

இந்த பெருந்தொற்று காலம் பல மாணவர்களுக்கு சவாலாக உள்ளது. ஆனால், துஷார் ஜோஷியின் சூழ்நிலை அனைவரையும் விட மோசமானது. இதைப் பற்றி சாரா டாம்ஸ் விரிவாக எழுதுகிறார்.
மிகவும் நன்றாக இருக்கும் காலத்தில்கூட, குப்பை கிடங்குகள், திறந்த நிலையில் உள்ள கால்வாய்கள், பரபரப்பான ரயில் தண்டவாளங்கள் சூழ்ந்து இருக்கும் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உள்ள மாயாபுரி குடிசைப்பகுதியில் வாழ்வது அவ்வளவு எளிதல்ல.
"இங்கு குப்பைகள், கொசுக்கள் உள்ளன. இது மிகவும் அழுக்காக இருக்கிறது", தனது தாய், தந்தை, தங்கையுடன் ஒரே ஒரு சிறிய அறை உள்ள வீட்டைப் பற்றி 22 வயதான துஷார் ஜோஷி இப்படி கூறுகிறார்.
"கால்வாய்க்கு அருகில் வசிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு. டெங்கு, மலேரியா போன்றவை பாதிக்க வாய்ப்பு உள்ளது."
துஷாரின் 15 வயது வரை, அவருடைய ஆசிரியர்கள் அவரை சராசரி மாணவர் என்றும், அவரின் தந்தை போல் தொழிலாளராக ஆவார் எனவும் எதிர்பார்த்தனர் என்று அவர் கூறுகிறார். டெல்லியைச் சேர்ந்த ஏழைகளுக்கு உதவும் அரசு சாரா அமைப்பான ஆஷா சோசைட்டி மூலம் உதவி கிடைத்த பிறகு, டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்து 2020ம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அறிவித்தது முதல் அவர் மேற்படிப்பை படிக்கும் கனவு களையப்பட்டது. கோவிட்-19 பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அவரது தந்தை வேலையை இழந்தார். அவரது குடும்பத்தால் சாப்பிடுவதற்கான செலவைகூட சமாளிக்க முடியவில்லை,
"அது மிகவும் கடினமான காலம். வாழ்வதே கடினமாக இருந்தது", என ஆங்கிலத்தில் கூறுகிறார் ஜோஷி. மூன்று ஆண்டுகள் முன்புதான் அவர் அதை கற்றுக்கொண்டார். "தொடக்கத்தில், பெரும் தொகை கட்டி, கல்லூரி செல்வது குறித்து நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை", என்கிறார்.
இந்த ஆண்டு, சிட்னி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படிப்பதற்காக உதவித்தொகை கிடைத்த போது அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது. ஆகஸ்ட் மாதம் முதல், ஜோஷி சட்டப்படிப்பு சிறப்பு பயிற்சி கொண்ட பன்னாட்டு உறவுகள் படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இந்த தொற்று காலத்தில், அவர் இணையம் வழி வகுப்புகளை கவனிக்கிறார். அவரது குடும்பம் உறங்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிறிய மங்கிய வெளிச்சத்தில் படிக்கிறார். ரயிலின் சத்தம், இந்த அமைதியான சூழலை உடைக்கிறது.
"இது அனைவருடைய வீடு. என்னுடையது மட்டுமல்ல. என் குடும்பத்தினர் தங்களின் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, படிப்பதற்கு ஒரு தனி இடம் இல்லாமல் நான் கவனிக்க கடினமாக உள்ளது", என்கிறார்.
அவரது குடும்பத்தில் பல்கலைக்கழகத்திற்கு சென்ற முதல் நபர் ஜோஷியே. அவரது தந்தை பள்ளிகல்வி பெறாதவர்; பழைய பொருட்கள் விற்கும் கடையில் பணிபுரிகிறார். ஒரு மாதத்திற்கு 90 டாலருக்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார். அவரது தாய் குடும்ப தலைவியாக உள்ளார்.
"இது நாங்கள் நினைத்தே பார்க்காதது. எங்களின் குடும்பத்திலோ, கிராமத்திலோ யாரும் இவ்வளவு படித்ததில்லை; அதுவும் சர்வதேச அளவில் படித்ததில்லை", என்கிறார் அவரது தந்தை சந்தோஷ் ஜோஷி.
சிட்னி இந்தியா இயூட்டி ஸ்கலார்ஷிப்பின் (Sydney India Equity Scholarship) மதிப்பு 44,000 டாலர். இது மிகவும் ஏழ்மையான பின்னணியிலிருந்து வரும் தனித்திறமை வாய்ந்த ஓர் இந்திய மாணவர் முதுகலை பட்டப்படிப்புக்கு வழங்கப்படுவதாகும். இது படிப்புக்கான கட்டணம், வாழ்வாாரத்துக்கான செலவுகள், புத்தகங்களுடன் சேர்த்து விமான பயணச் சீட்டு, சுகாதார காப்பீட்டு திட்டம், கல்லூரி குடியிருப்பு போன்ற செலவுகள் இதில் அடங்கும். ஆஸ்திரேலியாவுக்கு செல்ல ஜோஷி தயாராக இருக்கிறார்.
இதற்கிடையே, மடிக்கணினி மற்றும் அதிவேக இணைய வசதி அளித்து பல்கலைக்கழகம் அவரது இணையவழி கல்விக்கு உதவி செய்கிறது. பல்கலைக்கழகத்தின் உதவிக்கு தான் நன்றிக் கடன்பட்டிருப்பதாக கூறும் ஜோஷி, ஏதோ ஒன்று குறைவதாக உள்ளது என கூறுகிறார். கல்லூரி வளாகத்தில் இருக்க அவர் விரும்புகிறார்.

ஆனால், இந்தியாவிலுள்ள பலரை விட தான் நல்வாய்ப்பு பெற்றதாக அவர் உணர்கிறார். கொரோனா வைரஸ் தொற்று காலம் காரணமாக, ஓராண்டுக்கு மேலாக மூடியிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இது மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு இணைய வசதியோ, மடிக்கணினியோ இல்லாமல் இணையவழி படிக்க கடினமாக உள்ளது.
நீங்கள் வாழும் சமூகம் உங்களின் மனநிலையை பெரிதும் பாதிக்கும் என்று ஜோஷி கருதுகிறார். "இந்த குடிசைப்பகுதியில் பெரும்பாலான மாணவர்கள் தங்களின் படிப்பை நிறைவு செய்யமாட்டார்கள்", என்கிறார். அவர்கள் 11 வதில் படிப்பை விட்டு, பழைய கடையிலோ, தொழிலாளராகவோ பணிக்கு செல்வர்", என்கிறார்.
பள்ளி கல்வியற்ற பெற்றோர்களுக்கும், தங்கள் பிள்ளைகள் விரைவாக வேலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர் என்கிறார். ஆனால், இவரது பெற்றோர் அவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். "பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும், அவர்கள் என்னை பிடித்து வைக்கவில்லை. தங்களைப் போல் இல்லாமல் நான் படிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்", என்கிறார்.
அன்றாட சிக்கல்கள், தொற்று காலம், சிட்னியில் வகுப்பினருடன் இருக்க முடியாத நிலை என இருந்தாலும், தன் படிப்பை முடிப்பதில் உறுதியாக இருக்கிறார். அவருக்கு ஐக்கிய நாடுகளில் பணிபுரிய வேண்டும் என்ற பெருங்கனவு உள்ளது. "ஐ.நாவில் பணிபுரிவது எனக்கு பெருங்கனவு. நான் ஜெனிவாவுக்கு செல்ல விரும்புகிறேன்", என்று கூறுகிறார்.
கொரோனா பாதிப்புகள் குறைந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே போக்குவரத்து விதிமுறைகள் தளர்த்தி இருப்பதனால், பல்கலைகழகத்திற்கு நேரடியாக சென்று வகுப்புகளை கவனிக்கலாம் என்று ஜோஷி நம்பிக்கையுடன் இருக்கிறார்.
"பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தி நியூ செளத் வேல்ஸ் அரசு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் 500 சர்வதேச மாணவர்களை அந்நாட்டிற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளது. என்னையும் இந்த பட்டியலில் சேர்ந்து கொண்டால், நான் மிகவும் மகிழ்வேன்", என்று கூறுகிறார்.
"என் தந்தை என் எதிர்கால திட்டங்களைப் பற்றி எதுவும் பெரிதாக கூறமாட்டார். ஆனால், அவரது மகனுக்கு நல்ல வேலை கிடைத்து, இந்த குடிசைப்பகுதியிலிருந்து வெளியில் வந்து, மதிப்புடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்", என்கிறார் ஜோஷி.
பிற செய்திகள்:
- தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசுபாடு ஐந்து மடங்கு அதிகரிப்பு
- ஐந்து மாநிலங்களின் தேர்தல் காரணமாகதான் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டதா?
- “அரிசிக்கு தட்டுப்பாடு; மரவள்ளி கிழங்கை உண்ணுங்கள்” – இலங்கை அமைச்சரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
- இந்தியா-சீனா எல்லை விவகாரம்: ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள இந்தியா
- இலங்கையில் 1970களுக்குப் பிறகு அதிக அளவில் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிக்கும் இளைஞர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












