எடப்பாடி பழனிசாமியை சீண்டிய ராமதாஸ்: அதிமுக - பாமக கூட்டணி முறிந்தது ஏன்? - தமிழ்நாடு அரசியல்

பட மூலாதாரம், dr s ramadoss facebook page
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பா.ம.க அறிவித்துவிட்டது. `பா.ம.கவின் செயல்பாடு கூட்டணிக்கு அழகானதாக இல்லை. இது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது" என்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன். `தனித்துப் போட்டி' என பா.ம.க முடிவெடுத்தது ஏன்?
தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டன.
தி.மு.க கூட்டணியில் அந்தந்த மாவட்ட செயலாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி இடங்களைப் பங்கிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், அ.தி.மு.க அணியில் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, ஊரக உள்ளாட்சியில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது.
எடப்பாடியை சாடிய ராமதாஸ்
இதுதொடர்பாக, பா.ம.க தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ` உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.கவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுப்பதற்காக மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி, கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், ஒன்பது மாவட்டங்களின் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் இணையவழி ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், `கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம்' என நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டியிடுவது என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது' எனத் தெரிவித்துள்ளார். மேலும், இணையவழி கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ` பாட்டாளி மக்கள் கட்சியால் கூட்டணிக் கட்சிகள் பலன் அடைந்தன. அவர்களால் பா.ம.கவுக்குப் பலன் இல்லை. சொந்தக் கட்சிக்காரர்களைக்கூட கட்டுப்படுத்த முடியாத நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அவரோடு சேர்ந்து நம்மால் வெற்றி பெற முடியுமா? எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை நிரூபிக்க வேண்டும்' எனக் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட மூலாதாரம், Anbumani ramadoss twitter
பா.ம.கவின் இந்த முடிவு அ.தி.மு.க தரப்பில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில்தான் கூட்டணி எடுபடும். உள்ளாட்சித் தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கைப் பொறுத்து அமையும். எனவே, கூட்டணியை நம்பி நாங்கள் இல்லை, அவர்கள் வெளியேறியதில் வருத்தமும் இல்லை" என்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
எழுதப்படாத ஒப்பந்தமா?
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ` "தனித்துப் போட்டியிடுவது என்பது அவர்களின் தனிப்பட்ட விவகாரம். இதனால் பா.ம.கவுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். எங்கள் கட்சியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. இந்த விவகாரத்தில் எழுதப்படாத ஒப்பந்தம் போல சிலருடன் சேர்ந்து முடிவுகளை எடுத்திருக்கலாம். அது அவர்களின் விருப்பம்," எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
அதேநேரம், "இந்த விவகாரம் தொடர்பாகப் பேசும் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், `` சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ம.கவின் செயல்பாட்டில் சில மாறுதல்கள் தென்பட்டன. சட்டசபையில் கருணாநிதி படத் திறப்பு விழாவை அ.தி.மு.க புறக்கணித்தாலும் பா.ம.கவின் 5 எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர். வன்னிய மக்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக சொந்தக் கட்சியினரின் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். தேர்தல் முடிந்த பிறகு இடஒதுக்கீட்டில் தி.மு.க ஆர்வம் காட்டாமல் இருந்தது.

பின்னர், இது விவாதமானதும் 10.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை தி.மு.க அரசு பிறப்பித்தது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வன்னிய மக்கள் அடர்த்தியாக உள்ளனர். அரசாணையின் மூலம் அதற்கான பலன்களை தி.மு.கவும் பா.ம.கவும் அறுவடை செய்ய நினைக்கிறது. வரும் நாள்களில் தி.மு.கவோடு இணக்கமாக செல்லவும் பா.ம.க முடிவு செய்துள்ளது. அதன் ஒருகட்டமாகத்தான் தனித்துப் போட்டி என்ற முடிவை அறிவித்துள்ளனர்" என்கிறார்.
விமர்சனம் செய்வது சரியல்ல
``பா.ம.கவின் முடிவை எப்படி எடுத்துக் கொள்வது?" என அ.தி.மு.கவின் மாநில செய்தித் தொடர்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க என்கின்ற பொது எதிரியை வீழ்த்தும் நோக்கில் நாங்கள் நகர்ந்தோம். ஆனால், பொது எதிரியை வீழ்த்த முடியவில்லை. அவர்களை வீழ்த்தும் வரையில் இந்தக் கூட்டணி தொடர வேண்டும் என்கின்ற கருத்தை பா.ம.க ஏற்க வேண்டும். தனித்துப் போட்டி என்ற கோரிக்கையை அவர்கள் மறுபரிசீனை செய்ய வேண்டும் என்பதுதான் அ.தி.மு.கவின் கருத்து" என்கிறார்.
``சொந்தக் கட்சிக்காரர்களையே எடப்பாடியால் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறார்களே?" என்றோம். `` இந்த நேரத்தில் இதுபோன்ற கேள்விகளை எழுப்புவதும் கைவிட்டுப் போவதும் கூட்டணிக்கு அழகானதாக இல்லை. இது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது. பொது எதிரியை வீழ்த்த ஒற்றுமையாக நிற்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களில் பெரும்பான்மையாக வன்னியர் சமூக மக்கள் உள்ளனர். இந்தத் தேர்தலில் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்" என்கிறார்.
``கூட்டணியால் பா.ம.கவுக்கு லாபம் இல்லை என்கிறாரே ராமதாஸ்?" என்றோம். ``இது எல்லா கட்சிகளும் சொல்லக் கூடிய ஒன்றுதான். சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை ஏற்றது. 36 சதவிகித வாக்கு வங்கியை வைத்துள்ள கட்சியாக அ.தி.மு.க உள்ளது. அதன் தலைமையை ஏற்றுத்தான் கூட்டணிக்கு வருகிறார்கள். ஒரு இடத்தில் கூடும். ஒரு இடத்தில் குறையும். அதை வைத்தெல்லாம் விமர்சனம் செய்யக் கூடாது" என்கிறார்.

பட மூலாதாரம், CMO Tamilnadu
கசப்பான அனுபவங்கள் என்னென்ன?
``தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்ததன் பின்னணி என்ன?" என பா.ம.கவின் பிரசாரக் குழு மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எதிரொலி மணியனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் எங்களுக்குப் போட்டியாக அ.தி.மு.க வேட்பாளர்களை நிறுத்தியது. நாங்கள் தனித்துப் போட்டியிட்டிருந்தாலே திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 சேர்மன் பதவிகளைப் பிடித்திருப்போம். நாங்கள் கேட்ட இடங்களையும் அவர்கள் கொடுக்கவில்லை, பல இடங்களில் வேட்பாளர்களை வாபஸ் பெறவில்லை. இதுதான் பிரதான காரணம்" என்கிறார்.
தொடர்ந்து பேசியவர், `` அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் இரட்டை இலையும் மாம்பழமும் எதிர் எதிராக போட்டியிட்டது. அதுவே, தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்தபோது எங்கள் மாவட்டத்தில் உள்ள 34 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 8 இடங்களைப் பெற்றோம். அதில் 7 பதவிகளை வென்றோம். இவர்களிடம் 5 இடங்களைக்கூட வாங்க முடியவில்லை. அவ்வாறு கொடுக்கப்பட்ட இடத்திலும் போட்டிக்கு ஆள்களை நிறுத்தினர். இதற்குத் தலைவர்கள் மீது குறை சொல்ல முடியாது. அனைத்து இடங்களிலும் தாங்கள் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்" என்கிறார்.
மீண்டும் மாற்றம், முன்னேற்றம்

பட மூலாதாரம், Dr ANBUMANI RAMADOSS twitter handle
மேலும், `` இந்தக் குழப்பம் தி.மு.கவிலும் உள்ளது. ஒரே இடத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கு பலர் போட்டியிடும்போது சிக்கல்கள் வருகின்றன. பிறகு எதற்காக கூட்டணி? எனவே, உள்ளாட்சித் தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிடலாம் என பொறுப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தனர். மற்றபடி, தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க மீது குறை சொல்ல விரும்பவில்லை" என்கிறார்.
``இதன்பின்னணியில் தி.மு.க இருப்பதாகக் கூறுகிறார்களே?" என்றோம். `` அப்படியெல்லாம் எதுவும் இல்லை. 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை ஒருவர் கொடுத்தார், இன்னொருவர் பாதுகாத்தார். அதில் இரண்டு பேருக்குமே அதில் கிரடிட் உள்ளது. சீட் விவகாரத்தில் ஒத்து வராததால்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தான் விலகலுக்குக் காரணம்.
வடமாவட்டங்களில் நாங்கள் வலுவாக உள்ள இடங்களில் போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க விரும்புகிறோம். கூட்டணிக்குச் சென்று எங்களின் செல்வாக்கை இழக்க விரும்பவில்லை. அவர்களோடு இருந்தால் சேர்மன் பதவிகளைக் கேட்க முடியாது. தவிர, தனியார் தொலைக்காட்சிக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த பேட்டியில், மாற்றம், முன்னேற்றம் என்ற இலக்கை நோக்கி நகர்வதாகக் குறிப்பிட்டார். அதன் ஓர் அங்கமாகவே தனித்துப் போட்டி என்ற முடிவை நிர்வாகிகள் எடுத்துள்ளனர்" என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












