தமிழக புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி - உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர்

ஆர்.என்.ரவி

பட மூலாதாரம், R.N. RAVI

படக்குறிப்பு, ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உளவுத்துறை முன்னாள் உயரதிகாரியான ஆர்.என். ரவி, காவல் பணியிலும் நிர்வாகப் பணியிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவராக அறியப்படுகிறார். தற்போது அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

பிகாரில் உள்ள பாட்னாவில் பிறந்த ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி, 1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்ததும், சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.

அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார், பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.

மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார். இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

அந்த பணியில் இருந்தபோது, இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மூளையாக செயல்பட்டார். உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக இருந்தபோது, ஐ.பி இயக்குநராக இருந்தவர் அஜித் தோவால். அவர்தான் தற்போது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். அந்த வகையில் தோவாலுக்கும் ஆர்.என். ரவிக்கும் நெருக்கமான புரிந்துணர்வு உள்ளது.

அந்த பணியின்போது தெற்காசியாவில் மனிதர்களின் பூர்விக குடியேற்றத்தின் இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்றார். எல்லையோர மக்களின் அரசியல், சமூகவியலில் ஏற்படும் தாக்கங்களை அவர் காவல் நோக்கில் ஆராய்ந்து அரசு பல திட்டங்களை வகுக்க காரணமாக இருந்தார்.

ஆர்.என்.ரவி

பட மூலாதாரம், R.N. RAVI

இனக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பணியில் அவர் முக்கியப்பங்காற்றினார்.

2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் தேசிய நாளிதழ்களில் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளை தமது அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தார்.

பின்னர் அவர் பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்,

அங்கு புலனாய்வு சமூகத்தின் தலைவராகவும், நாட்டின் உளவுத்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வழிகாட்டியாக செயல்பட்டார்.

2014ஆம் ஆண்டில் மத்தியில் நரேந்திர மோதி தலைமையில் புதிய அரசு அமைந்த சில மாதங்களில், அதே ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, நாகாலாந்தில் நாகா சமாதான பேச்சுவார்த்தைக்கான மையத்தின் மத்தியஸ்தராக ரவி நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் அவர் தமிழக ஆளுநராக தற்போது இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

நாகா பேச்சுவார்த்தையும் ரவியின் நடவடிக்கைகளும்

நாகா குழு

பட மூலாதாரம், MHA

படக்குறிப்பு, 2015இல் நாகா என்எஸ்சிஎன் (ஐஎம்) குழு தலைவர்களுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டும் உடன்பாட்டில் கையெழுத்திட்ட தலைவர்களுடன் இந்திய பிரதமர் மோதி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நாகாலாந்து கிளர்ச்சிக்குழுவான என்எஸ்சிஎஎன் (ஐஎம்) தலைவர்கள், மாநிலத்தில் நீடித்து வரும் கிளர்ச்சியாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வந்தனர். அந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், 2014இல் இந்திய அரசின் சார்பில் நாகா கிளர்ச்சியாளர்களுடன் பேச்சு நடத்தும் அதிகாரம் மிக்கவராகவும் மத்தியஸ்தராகவும் என்,ஆர். ரவி நியமிக்கப்பட்டார்.

நாகாலாந்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் என்எஸ்சிஎன் (ஐஎம்) குழுவுடன் 1997இல் இந்திய அரசு சண்டை நிறுத்தம் செய்யும் உடன்பாட்டை எட்டியது. அதைத்தொடர்ந்து அந்த குழுவுடன் சுமார் 90 சுற்று பேச்சுவார்த்தைகளை இந்திய அரசு நடத்தியிருக்கிறது.

கடந்த 24 ஆண்டுகளாக இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதெல்லாம் அதில் என்எஸ்சிஎன் (ஐஎம்) தலைவர் ஐசாக் சிஷி ஸ்வு, பொதுச்செயலாளர் டி. முய்வா ஆகியோர் பங்கெடுத்தனர்.

இந்த சமயத்தில்தான் வடகிழக்கு மாநிலங்களில் உளவுப்பிரிவில் அனுபவம் பெற்ற ஆர்.என். ரவியை நாகாலாந்து ஆளுநராக மத்திய அரசு 2019இல் நியமித்தது. அதன் பிறகும் நாகா குழுக்களுடன் பேசும் அரசின் பிரதிநிதியாக அவர் பணியைத் தொடர்ந்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உடன்பட என்எஸ்சிஎன் (ஐஎம்) கையெழுத்திட்டிருந்தாலும், அதில் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் இறுதி செய்யப்படாமல் இழுபறியாக உள்ளன. இதுவரை அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்படும் நடவடிக்கையில் என்எஸ்சிஎன் (என்கே), என்எஸ்சிஎன் (ஆர்), என்எஸ்சிஎன் (கே) பிரிவு கிளர்ச்சிக்குழுக்கள் கையெழுத்திட்டுள்ளன.

ஆனால், மேலும் சில குழுக்களும் நாகாலாந்தில் உள்ளதால் அவற்றை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரும் முயற்சியில் தொய்வு காணப்படுகிறது. அதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த என்எஸ்சிஎன் (ஐஎம்) குழு, இந்திய அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதிநிதி பொறுப்பில் இருந்து ரவியை அகற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு குரல் கொடுத்தது. நாகாலாந்து அமைதிக்கு அரசியல் தீர்வு கிடைக்க தடங்கலாக ரவி இருப்பதாக அந்த குழுவின் தலைவர்கள் வெளிப்படையாக குற்றம்சாட்டினர்.

ஆனால், நாகாலாந்து தேசிய மக்கள் குழுவில் (என்என்பிஜி) அங்கம் வகிக்கும் ஏழு உள்ளூர் அமைப்புகள் மற்றும் 14 நாகா பழங்குடிகள் அங்கம் வகிக்கும் நாகா பழங்குடி ஹோஹோஸ் குழு (ஏஎன்டிஎச்என்), ஆர்.என்.ரவியை நீக்க ஆட்சேபம் தெரிவித்தன.

நாகா

பட மூலாதாரம், NSUD

படக்குறிப்பு, நாகாலாந்தில் பழங்குடிகளுக்கு இடையே உள்ள வேற்றுமைகளை களைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஒரு பிரிவு பழங்குடி மக்கள் டெல்லியில் கடந்த ஆண்டு பேரணி நடத்தினர்.

கடந்த வாரம் நாகா விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் பங்கெடுத்த கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகள், நாகாலாந்தில் அமைதி திரும்ப ஆக்கபூர்வ நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இருந்தன.

அந்த கூட்டத்தில் பேசிய மற்ற கட்சியினர் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள், நாகாலாந்து ஆளுநராகவும் இந்திய அரசின் பிரதிநிதியாகவும் உள்ள ஆர்.என். ரவிக்கு பதிலாக வேறு ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில், நாகாலாந்து தேசிய கவுன்சில் காப்லாங் (என்எஸ்சிஎன்-கே) பிரிவின் அங்கமான நிகி சுமி பிரிவைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் மத்திய அரசு டெல்லியில் சண்டை நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டது. அதன்படி, அந்த குழுவைச் சேர்ந்த 200க்கும் அதிகமான ஆயுதக்குழுவினர் அமைதிப்பேச்சுவார்த்தை நடவடிக்கையில் பங்கெடுக்க உடன்பட்டனர். இந்த உடன்பாடு செப்டம்பர் 8 முதல் ஓராண்டுக்கு தொடரும் என்று மத்திய உள்துறை அறிவித்தது.

இந்த உடன்பாடு கையெழுத்தான மறுதினமே, ஆர்.என். ரவியை நாகாலாந்து மாநில ஆளுநர் பதவியில் இருந்து இடமாற்றம் செய்து தமிழ்நாடு ஆளுநராக மத்திய அரசு நியமித்திருக்கிறது. இதன் மூலம், நாகாலாந்து கிளர்ச்சிக்குழுக்களுடன் பேச்சு நடத்த புதிய பிரதிநிதியை மத்திய அரசு நியமிக்குமா அல்லது அந்தப் பொறுப்பில் ரவி தொடருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :