'நார்காட்டிக்ஸ் ஜிகாத்' - கேரளாவில் இஸ்லாமியர்களை தாக்கி பேசிய கிறிஸ்தவ பிஷப், பாஜக ஆதரவு

பட மூலாதாரம், Ani news agency
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக
இஸ்லாமியர்களை அவதூறு செய்யப் பயன்படுத்தப்படும் 'லவ் ஜிகாத்' எனும் பதத்தைப் போல 'நார்காட்டிக்ஸ் ஜிகாத்' (போதைப்பொருள் ஜிகாத்) என்ற பதத்தை பயன்படுத்தி முஸ்லிம்களை விமர்சித்த கேரள பிஷப் ஒருவர் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் ஜிகாதிகளால் விரிக்கப்படும் இத்தகைய வலைகளில் சிக்காமல் தப்பிக்க, கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ள மிகவும் செல்வாக்குமிக்க மறை மாவட்டங்களில் ஒன்றான பாலை மறைமாவட்டத்தின் சீரோ - மலபார் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த பிஷப் மார் ஜோசஃப் கல்லாரங்கட், "முஸ்லிம் அல்லாத இளைஞர்களை அழிப்பதற்காக ஜிகாதிகள் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் இயங்குகின்றனர். குறிப்பாக ஐஸ் கிரீம் பார்லர்கள் மற்றும் உணவகங்களில் இருக்கின்றனர்," என்று சமீபத்திய சொற்பொழிவு ஒன்றில் கூறி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார்.
இவரது கருத்தை கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமல்லாது அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த கருத்து பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வீ.டி. ஜெகதீசன் பிஷப் ஜோசஃப் எல்லையை தாண்டி விட்டார் என்றும் விமர்சித்துள்ளனர். ஆனால் பாரதிய ஜனதா கட்சி அவரது கருத்தை ஆதரித்துள்ளது.
"எல்லாவற்றுக்கும் மேலாக போப் பிரான்சிஸ் முற்றிலும் வேறான ஒன்றைக் கூறுகிறார். சகோதர உணர்வுடன் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும் என்று அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இங்கு கண்டனத்திற்குரிய ஒரு மன நிலையைப் பார்க்க முடிகிறது. பிஷப் ஜோசஃப் ஏன் மக்களிடையே வெறுப்பு மற்றும் விரோத உணர்வை தூண்டுகிறார் என்று தெரியவில்லை என்கிறார் 'லைட் அன்ட் ட்ரூத்' எனும் கத்தோலிக்க அச்சு இதழ் ஒன்றின் ஆசிரியர் ஃபாதர் பால் தெலகத்.
சமூகங்களுக்கிடையே வெறுப்பை உண்டாக்குவதாகவும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசியதாகவும் கோட்டையம் தாலுக்கா மகால்லு முஸ்லிம் கமிட்டி என்னும் அமைப்பு பிஷப் ஜோசஃப் பேச்சுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
இந்த புகார் தொடர்பாக நாங்கள் சட்ட ஆலோசனைகளை கேட்டுள்ளோம் என்று கோட்டையம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டீ. சில்பா பிபிசி இந்தியிடம் தெரிவித்துள்ளார்.
பிஷப் ஜோசஃப் என்ன பேசினார்?
குருவிளங்காடு எனும் இடத்தில் சமய சொற்பொழிவு ஒன்றை ஆற்றிய பிஷப் ஜோசஃப் கல்லாரங்கட் "உலகின் வேறு பகுதிகளைப் போலவே கேரளாவில் உள்ள சில முஸ்லிம்களும் சமூகங்களிடையே விரோதத்தை வளர்க்க வேண்டும் என்றும் வெறுப்புணர்வை விதைக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்; இஸ்லாம் மதத்தை பரப்புவதற்காக ஜிகாதிகள் வெவ்வேறு வழிகளை கையாளுகின்றனர். அதற்காகத்தான் இஸ்லாமியர்கள் அல்லாத பெண்களை அவர்கள் குறி வைக்கிறார்கள்," என்று பேசினார்.
நிமிஷா மற்றும் சோனியா செபஸ்டியன் ஆகிய இரண்டு பெண்கள் இஸ்லாமிய ஆண்கள் உடன் காதல் திருமணம் செய்துகொண்ட பின்னர், அந்த ஆண்கள் இருவரும் கேரளாவில் இருந்து வெளியேறி ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக சென்றதையும் அவர் தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், V. MUTHURAMAN/INDIAPICTURES/UNIVERSAL IMAGES GROUP
கேரளாவில் அதிகரிக்கும் போதை பொருள்கள் மற்றும் வழக்குகள் மற்றும் அவை பயன்படுத்தப்படும் கொண்டாட்டங்கள் (பார்ட்டிகள்) எண்ணிக்கை அதிகரித்து வருவது இத்தகைய நிகழ்ச்சிகளில் "பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த தெளிவான படத்தை காட்டுகிறது" என்று அவர் கூறியிருந்தார்.
ஹலால் உணவைப் பரவலாக்குவதன் மூலம் பிற மதங்களை இழிவு செய்வதற்கான முயற்சிகளும் நடக்கின்றன என்று பிஷப் பேசினார்.
இத்தகைய பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி திருச்சபை சார்பில் சுற்றறிக்கைகள் அனுப்பப்படும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் "யாரும் இதை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை" என்றும் அவர் பேசியுள்ளார்.
ஆன்மிக விழுமியங்களுடன் வளரவேண்டும் என்பதற்காக இளம் பெண்கள் மதம் சார்ந்த சூழல்களில் வளர்க்கப்படுகிறார்கள் என்பதை திருச்சபை மீது நம்பிக்கை உடையவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அங்கு கூடி இருந்தவர்களிடம் பிஷப் ஜோசஃப் வலியுறுத்தினார்.
பிஷப் ஜோசஃப் கூறிய கருத்து ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
இதுவரை கேரளாவிலுள்ள மதத் தலைவர்கள் யாரும் பிற மதங்களின் மீது இவ்வாறு குற்றம் சாட்டிப் பேசியதில்லை.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிஷப் ஜோசஃப் "பெரும் செல்வாக்கு கொண்ட மதச் சான்றோர்" என்று இவரைப் பற்றி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவி வாழும் கிறிஸ்தவ சமூகங்களிடையே பிஷப் ஜோசப்புக்கு பெரும் செல்வாக்கு உள்ளது.கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலை நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு உள்ள இந்த மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான கல்வி நிறுவனங்களும் உள்ளன.
பத்தனம்திட்டா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களோடு சேர்த்து இந்த பகுதிகளில் வாழும் கிறிஸ்தவ சமூகத்தினரும் மிகப்பெரிய வாக்கு வங்கியாக இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இந்த வாக்கு வங்கியை கைப்பற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே மும்முரம் காட்டி வருகின்றன.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மலங்கரா திருச்சபையின் இரண்டு பிரிவினர் இடையே சில நூற்றாண்டு காலமாக நிலவும் பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கான முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டது. கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கியை பெறுவதே இதன் நோக்கமாக இருந்தது. எனினும் அது பலன் அளிக்கவில்லை என்பது வேறு விஷயம்.
ஆனால் தேர்தலுக்கு முந்தைய நேரத்திலிருந்தே இஸ்லாமியர்களுக்கு எதிரான பரப்புரைகள் சமூக ஊடகங்களில் நிகழ்ந்தன. அரசியல் காரணங்களுக்காக இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே பிரச்னையை உண்டாக்குவது அதன் நோக்கமாக இருந்தது.
கேரளாவில் கிறிஸ்தவர்கள் 18 சதவீதம் இஸ்லாமியர்கள் 26 சதவீதம் என இந்த இரண்டு சமூகத்தினரும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக சுமார் 44 சதவீத வாக்கு வங்கியைத் தங்கள் வசம் வைத்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பாரதிய ஜனதா கட்சியைப் போல வாக்குகளைப் பெற பெருமுயற்சிகளில் இறங்கவில்லை என்றாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் இந்த இரண்டு மதத்தினரின் வாக்குகளையும் பெறுவதற்கு தீவிரம் காட்டியது.
"பாஜக ஆர்எஸ்எஸ் திட்டத்தின் நீட்சியாகவே இவரது கருத்துகள் உள்ளன. ஒரு சமூகம் மட்டுமே போதைப்பொருள் தொழிலில் ஈடுபட்டு உள்ளது என்று எவ்வாறு கூற முடியும்? இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? அவர் நிச்சயமாக ஆதாரங்களை வெளியிட வேண்டும்," என்று சீரோ-மலபார் திருச்சபையில் வெளிப்படைத்தன்மை கோரி பரப்புரை மேற்கொண்டு வரும் ஃபாதர் அகஸ்டின் பட்டொளி கூறுகிறார்.
"ஒரு குற்ற நடவடிக்கையை குற்ற நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டும். அதன் பின்னால் மதத்தை கொண்டு சென்றீர்கள் என்றால் அது வெறுப்புணர்வை பரப்புவதாகப் பொருள். இது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஒரு கிறிஸ்தவராக நாங்கள் காட்டிக்கொள்ள விரும்புவது இது அல்ல. இது மிக மிக தவறானது. கேரளாவில் உள்ள கிறிஸ்தவ மதம் இதை செய்வதில்லை," என்று ஃபாதர் பால் தெலகத் கூறுகிறார்.
தொடர்புகொள்வதற்கான பல்வேறு முயற்சிகளுக்கு பின்னும் பிஷப் ஜோசஃப் கல்லாரங்கட் கருத்தை பிபிசியால் பெறமுடியவில்லை. கேரள கத்தோலிக்க பிஷப்புகள் கவுன்சிலும் தற்போதைக்கு இந்த விவகாரம் குறித்து கருத்து எதையும் வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.
கேரள அரசியல்வாதிகள் இந்த பிரச்னையில் எவ்வாறு எதிர்வினை ஆற்றினர்?

பட மூலாதாரம், @surendranbjp twitter handle
ஃபாதர் அகஸ்டின் பட்டொளி போன்ற கருத்தையே முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். "போதைப்பொருள் பயன்பாடு என்பது ஒரு சமூகத்தை மட்டும் பாதிக்கும் விவகாரம் அல்ல. இது நம் அனைவரையும் பாதிக்கும் விஷயம். போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் அதேவேளையில் இதற்கு மதச்சாயம் பூசுவது சரியல்ல. போதைபொருள் பயன்பாட்டுக்கு இருக்கும் ஒரே நிறம் சமூக விரோதிகளின் நிறம்," என்று பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
மதம் மற்றும் ஆன்மிக தலைவர்கள் கேரளாவில் நிலவும் பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் அமைதியான சூழலை அழிப்பதை போன்ற கருத்துகளை வெளியிடக்கூடாது. குற்றத்திற்கு சாதி, மதம், பாலினம் என எதுவுமே கிடையாது. சேறு பூசுவதன் மூலம் கேரளாவில் உரசலை தூண்ட வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் தெரிவித்துள்ளார்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் வேறு மாதிரியான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். "பிஷப் இவ்வாறு கூறுகிறார் என்றால் அது அவரது அனுபவத்தில் இருந்து கூறியுள்ளார். நார்காட்டிக்ஸ் ஜிஹாத் குறித்து அவர் தெரிவித்த கருத்துகளை விசாரிக்க வேண்டும் இது ஒன்றும் புதிதல்ல. இதற்காக பிஷப்பை யாரும் விமர்சிக்க கூடாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மூலம் தீவிரவாத அமைப்புகள் பணம் ஈட்டுகின்றனர். இதுதான் உண்மை என்றும் சுரேந்திரன் கூறியுள்ளார்.
"இஸ்லாமிய சமுதாயத்தினர் பெயரைக்கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு முஸ்லிம்கள் பொறுப்பேற்க முடியாது. மூர்க்கத்தனமான கருத்துகளை பலரும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் மதத் தலைவர் ஒருவரே அவ்வாறு கூறுவதை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கேரளாவின் சமூக அமைப்பை பாதிக்கும் விதத்தில் இது அமைந்துள்ளது," என்று சமஸ்த கேரளா சுன்னி மாணவர் சம்மெளனம் அமைப்பின் பொதுச் செயலாளர் சத்தார் பந்தலூர் தெரிவித்துள்ளார்.
பிஷப் ஜோசஃப் கூறிய மதரீதியான கருத்துகள் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும்?
'நார்காட்டிக்ஸ் ஜிகாத்' என பிஷப் ஜோசஃப் புதிதாக உருவாக்கியுள்ள பதம், அனைத்து மதத்தினருக்கும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல எதிர்வினைகளை கொண்டிருக்கும், என்று அரசியல் பகுப்பாய்வாளர் கே. ஜே. ஜேகப் தெரிவிக்கிறார்.
"பல்வேறு காரணங்களுக்காக ஆர்எஸ்எஸ் - பிஜேபியை திருப்திபடுத்த வேண்டும் எனும் நோக்கில் இந்தக் கருத்து கூறப்பட்டதாகவே தெரிகிறது. இது அரசியல் கருத்து மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ்ஸின் விமர்சனங்களுக்கு இந்த கருத்து மேலும் வலுவூட்டுகிறது. கேரளாவில் உள்ள இந்து மதத்தினரை ஒன்றுபடுத்தும் அவர்களது பிரசாரம் வெற்றி பெறவில்லை என்பதையும் சமீபத்திய சட்டமன்ற தேர்தல்களில் அவர்களது வாக்கு வங்கி மேலும் மூன்று சதவீதம் குறைந்தது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது," என்று பிபிசியிடம் ஜேகப் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், EPA
இந்து சமுதாயத்தினரிடையே மேலும் மதவாதத்தை தூண்டும் ஒரு வினையூக்கியாகவே இந்த கருத்து இருக்கும். 'கிறிஸ்தவர்களும் முஸ்லிம்கள் இப்படித்தான் பேசுகிறார்கள்' என்று கூறி இஸ்லாமியர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள் என்று இந்துக்களிடம் அவர்களால் சொல்ல முடியும் என்கிறார் ஜேக்கப்.
ஆனால் கேரளாவில் உள்ள இஸ்லாமிய மதத்தினர் எதிர்கொள்ள உள்ள மிகப்பெரிய பிரச்னையையும் குறிப்பிடுகிறார்.
"பொதுவாக கேரளாவில் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மதச்சார்பற்ற வாழ்வையே பின்பற்றுகிறார்கள். இங்குள்ள சமூகத்தில் மதவாதம் என்ற ஒன்று கிடையாது. ஆனால் சமீப காலங்களாக மத அடிப்படைவாதிகள் தங்கள் சொந்த நலன்களுக்காக மதவாதத்தை விதைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.
கொச்சியில் இருந்து மங்களூரு வரை பெட்ரோநெட் எல்பிஜி நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிராக நடந்த போராட்டங்களின் போது 'இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மலப்புரம் மாவட்டத்தை அந்த எரிவாயு குழாய் கடந்து செல்வதை இஸ்லாமியவாதிகள் தடுக்க முயற்சி செய்தனர்' என்று பகிரப்பட்ட பரப்புரையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"தொடக்கத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இந்த திட்டத்திற்கு எதிராக இல்லை. ஆனால் எஸ்டிபிஐ இதற்கு மத வர்ணம் பூச நினைத்தது. பிஷப் கூறியுள்ள இத்தகைய கருத்துகள் இஸ்லாமிய சமூகத்தினரிடையே உள்ள மத அடிப்படைவாதிகள் மதச்சார்பற்ற இஸ்லாமியர்களை பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும்," என்று அவர் கூறுகிறார்.
பிஷப் பேசிய கருத்துகளை கருத்தில் கொண்டு காவல்துறை தாமாகவே முதல் தகவல் அறிக்கை ஒன்றையும் பதிவு செய்திருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
சட்ட நடவடிக்கை எடுக்க குற்றங்கள் குறித்த தகவல் கிடைத்தால் காவல்துறை தாமாகவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று லலிதாகுமாரி வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் என்பது நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்க தக்க ஒரு குற்றமே. எனவே பிஷப்பிடம் இது குறித்து என்ன தகவல் உள்ளது என்று கேட்டு காவல்துறையினர் சட்டரீதியான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும், என்று அவர் கூறுகிறார்.
"பிஷப் என்ன கூறினார் எந்த சூழ்நிலையில் அவ்வாறு பேசினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பிரிவினை உண்டாக்கக்கூடிய எதையும் பேசக் கூடாது என்பதில் அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும்," என்று முதலமைச்சர் பினராய் விஜயன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இப்பொழுது முறைப்படி புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் காவல்துறை பிஷப் ஜோசஃப் கல்லாரங்கட்டுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கும் அது இத்தகைய பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது இனிமேல்தான் தெரியவரும்.
பிற செய்திகள்:
- தாலிபனுக்கு உதவி செய்ய ஆப்கானிஸ்தானுக்கு ட்ரோன் அனுப்பியதா பாகிஸ்தான்? உண்மை என்ன?
- இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பாலத்தீன கைதிகளில் நால்வர் பிடிபட்டனர்
- தமிழ்நாடு, குஜராத்தில் இருந்து வெளியேறும் ஃபோர்டு - அரசு என்ன செய்யப் போகிறது?
- நரேந்திர மோதி, அமித் ஷா வலதுகரமான விஜய் ரூபானி குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகியது ஏன்?
- ஜாக் மா போன்ற தொழிலதிபர்களுக்கு பாடம் புகட்ட விரும்பும் சீனா: காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












