விஜய் சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் ரசிகர் தாக்கியது உண்மையா?

பட மூலாதாரம், @SUNTV INSTAGRAM PAGE
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசிக்காக, பெங்களூரில் இருந்து
நடிகர் விஜய் சேதுபதி பெங்களூரு விமான நிலையத்தில் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், விஜய் சேதுபதி தாக்கப்படவில்லை என்றும் அவரது உதவியாளர்தான் தாக்கப்பட்டார் என்றும் காவல் துறை தெரிவிக்கிறது.
இந்த நிகழ்வு செவ்வாய் பின்னிரவில் நடந்துள்ளது.
விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ஒரு செல்ஃபி புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ரசிகர் ஒருவர், விஜய் சேதுபதியின் உதவியாளர் ஜான்சனிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததால் அவரது கோரிக்கை மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ரசிகர் ஜான்சனைத் தாக்கியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு விஜய் சேதுபதி, அவரது உதவியாளர் மற்றும் அவரைத் தாக்கிய நபர் உள்ளிட்டோர் சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் வந்தனர்.
விஜய் சேதுபதி ஜான்சனுடன் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து வெளியே சென்றபோது மகா காந்தி என்பவர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
ஆனால் மகா காந்தி குடிபோதையில் இருந்ததால் உதவியாளர் ஜான்சன் அதை மறுத்துள்ளார்.
அந்த நபர் தாக்கியவுடன், ஜான்சன் சுதாரித்துக் கொள்ளும் முன்பே அங்கு இருந்த காவலர்கள் தாக்கி மகா காந்தியைப் பிடித்து விட்டனர்.

பட மூலாதாரம், Screenshot
"சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் காணொளியில் விஜய் சேதுபதிதான் தாக்குதலுக்கு உள்ளானார் என்பது போல தோன்றும். ஆனால் அது உண்மையல்ல. மகா காந்தி எனும் நபரால் விஜய் சேதுபதியின் உதவியாளர் ஜான்சன்தான் தாக்கப்பட்டார்," என்று பெங்களூரு வடகிழக்கு மண்டல காவல் ஆணையர் சி.கே. பாபா பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்குப் பின்பு ஜான்சன் மற்றும் மகா காந்தி ஆகிய இருவருமே விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது ஒரு சிறுமையான காரியம் என்பதை காவலர்களிடம் இருவருமே ஒப்புக்கொண்டனர், என்று பாபா தெரிவித்தார்.
மகா காந்தி தாம் செய்த தவறு என்று மன்னிப்பு கேட்டதால் அவர் மீது வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.
தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி அவர் தொகுத்து வழங்கி வரும் மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சிக்கான பிரிமியரின் படப்பிடிப்புக்கு பெங்களூரு சென்றிருந்தார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












