ஐந்து மாநிலங்களின் தேர்தல் காரணமாகதான் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டதா?

பட மூலாதாரம், Getty Images
தீபாவளி பண்டிகையின் முந்தைய நாள் மாலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமான காலகட்டத்தில் முதன் முறையாக இவ்வாறு கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையால் சிரமத்துக்குள்ளான பொதுமக்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறிது நிம்மதி கிடைத்துள்ளது.
பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீது 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. இதற்குப் பிறகு, பாஜக ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் இந்தக்குறைப்பு அமல்செய்யப்பட்டது.
மேலும், மக்களவையின் மூன்று இடங்கள் மற்றும் 29 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான இரண்டு நாட்களில் இந்த விலைக்குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து கூறப்பட்டது.
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் ஐந்து மாநிலங்களில் அதற்கான நடவடிக்கைகள் துவங்கிவிட்ட நிலையில், தேர்தல் காரணமாகவே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் மிக முக்கியமானதாகக் கூறப்படும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக தலைவர் சுனில் பராலா, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு சில நாட்களுக்கு முன்பு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
இந்த சில காரணங்களால், விலைகுறைப்பு முடிவின் பின்னணியில் ஒரு அரசியல் உத்தியை ஆய்வாளர்கள் கவனிக்கின்றனர்.
"பெட்ரோல் மற்றும் டீசல், வருவாய்க்கான வழியோடு கூடவே அரசியல் கருவியாகவும் பயன்படுத்தப்படுகிறது" என்று அரசியல் ஆய்வாளர் சஞ்சீவ் உன்ஹாலே பிபிசி மராத்தி சேவையிடம் தெரிவித்திருந்தார்.
அரசியல் நடவடிக்கையா?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பின்வரும் ஐந்து முக்கிய காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1. இந்திர பிரதமர் மோதி சாமானிய மக்கள் மீது அக்கறை கொண்டவர் என்பதைக் காட்ட.
2. மத்திய அரசு வரிகளை குறைக்கிறது ஆனால் மாநிலங்கள் குறைக்கவில்லை. இதன் மூலம் மக்களின் அனுதாபத்தை பெற முடியும்.
3 . உத்தரப்பிரதேச தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியமானது. எனவே மக்களின் நீண்டகால அதிருப்தி அதற்கு எதிராக போகக்கூடும்.
4. இடைத்தேர்தல் முடிவுகள்.
5. கொரோனா தொற்றுநோய் பிரச்சனைகளுக்கு மத்தியில் அதிகரிக்கும் விலைவாசிகள்.
"இதுவரை மக்களின் கோபத்தை மோதி அரசு கவனிக்கவில்லை. ஆனால், சாமானிய மக்களின் கோபத்தை குறைக்க வேண்டியது அவசியம் என்பதை தற்போது உணர்ந்து வருகிறது" என்கிறார் மூத்த அரசியல் ஆய்வாளர் சஞ்சய் ஆவ்டே.

பட மூலாதாரம், Getty Images
இடைத்தேர்தல் முடிவுகளின் தாக்கம்?
இடைத்தேர்தலில் பாஜக எதிர்பாராத சில தோல்விகளை சந்தத்துள்ளது. அக்கட்சிக்கு எட்டு இடங்கள் கிடைத்தன. இது முந்தைய இடங்களை விட இரண்டு அதிகம். ஆனால் இமாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் அது கடும் பின்னடைவை சந்தித்தது. கர்நாடகாவிலும் முதல்வர் பசவராஜ் பொம்மையின் மாவட்டத்திலும் கட்சி தோல்வியடைந்தது.
"இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. எனவே மத்திய அரசு இந்த முடிவுகளில் இருந்து நிச்சயமாக பாடம் கற்றுக்கொண்டது."என்று சஞ்சய் ஆவ்டே தெரிவித்தார்.
"இடைத்தேர்தலில் பாஜக பல இடங்களில் தோல்வியடைந்தது. கோட்டை கைவிட்டுப் போய்விடும் என்ற அச்சத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது,"என்று கூறுகிறார் சஞ்சீவ் உன்ஹாலே.
"இந்த இடைத்தேர்தலில் பாஜக தனது வலுவான கோட்டையை இழந்துள்ளது. எனவே அது அதிருப்தியை அடக்க முயற்சிக்கிறது,"என்று மற்றொரு அரசியல் ஆய்வாளரான ஷைலேந்திர தான்புரே கூறுகிறார்.

பட மூலாதாரம், ANI
வரவிருக்கும் சட்டப்பேரவைத்தேர்தலின் மீது கவனம்?
2022ல் உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் உத்திரபிரதேச தேர்தல் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் டெல்லியில் ஆட்சியை பிடிக்க உத்தரபிரதேசம் கையில் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 2024 பொதுத் தேர்தலின் கண்ணோட்டத்தில் கோவா மற்றும் உத்தராகண்ட் தேர்தலும் பாஜகவுக்கு முக்கியமானது.
பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தை பாஜக தேர்தலுக்குப் பயன்படுத்தும் என்பது ரகசியமான விஷயம் அல்ல என்கிறார் சஞ்சீவ் உன்ஹாலே.
மத்திய அரசுடன் இணைந்து உத்தரபிரதேசம், கோவா ஆகிய மாநிலங்கள் விலையை குறைத்துள்ளன. இந்த இரண்டு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
"உத்தரபிரதேசத்தில் தேர்தல் வெகு தொலைவில் இல்லை என்பதால் மக்களின் கோபத்தை அரசால் புறந்தள்ள முடியாது. ஏனென்றால் இந்தக்கோபத்தின் விளைவு அம்மாநிலத்தில் சேதம் ஏற்படுத்தலாம்," என்று சஞ்சய் ஆவ்டே சுட்டிக்காட்டுகிறார்.
கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகியவை அரசு சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள்.
எனவே தேர்தலுக்கு முன்பு மக்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கும் எதையும் செய்ய அரசு விரும்பவில்லை என்று சஞ்சீவ் உன்ஹலே கூறுகிறார்.
ஆனால் தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு இந்த முடிவு ஏன்? இந்த அறிவிப்பின் நேரத்தை முக்கியமானது என்று விவரிக்கும் ஷைலேந்திர தான்புரே, "மக்கள் தங்கள் கஷ்டங்களை மறந்து பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அதுபோன்ற சமயங்களில் அளிக்கப்படும் நிவாரணம் நீண்ட காலம் நினைவில் நிற்கும்,"என்று குறிப்பிடுகிறார்.
பிற செய்திகள்:
- மலையை மீட்பதற்கு கரம் கோர்த்துப் போராடும் பாமக, விசிக
- நியூட்ரினோ ஆய்வில் கிடைத்த முடிவு: இயற்பியலில் புதிய அத்தியாயம் தொடக்கம்
- வாயில் ரத்தம் வடிய விழுந்து இறந்த 10 நெருப்புக் கோழிகள்: என்ன நடக்கிறது வண்டலூரில்?
- 'முப்பாட்டன் காலத்துலகூட இவ்வளவு கிடைக்கல' - ஸ்டாலின் உதவியால் நெகிழும் நரிக்குறவர் பெண் அஸ்வினி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












