தண்டரை கிராமம்: மலையை மீட்பதற்கு கரம் கோர்த்துப் போராடும் பாமக, விசிக

விசிக - பாமக இணைந்து போராட்டம்.

பட மூலாதாரம், Handout/video grab

படக்குறிப்பு, விசிக - பாமக இணைந்து போராட்டம்.
    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

மலையின் வளத்தைக் காப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பா.ம.கவும் இணைந்து போராட்டம் நடத்திய சம்பவம், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ` எங்கள் கிராமத்தில் இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருப்பதால், அனைத்துப் போராட்டங்களிலும் பா.ம.கவினர் எங்களுக்குத் துணை நிற்கின்றனர்' என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவி ஜெயலட்சுமி. என்ன நடக்கிறது தண்டரை கிராமத்தில்?

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருக்கழுகுன்றத்தில் தண்டரை ஊராட்சி அமைந்துள்ளது. இயற்கை எழில்சூழ்ந்த இந்தப் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சிட்கோ நிறுவனம் சார்பில் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 44 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

இதற்காக வருவாய்த் துறையிடமிருந்து சிட்கோ நிறுவனத்துக்கு நிலங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. ஆனாலும், தொழிற்பேட்டைக்கான பணிகள் மந்த நிலையிலேயே நடந்து வந்தன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சிட்கோவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் உள்ள பள்ளமான பகுதிகளை சமன்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. இதற்காக வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் இருந்து மண்ணை எடுத்துள்ளனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மண் எடுக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 3ம் தேதி மீண்டும் பொக்லைன் இயந்திரத்துடன் மண் அள்ளும் பணிகள் நடந்துள்ளன. இதனையறிந்து தண்டரை ஊராட்சி மன்றத் தலைவியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவருமான ஜெயலட்சுமி அறிவழகன் தலைமையில் 250க்கும் மேற்பட்டோர் குவிந்துவிட்டனர்.

அங்கு மண் அள்ளப்படுவதைக் கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பா.ம.க தொண்டர்களும் தங்கள் கட்சிக் கொடியுடன் திரளாக குவிந்துவிட்டனர். ஒரேநேரத்தில் வி.சி.க, பா.ம.க கொடிகள் பறந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, தாசில்தார் ராஜன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

விசிக - பாமக இணைந்து போராட்டம்.

பட மூலாதாரம், video grab/handout

இதன் தொடர்ச்சியாக, மலைப் பகுதியில் சிட்கோ நிறுவனம் மண் எடுப்பதை ரத்து செய்யுமாறு தண்டரை ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்தத் தீர்மானத்தில், ` ` திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தண்டரை ஊராட்சியில் அரசு புறம்போக்கு நில புல எண்: 182/2, 183/ஏ, 183 பி/2, 183 பி/4 உள்ள இடங்களில் உள்ள மலைப் பகுதியை சிட்கோ நிறுவனமானது, மலையையும் மரம், செடி, கொடிகள் ஆகியவற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் எடுத்து வருகின்றனர். இதனால் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள ஆடு, மாடுகள், மயில், மான்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும், நிலத்தடி நீர், மின் கம்பங்கள், சாலைகள், மண் சரிவுகள் ஏற்படக் கூடிய சூழல் உள்ளது. எனவே, பொதுமக்களின் வாழ்வாதாரம் கருதி ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மண் எடுத்து வருவதை உடனே ரத்து செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தண்டரை ஊராட்சி மன்றத் தலைவி ஜெயலட்சுமியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` சிட்கோ நிறுவனம் தொழிற்பேட்டை அமைப்பதை நாங்கள் தடுக்கவில்லை. இதற்காக பள்ளத்தை நிரப்புகிறோம் என்ற பெயரில் மலையில் உள்ள மண்ணைத் தோண்டி எடுத்து வருகின்றனர். இவ்வாறு மண் அள்ளுவதற்கு கலெக்டர் கொடுத்த அனுமதியில், `மண் மேடான பகுதியில் எடுத்துக் கொள்ளலாம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், விதிகளை மீறி மலையில் இருந்து 300 லாரிகள் வரையில் மண்ணை எடுத்துவிட்டனர். இதனை எதிர்த்து ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` சிட்கோ நிறுவனத்துக்கு மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதியை வைத்துக் கொண்டு காட்டையும் கனிமவளத்தையும் அழிக்கின்றனர்.

இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தில் உள்ளவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அங்கிருந்த லாரிகளை அப்புறப்படுத்திவிட்டு, `இனி மண் எடுக்க மாட்டோம்' எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். இது அரசுக்குச் சொந்தமான இடம் என்பதால், `ஆர்.டி.ஓவை பாருங்கள்' எனக் கலெக்டர் கூறினார். அவரிடமும் மனு அளித்துள்ளோம்" என்கிறார்.

விசிக - பாமக இணைந்து போராட்டம்.

பட மூலாதாரம், Handout/ video grab

வி.சி.க நடத்திய போராட்டத்தில் பா.ம.க பங்கேற்றது எப்படி? என்றோம். `` நாங்கள் அனைவரும் ஒரே ஊரில் வசிக்கிறோம். இங்கு வன்னியர்களும் தலித் மக்களும் நிரம்பியுள்ளனர். இங்கு 560 வன்னியர் வாக்குகள் உள்ளது என்றால் அதில் 500 வாக்குகள் எங்களுக்கு விழுந்தன. அவர்களையும் அரவணைத்துச் செல்வதால் எந்தப் பிரச்னையும் இல்லை.

அடுத்ததாக, எங்களிடம் அதிகப்படியான வார்டு உறுப்பினர்கள் இருந்ததால் பா.ம.கவுக்குத் துணைத் தலைவர் பதவியை வழங்கினோம். தண்டரை மலையை மீட்கும் போராட்டத்தில் இரு தரப்பிலும் பங்கேற்றோம். அனைவரும் ஒற்றுமையாக போராடியதால் மலையைக் காப்பாற்ற முடிந்தது" என்கிறார்.

அனுமதியை மீறி சிட்கோ நிர்வாகம் மண் எடுத்ததா? என செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) ஷாகிதா பர்வீனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``அங்கு நடக்கும் விவகாரம் தொடர்பாக எங்களுக்கு மனு வந்துள்ளது. இதுதொடர்பாக தாசில்தாரிடம் ஆய்வு நடத்துமாறு கூறியுள்ளேன். அங்கு அனுமதியின்றி மண் எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பது போலத் தெரியவில்லை" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :